ஐசிசி தடையால் இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் என்ன ஆகும்?

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை தடை செய்ய சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) கொண்டு வந்த தீர்மானத்தை அடுத்து, அந்நாட்டின் அரசியலிலும் அது தாக்கத்தை செலுத்தியுள்ளது.

பிரதேச அரசியல்வாதிகள் முதல் நாடாளுமன்றம் வரை தற்போது ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியம் குறித்தே அதிகம் பேசப்பட்டு வருகின்றது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்குள் அரசியல் தலையீடு காணப்படுவதாகத் தெரிவித்து, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை தடை செய்ய சர்வதேச கிரிக்கெட் பேரவை கடந்த 10ஆம் தேதி நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்தத் தீர்மானத்தைத் தடை செய்ய சர்வதேச கிரிக்கெட் பேரவை எடுத்த தீர்மானத்தை, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிறைவேற்றுக் குழு அங்கீகரித்திருந்தது.

ஆமதாபாத்தில் கடந்த 21ஆம் தேதி இடம்பெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சிறப்புக் கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது.

  • இலங்கை கிரிக்கெட் தடை
ஐசிசி கூட்டத்தில் என்ன பேசினார்கள்?

கிரிக்கெட் விளையாட்டில் அரசியல் தலையீடுகளை இல்லாது செய்யும் நோக்கிலேயே ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை விதித்ததாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.

ஆமதாபாத்தில் கடந்த 21ஆம் தேதி இடம்பெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவை கூட்டத்தில் ஷம்மி சில்வா கலந்துகொண்டிருந்த நிலையில், அந்தக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் குறித்து தெளிவூட்டினார்.

அவர் கூறுகையில், ”முழுமையாக அரசியல் தலையீடு காணப்படுவதாக ஐசிசி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இலங்கை பிரச்னை குறித்து 45 நிமிடங்கள் வரை பேசப்பட்டது. இலங்கையில் கிரிக்கெட் மாத்திரம் அல்ல. இலங்கையில் ரக்பியும் தடை செய்யப்பட்டுள்ளதாக கூட்டத்தில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

அதேபோன்று, இலங்கை கால்பந்தாட்டமும் தடை செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்த சட்ட வல்லுநர் ஒருவர் தெரிவித்தார். எனவே இலங்கையில் மூன்று விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது,” என அவர் தெரிவித்தார்.

மேலும், “இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சருடன் கலந்துரையாடியதாக அங்கிருந்த ஒருவர் தெரிவித்தார். ஆனால், அந்த சந்திப்பில் தமக்கு ஒன்றும் புரியவில்லை என்ற கருத்துகளும் அங்கு கூறப்பட்டது. இதற்கு முன்னர் இவ்வாறே ஜிம்பாப்வே அணிக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இவ்வாறான கடுமையான தீர்மானங்களை எடுக்காத பட்சத்தில், ஏனைய நாடுகளிலும் இவ்வாறான நிலைமை ஏற்படக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது,” என அவர் கூறினார்.

இதேவேளை, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி எதிர்வரும் ஆண்டு இலங்கையில் நடைபெறவிருந்த நிலையில், அந்தப் போட்டிகளை தென்னாபிரிக்காவில் நடத்த சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.

”கிரிக்கெட் தடை செய்யப்பட்ட நாடொன்றில் போட்டிகளை நடத்த முடியாது என ஐசிசி அதற்குக் காரணம் தெரிவித்தது,” என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஷம்மி சில்வா குறிப்பிட்டார்.

  • இலங்கை கிரிக்கெட்
மேலும், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு வழங்கப்படும் நிதியைத் தடை செய்ய முதலில் சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்திருந்த பின்னணியில், தான் விடுத்த கோரிக்கையை அடுத்து கடும் கட்டுப்பாட்டுடன் நிதியை வழங்கத் தீர்மானித்ததாகவும் அவர் கூறினார்.

அத்துடன், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், கிரிக்கெட் அணி போட்டிகளில் விளையாட சர்வதேச கிரிக்கெட் பேரவை அனுமதி வழங்கியுள்ளது.

எனினும், கிரிக்கெட் போட்டிகள் குறித்து தாம் அவதானம் செலுத்தியுள்ளதாகவும், எதிர்காலத்தில் நிலைமை பழைய நிலைக்குத் திரும்பாத பட்சத்தில், அதற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அதிகாரிகள் கூறியதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா மேலும் கூறினார்.

இலங்கையில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளை நடத்த அனுமதிக்காமையால், நாட்டிற்கு 833 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் கணக்காய்வாளர் நாயகத்தால் நடத்தப்பட்ட கணக்காய்வு அறிக்கையை, ஐசிசி கணக்காய்வாளர்கள் ஆராய்ந்து, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் எந்தவொரு ஊழலும் இடம் பெறவில்லை என்பதை உறுதிப்படுத்தியதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

மேலும், அரசியல் தலையீடுகள் காணப்படும் பட்சத்தில், இடைக்கால சபையொன்றை ஏற்படுத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை இடமளிக்காது என அவர் கூறுகின்றார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு நியமிக்கப்பட்டுள்ள இடைக்கால சபையை நிறுத்தும் பட்சத்தில், மீண்டும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கான அங்கீகாரம் கிடைக்கும் என நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்ட நிதி தொகை, அவ்வாறே கிடைக்கும் எனவும், அடுத்த ஆண்டுக்கான நிதியிலேயே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

  • இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் என்ன?
இலங்கை கிரிக்கெட் தடை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கை கிரிக்கெட் அணியின் எதிர்காலம் குறித்து தாங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவிக்கின்றது.

ஐசிசி எவ்வாறான தீர்மானத்தை எடுக்கும் என்பது குறித்து இதுவரை அவதானம் செலுத்தியிருந்ததாகவும், தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளமையால் அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தாம் எடுக்கவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியடத்தில் ஏற்படுத்தப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் ஊடகங்களின் ஊடாக மக்களுக்கு தெளிவூட்டப்படும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

நீதிமன்ற நடவடிக்கை

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவால் நியமிக்கப்பட்ட இடைக்கால சபையை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்குமாறு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அந்த வழக்கு மீதான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுண ரணதுங்க தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவொன்றே, விளையாட்டுத்துறை அமைச்சரால் நியமிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு நியமிக்கப்பட்ட கிரிக்கெட் இடைக்கால குழுவிற்கு எதிராக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா நீதிமன்றத்தை நாடியிருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், இடைக்கால சபை மற்றும் அதற்கான வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதன்படி, இந்த வழக்கு மீதான விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

  • ஜெய் ஷாவிடம் மன்னிப்பு கோரிய ரணில்
இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் என்ன? இலங்கை அரசியலில் எதிரொலிக்கும் கிரிக்கெட் வாரிய விவகாரம்!

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்பாடுகளில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷாவிற்கு தொடர்புள்ளதாக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்த கருத்து குறித்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜெய் ஷாவுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

இதன்போது, தான் ஜெய் ஷாவிடம் மன்னிப்பு கோரியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷாவிற்கும் இடையில் தொடர்பு கிடையாது என அவர் குறிப்பிடுகின்றார். இதேவேளை, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் நீண்டகாலமாகக் காணப்படுகின்ற பிரச்னையை புதிய சட்டத்தின் ஊடாகவே தீர்க்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதைக் குறிப்பிட்டார்.

”இரண்டு குழுக்களுக்கு இடையில் காணப்படுகின்ற பிரச்னை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. புதிய சட்டமொன்றை கொண்டு வந்து, சட்டத்தின் ஊடாக சரியான குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும். இந்த வழக்கை அவ்வாறு கொண்டு செல்ல வேண்டாம் என நான் விளையாட்டுத்துறை அமைச்சருக்குக் கூறினேன். அவ்வாறு செய்தால் ஐசிசி இல்லாது போகும், போட்டிகள் இல்லாது போகும், சுற்றுலாத் துறை இல்லாது போகும் எனக் கூறினேன்.” எனத் தெரிவித்தார்.

மேலும், “அத்துடன், வழக்கொன்றில் சிக்குண்டால் சிக்கிரம் மீண்டு வர முடியாது. அமைச்சரவையிலும் இது தொடர்பில் பேசினோம். எனினும், தனக்கு சட்டத்தரணி ஒருவர் வேண்டும் என அமைச்சர் கூறினார். அவர்கள் வழக்கு போடப் போகின்றார்கள். அதனால் சட்டத்தரணி ஒருவர் தேவை.

சட்டமாதிபரும் இருந்தார், முன்னாள் ஜனாதிபதியும் அந்த இடத்தில் இருந்தார். விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் முன்னிலையாகுமாறு சட்ட மாதிபருக்கு கூறினோம்,” என ரணில் விக்ரமிசிங்க தெரிவித்தார்.

“நான் ஜெய் ஷாவுடனும் பேசினேன். ஐசிசியுடனும் பேசினேன். அரசியல் தலையீடு உள்ளதாக ஐசிசி கூறுகின்றது. ஷம்மி சில்வாவை பாதுகாக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. அமைச்சர் செய்தது சரியா இல்லையா என்பதை நீதிமன்ற தீர்ப்பின் ஊடாகப் பார்த்துக்கொள்ள முடியும்,” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

 பிபிசி தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *