நகரைவிட்டு வெளியேறும்படி பலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் மீண்டும் எச்சரிக்கை

இஸ்ரேல் தாக்குதலால் காஸாவின் வடபகுதியிலிருந்து இடம்பெயர்ந்து தற்காலிகக் கூடாரத்தில் தங்கியுள்ள பாலஸ்தீனக் குடும்பம்.

தெற்கு காஸாவிலுள்ள கான் யூனிஸ் நகரிலிருந்து வெளியேறி, மேற்குப் பகுதிக்குச் செல்லும்படி பலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெற்கு காஸாவிலும் ஹமாஸ் படையினர்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதைக் கோடிகாட்டுவதாக இது அமைந்துள்ளது.

“மக்களை வேறிடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தி வருகிறோம். பலருக்கும் இது எளிதானதாக இருக்காது என்று தெரியும். ஆனாலும், சண்டையில் அப்பாவி மக்கள் சிக்கிக்கொள்வதை நாங்கள் விரும்பவில்லை,” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகின் உதவியாளரான மார்க் ரெகெவ் கூறினார்.

இதனால், இஸ்ரேல் தாக்குதலால் ஏற்கெனவே தென்பகுதிக்கு இடம்பெயர்ந்த நூறாயிரக்கணக்கானோர் மீண்டும் இடம்பெயரும் கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களுடன் கான் யூனிஸ் நகர மக்களும் வேறிடம் தேட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால் கடும் மனிதநேய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கான் யூனிஸ் நகரில் 400,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

அந்நகரில் வசிப்போர் உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயருமாறு வியாழக்கிழமை இரவு இஸ்ரேல் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தது.

நகரின் சுரங்க வழிகளிலிருந்து ஹமாஸ் போராளிகளை இஸ்ரேல் தற்காப்புப் படைகள் அப்புறப்படுத்த வேண்டியுள்ளது என்றும் ஆயினும், கட்டுமானங்கள் குறைந்த மேற்கில் அத்தகைய பெரிய கட்டமைப்புகள் இல்லை என்றும் ரெகெவ் தெரிவித்தார்.

அத்துடன், மேற்குப் பகுதிக்கு இடம்பெயரும் பொதுமக்கள் மீண்டும் இடம்பெயரத் தேவையிருக்காது என்று உறுதியளிப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், மேற்குப் பகுதிகள் எகிப்துடனான ராஃபா எல்லைப் பகுதிக்கு அருகிலுள்ளதால் உதவிப்பொருள்கள் கூடிய விரைவில் அங்கு கொண்டுவரப்படலாம் என்றும் அவர் கூறினார்.

கடந்த அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் போராளி அமைப்பு திடீரென இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் தாக்குதலில் இதுவரை ஏறக்குறைய 1,200 பேர் கொல்லப்பட்டுவிட்டனர்; 240 பேர் பிணை பிடிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்கும் நோக்கில் இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் குண்டுவீச்சால் காஸா நகரின் பெரும்பகுதி இடிபாடுகளாகக் காட்சியளிக்கிறது. வடபகுதியிலிருந்து அனைவரையும் வெளியேறச் சொல்லி உத்தரவிட்டுள்ளதால் மில்லியன்கணக்கான பாலஸ்தீனர்கள் வீடற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இஸ்ரேல் தாக்குதலால் மாண்டோர் எண்ணிக்கை 12,000த்தைத் தாண்டிவிட்டது என்றும் அவர்களில் 5,000 பேர் குழந்தைகள் என்றும் காஸா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *