தொடரும் சட்டவிரோத முன்பள்ளிகள் ஆரம்ப வகுப்பில் இன்னலுரும் குழந்தைகள்


(எம்.எல்.எஸ்.முஹம்மத்)

கடந்த 5 வருடங்களாக சபரகமுவ மாகாண தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கு இணையும் மாணவர்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் முன்பள்ளிக் கல்வி தொடர்பான அடிப்படைக் கற்றல் தேர்ச்சிகளை நிறைவு செய்யத் தவறியுள்ளனர் என ஆரம்பப் பிரிவு பாடசாலைகளின் அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.

முன்பள்ளிக் கல்வி தொடர்பான தேசிய கொள்கைகளை பின்பற்றத் தவறும் நூற்றுக்கணக்கான சட்டவிரோதமாக இயங்கி வரும் முன்பள்ளி பாடசாலைகளில் செயன்முறைக் கல்விக்குப் பதிலாக அறிவை மாத்திரம் வழங்கும் கல்விமுறை தொடர்வதே இதற்கான அடிப்படைக் காரணம் எனவும் மேற்படி அதிபர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
முன்பள்ளிப் பாடசாலைகளில் இடம்பெறும் மேற்படி தவறை உறுதிப்படுத்தும் விதமாக இரத்தினபுரி மாவட்டத்தில் பல முன்பள்ளிகள் இயங்கிக் கொண்டிருப்பதை எமது புலனாய்வு தேடல்கள் முயற்சிகள் வெளிக்கொண்டுவந்துள்ளன.
இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள தமிழ் மொழி மூலப் பாடசாலையொன்றில் தரம் ஒன்றிற்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவதை மையப்படுத்தி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குறித்த பாடசாலை வளாகத்தில் இயங்கி பின்னர் பெற்றோரின் முறைப்பாட்டைத் தொடர்ந்து பாடசாலைக்கு வெளியில் நடத்தப்பட்டுவரும் பாலர் பாடசாலையொன்றின் சட்டவிரோதமான நடவடிக்கைகள் பற்றி அங்கு படிக்கும் மாணவி ஒருவரின் தந்தையான பௌசுல் அமீர் தனது அதிருப்த்தியை இவ்வாறு முன்வைக்கிறார்.

“ எனது மகள் படிக்கும் பாலர் பாடசாலை எந்த வகையிலும் தரமான முன்பள்ளியாக இல்லை.இங்கு 3 முதல் 5 வரையான சுமார் 40 இற்கும் மேற்பட்ட பிள்ளைகள் உள்ளனர், ஒவ்வொரு பிள்ளையிடமிருந்தும் மாதாந்தம் 3000 ரூபா வரையில் கட்டணம் அறவிடப்படுகிறது.அத்துடன் வருட இறுதியில் கலைவிழா என்ற பெயரில் ரூபா 5000 அறவிடப்படுகிறது.இதற்கு மேலதிகமாக அங்குள்ள ஆசிரியைகளுக்கான பரிசில்களுக்கென ஒவ்வொரு பெற்றோரும் பெருந்தொகைப் பணத்தை செலவிட நேர்கிறது.
அப்படியிருந்தும் இப்பாலர் பாடசாலையில் எமது பிள்ளைகளுக்கான எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லை.வெறும் 300 சதுரஅடிகள் கொண்ட சிறிய அறையொன்றில்தான் அனைத்துப் பிள்ளைகளும் அடைக்கப்பட்டுள்ளனர்.ஏனைய முன்பள்ளிகளில் காணப்படுவது போல இங்கு பிள்ளைகள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்கள் இல்லை.குறைந்த பட்சம் இம்மாணவர்களை மைதானத்திற்கு அழைத்துச் சென்று ஒடி விளையாடுவதற்குக்கூட ஒழுங்குகள் செய்து கொடுக்கப்படவில்லை.எந்தவொரு பயிற்சி பெற்ற ஆசிரியரும் இன்றி நடத்தப்படும் இப்பாலர் பாடசாலையில் எமது பிள்ளைகள் படித்திருந்தால் மாத்திரம்தான் தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் நிலை உள்ளதால்தான் எமது பிள்ளைகளை அநியாயமாக இங்கு அனுப்ப வேண்டியுள்ளது”,என அவர் மிகுந்த வேதனையுடன் தெரிவிக்கிறார்.
மேற்படி பாடசாலையில் வளாகத்தில் நடத்தப்பட்டு வந்த பாலர் பாடசாலை தொடர்பாக சிரேஷ்ட ஆசிரியர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்
“எமது பாடசாலை மாணவர்களின் பிராத்தனை நடவடிக்கைகளுக்கென இரத்தினபுரி பிரதேச தனவந்தர் ஒருவரால் அன்பளிப்பு செய்யப்பட்ட கட்டிடத்தில்தான் இந்த பாலர் பாடசாலை இவ்வளவு காலமாக இயங்கி வந்தது. இப்பிள்ளைகளும் எமது பாடசாலை மலசல கூடங்களையும்,நீரையும்,மின்சாரத்தையும் பயன்படுத்தினர்.வருட இறுதியில் நடைபெறும் எமது பாடசாலை கலைவிழா மேடையையும்,அலங்காரங்களையும் பயன்படுத்தித்தான் மேற்படி பாலர் பாடசாலை கலை விழா நிகழ்வுகளும் இடம்பெற்றன. எமது மாணவர்கள்தான் அங்கு நடுவர்களாகவும் அறிவிப்பாளர்களாகவும் செயற்பட்டனர். எமது பாடசாலை வளாகத்தில் இப்பாலர் பாடசாலை இயங்கிய காலப்பகுதியில் எமது பாடசாலைக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்கப்பெறவில்லை.எமது அதிபரின் தனிப்பட்ட நலன்களுக்காகவே இப்படியான சட்டவிரோதமான செயற்பாடுகள் தொடர்ந்தன”,என அவர் தெரிவிக்கிறார்.
குறித்த பாலர் பாடசாலை தொடர்பாக மேற்படி தரப்பினர்கள் மாத்திரமின்றி இரத்தினபுரி சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் பலத்த கண்டனத்தை முன்வைக்கின்றனர்.

குறிப்பாக மேற்படி பாலர் பாடசாலையில் முன்பள்ளி மாணவர் விருத்திற்கு அவசியமான எந்தவொரு கற்பித்தல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதில்லை எனவும் அவர்கள் குறைபடுகின்றனர்.

இதுதொடர்பாக நாம் அவதானித்த போது மேற்படி பாலர் பாடசாலை அங்குவரும் பிள்ளைகளின் நலனை முன்னிட்டு இல்லாமல் குறித்த பாடசாலை அதிபரின் சொந்த நலனையும் அவரின் மேலதிக வருமானத்திற்கான வியாபார நடவடிக்கையாகவுமே இவை அமைந்துள்ளது.முன்பள்ளி தொடர்பில் எந்தப் பயிற்சியும் இல்லாத 53 வயதையும் தாண்டிய பெண்மணி ஒருவரை தலைமை ஆசிரியையாகக் கொண்டு 100 சதவீதம் அரச பாடசாலை வளங்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்டு வந்த இப்பாலர் பாடசாலை மூலம் மேற்குறித்த அதிபர் மாதாந்தம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொகையை வருமானமாக உழைத்து வந்துள்ளமையும் தெளிவாகின்றன.எனினும் மேற்படி பாலர் பாடசாலை ஆசிரியைக்கு அவர் அண்மைக்காலம் வரை மிகக் குறைவான தொகையையே மாதாந்த சம்பளமாக வழங்கி வந்துள்ளார் என சில பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பாலர் பாடசாலையின் முறைகேடான நடவடிக்கைகள் தொடர்பாக இரத்தினபுரி மக்களால் முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபரிடம் கேட்டபோது
“மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இப்போதைக்கு என்னால் எதுவும் குறிப்பிட முடியாது.நான் சமூக நலனை முன்னிட்டுத்தான் இந்த பாலர் பாடசாலையை நடத்திவந்தேன்.இது மாத்திரம்தான் இங்கு தமிழ் மொழி மூல பாலர் பாடசாலையாக இருந்தது.இங்கு மாணவர்கள் தரம் ஒன்றிற்கு தயார் படுத்தப்பட்டனர்.பெற்றோரின் எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் நிறைவு செய்யும் வகையில் பாடசாலையை நடத்த முடியாது.நான் இப்பாடசாலையில் நீண்ட காலம் அதிபராக இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள்தான் என்மீது போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.நான் பாடசாலை வளாகத்தினுள் முன்பள்ளியை நடத்தியமை தவறென்றிருந்தால் கல்வி அமைச்சு என்னைத் தண்டித்திருக்கும்.நான் மாத்திரமல்ல பல அதிபர்கள் தமது பாடசாலைகளில் பாலர் பாடசாலைகளை நடத்தியுள்ளனர்”,என தனது நியாயத்தை முன்வைக்க முயற்சிக்கிறார்.

குறிவிட்ட ஸாஹிரா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பாலர் பாடசாலை ஒன்றை ஆரம்பித்து நடத்திவந்த அப்பாடசாலையின் முன்னாள் அதிபர் எம்.ஏ.எம்.அக்ரமை தொடர்புகொண்டு இப்பிரச்சினை தொடர்பாகக் கேட்டபோது
“பாலர் பாடசாலைக் கட்டமைப்பு பாடசாலை பொதுக்கல்வி பாடவிதானத்துடன் நேரடியாக தொடர்பில்லாத போதிலும் இதுவொரு கல்வி மரபாக இருந்து வருகிறது.பெற்றோர்கள் தமது பிள்ளையை பாலர் பாடாசாலைகளுக்கனுப்பி அவர்களை பாடசாலை சூழலுடன் தொடர்புபடுத்த விரும்புகின்றனர்.இதனை கல்வி அமைச்சும் தவறாக நோக்கவில்லை.எனவேதான் நானும் அதிபராக இருந்தபோது பாலர் பாடசாலை ஒன்றை பாடசாலை வளாகத்திலேயே ஆரம்பித்து நடத்திவந்தேன்”,என அவர் தெரிவிக்கிறார்.
இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பல தமிழ் மொழி மூல பாடசாலைகளின் அதிபர்கள் தமது பாடசாலை வளாகத்திற்குள்ளே பாடசாலை வளங்களைப் பயன்படுத்தி பாலர் பாடசாலைகளை நடத்தி மாதாந்தம் பல்லாயிரக்கணக்கான ரூபாக்களை மேலதிக வருமானமாக உழைத்து வந்துள்ளனர்.

குறிப்பாக குறிவிட்ட ஸாஹிரா முஸ்லிம் மகா வித்தியாலயம், அல்அக்ஸா முஸ்லிம் வித்தியாலயம், முஸ்லிம் மகா வித்தியாலயம் மற்றும் எஹலியகொடை அல்ஹிக்மா முஸ்லிம் வித்தியாலயம் உட்பட பல தோட்டப் பகுதி பாடசாலைகளிலும் இப்படியான முன்பள்ளிகள் தாராளமாக இயங்கி வந்துள்ளன.
பாடசாலை வாளங்களைப் பயன்படுத்தி பாடசாலை வளாகத்தினுள் பாலர் பாடசாலைகளை நடத்திவரும் செயன்முறை தொடர்பாக சபரகமுவ மாகாண முன்பள்ளி அபிவிருத்தி நிலையப் பணிப்பாளரிடம் நாம் கேட்டபோது அவர் இவ்வாறு பதில் தந்தார்.
அரச பாடசாலைகளில் இயங்கிவந்த எந்தவொரு பாலர் பாடசாலையும் எமது நிலையத்தில் பதிவு செய்யப்படுவதில்லை.அவற்றை கண்காணிக்கும் அதிகாரமும் எங்களுக்கில்லை.எனினும் இலங்கையில் முன்பள்ளி பாடசாலைகள் தொடர்பான சட்ட விதிமுறைகளின் கீழ் பதிவு செய்யப்படாமல் முன்பள்ளிகளை நடத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.இவ்வாறான சட்டவிரோமான தமிழ் மொழி மூல முன்பள்ளிப் பாடசாலைகள் சுமார் 395 பாடசாலைகள் சபரகமுவ மாகாணத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
பாலர் பாடசாலைக்கு பெயர் இடுவதிலிருந்து அதன் பாடவிதானம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட கட்டணம் அறவிடும் ஒழுங்கு முறைகள் அனைத்து விடயங்கள் பற்றியும் எமது முன்பள்ளி நிலையம் வழிகாட்டுகிறது.மேற்படி சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்டுக்கொண்டிருக்கும் முன்பள்ளிகளை தடை செய்வதற்கும் அதன் நிர்வாகிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்தற்கு புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.இல்லாத வரையில் இவற்றை எங்களால் கட்டுப்படுத்த முடியாது”, என விளக்கம் அளிக்கிறார் அவர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் மேற்படி தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் மாத்திரமின்றி சுமார் 25 இற்கும் மேற்பட்ட சட்டவிரோதமான முன்பள்ளி பாடசாலைகள் இரத்தினபுரி நகரையும் அதனை அண்மித்த இடங்களிலும் மிகக்குறைந்த அடிப்படை வசதிகளுடன் இயங்கி வருவதாக சிறுவர் பாதுகாப்பு தொடர்பான மற்றுமொரு செயற்பாட்டாளர் சுவர்னா லக்மாலி தெரிவிக்கிறார்.

எனினும் மேற்படி எந்தவொரு முன்பள்ளி பாடசாலையும் அதற்குரிய அடிப்படை வசதிகளை கொண்டிருக்கவில்லை என தெரிவிக்கும் அவர் ஒவ்வொரு முன்பள்ளியும் ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் மாதாந்தம் சுமார் ரூபா 2500 முதல் ரூபா.5000 வரை அறவிடுகின்றனர்.ஆனாலும் அங்குள்ள பெரும்பாலான ஆசிரியர்கள் எந்தவொரு முன்பள்ளிக் கல்வி தொடர்பான பயிற்சியை பெறாதவர்கள்.தாய் மொழி அறிவு இங்கு பிள்ளைகளுக்கு கொடுக்கப்படுவதில்லை.ஆங்கில கலாச்சார அடிப்படையில் நடத்தப்படும் இந்த முன்பள்ளிகளால் அங்கு செல்லும் பிள்ளைகளுக்கு மாத்திரம் அல்ல எமது கலாச்சாரத்திற்கும் இப்பாலர் பாடசாலைகள் பாரிய அச்சுறுத்தல் மிக்கது”, எனவும் அவர் தெரிவிக்கிறார்.

3 முதல் 5 வயதிற்கிடைப்பட்ட பிள்ளைகளை ஜனநாயக மற்றும் நிலைபேறான சமூகங்களில் செயலூக்கமுள்ள பிரஜைகளாக இருப்பதற்கான ஆரம்பத் தேர்ச்சிகளையும் முன்பள்ளி பருவ விருத்திகளையும் உருவாக்க வேண்டிய மேற்படி முன்பள்ளிப் பாடசாலைகள் வியாபார நிலையங்களாக மாறியுள்ளதால் 5 வயது நிறைவில் தரம் ஒன்றிற்கு பாடசாலைகளில் இணையும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆரம்ப வகுப்புக்களில் இன்னலுற்று வருவதாக பாடசாலைகளின் உள்ளகத் தரவுகள் குறிப்பிடுகின்றன.

முன்பள்ளிகள் சென்று பின்னர் தரம் ஒன்றிற்கு இணையும் பிள்ளைகள் தொடர்பில் ஆரம்பப் பரிவு பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி நாபாவள முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.பி.எப்.நஸ்லியா கருத்து தெரிவிக்கையில்
“கடந்த 5 வருடங்களாக எமது பாடசாலைக்கு தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் 98 சதவீதமான மாணவர்கள் முன்பள்ளிகளில் கற்றுள்ளனர்.ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் முன்பள்ளி பாடசாலைகளுக்குச் சென்றுள்ள இப்பிள்ளைகளில் பெரும்பாலான பிள்ளைகள் மத்தியில் தாய்மொழி பற்றிய தேர்ச்சியும்,ஆரோக்கியமான உள விருத்திகள் உட்பட செயன்முறைக் கற்றல் தேர்ச்சியும் மிகக் குறைவாகவே உள்ளன.முன்பள்ளிக் கல்வி தொடர்பில் பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் இன்றி நடத்தப்படும் இப்படியான முன்பள்ளிப் பாடசாலைகளுக்கு மாணவர்கள் சென்று வருவதால் அவர்களை மீளவும் தயார் படுத்த வேண்டிய மேலதிக சுமைகளை ஆரம்ப வகுப்பு ஆசிரியர்களே சுமக்க வேண்டியுள்ளனர்” என அவர் தெரிவிக்கிறார்.

முன்பள்ளிக் கல்வி தொடர்பான தேசிய கொள்கையை வெளியிட்டுள்ள தேசிய கல்வி ஆணைக்குழு அதன் 2019 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கையில் முன்பள்ளிப் பாடசாலைகளுக்கான அடிப்படை நியமங்கள் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறது.

“இலங்கையிலுள்ள முன்பள்ளிகள் சகல பிள்ளைகளுக்கும் அவர்களின் முழுமையான விருத்தி மற்றும் பாடசாலைக்கான ஆயத்த நிலையை அதிகரிக்கும் விதத்திலான உயர் தரமான கற்றல் வாய்ப்புக்களை உறுதிப்டுத்த வேண்டும்.அத்துடன் முன்பள்ளி கலைத்திட்டத்தை வினைத்திறனுடன் இப்பாடசாலைகள் முன்னெடுப்பதுடன் தாய்மொழிக் கல்வி மற்றும் சூழல் அறிவு உட்பட சகபாடிகளுடன் இணைந்து செயலாற்றுவதற்கான மனவிருத்தி செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும்” எனவும் அறிவுறுத்துகிறது.
இலங்கையிலுள்ள முன்பள்ளிப் பாடசாலைகளின் அபிவிருத்தி மற்றும் அவற்றின் தர மேம்பாடு குறித்து கல்வி அமைச்சு,கல்வி ஆணைக்குழு,சிறுவர் விவகார அமைச்சு,தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை,தேசிய சிறுவர் செயலகம்,மாகாணக் கல்வி அமைச்சு,உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் யுனிசெப் நிறுவனம் உட்பட பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்கள் பணியாற்றி வருகின்ற போதிலும் நாட்டில் சட்டவிரோதமாக இயங்கிவரும் முன்பள்ளிகளால் வருடாந்தம் ஆயிரக்கணக்கான சிறார்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

முன்பள்ளிகள் ஆரம்பிக்கப்படுகின்ற போது பல்வேறு நிபந்தனைகள் முன்வைத்துள்ள தேசிய கல்வி ஆணைக்குழு பிள்ளைகளுக்கான தரமான கல்வி, பாதுகாப்பு,உயர் வழிகாட்டால்கள்,அடிப்படை சுகாதார வசதிகள்,விளையாட்டு,ஆரோக்கியமான வகுப்பறை,பயிற்சி பெற்ற ஆசிரியர்கள்,சமத்துவம் மிக்க வாய்ப்புகள் மற்றும் கட்டண ஒழுங்குகள் என பல்வேறு விடயங்கள் தொடர்பில் வழிகாட்டல்களையும் அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ள போதிலும் இலங்கையில் இதுவரை 2795 அரச பதிவுகளை மேற்கொள்ளாத சட்டவிரோத முன்பள்ளிகள் நாடலாவிய ரீதியில் இயங்கிக் கொண்டுடிருப்பதாகவும் வருடாந்தம் ரூபா.343.590 மில்லியன் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளம்ளமாக செலவளிக்கப்படுகிறது எனவும் பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி ,முன்பள்ளி பாடசாலைகளுக்கான இராஜாங்க அமைச்சு கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத் தரவுகளில் சுட்டிக்காட்டியுள்ளது.

மேற்படி சட்டவிரோத முன்பள்ளிப் பாடசாலைகள் தொடர்பில் தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக கல்வி அமைச்சிடமிருந்து பெறப்பட்ட மேலதிகத் தகவல்களுக்கிணங்க இலங்கையில் காணப்படும் 19668 முன்பள்ளிகளில் சுமார் 578160 பிள்ளைகள் வருடாந்தம் முன்பள்ளிக் கல்வியை ஆரம்பிக்கின்றனர் எனவும் 19 சதவீதமான முன்பள்ளிகள் அரச கண்காணிப்புடனும் தனியாரின் ஒத்துழைப்புடன் இயங்கிவரும் 88.2 சதவீதமான முன்பள்ளிகளில் மாணவர்களிடமிருருந்து ரூபா.1000 முதல் ரூபா.5000 வரை கட்டணங்கள் அறவிடப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேற்படி முன்பள்ளிகளில் கடமை புரியும் 50 சதவீதமான ஆசிரியர்கள் எந்தவொரு தொழில்சார் பயிற்சியையும் நிறைவு செய்யாதவர்கள் எனவும் நாடலாவிய ரீதியில் 5649 முன்பள்ளிகள் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு அரச நிறுவனத்தின் கீழும் பதிவு செய்யப்படாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன எனவும் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள முன்பள்ளிப் பாடசாலைகளின் மேம்பாட்டிற்கென யுனிசெப் நிறுவனம் உட்பட பல அரச சார்பற்ற நிறுவனங்கள் வருடாந்தம் 30 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையை செலவுசெய்து வருவதாக முன்பள்ளி கல்விக்கான தேசிய நிலையம் தனது 2022 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் இலங்கை அரசும் மாகாண சபைகள் மற்றும் அரச நிறுவனங்கள் ஊடாக சுமார் 20 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையை முன்பள்ளி பாடசாலைகளின் அபிவிருத்திக்கென செலவு செய்வதாக மத்திய வங்கியின் இறுதி அறிக்கையிலும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இப்படியாக வருடாந்தம் பெருந்தொகையான மக்கள் பணம் முன்பள்ளிகளின் அபிவிருத்திக்கென ஒதுக்கப்படுகின்ற போதிலும் முன்பளிகளின் தரமும் அவற்றின் நம்பகத் தன்மையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.முன்பள்ளிகள் ஆரம்பிப்பது சுயதொழில் முயற்சி போல் மாற்றம் பெற்றுள்ளன.பச்சிளம் பிள்ளைகளின் மனதிலும் அவர்களின் பெற்றோர்களின் மனதிலும் கவர்ச்சிகளை உருவாக்கி அநியாயமாக பணத்தை சூறையாட முயற்சிக்கும் சட்டவிரோத முன்பள்ளிகளை கட்டுப்படுத்தி முன்பள்ளி செல்லும் பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பது சமூகத்திலுள்ள அனைவரினதும் தார்மீகப் பொறுப்பாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *