உண்ணாவிரதக் கைதிகளின் நிலைமையோ கவலைக்கிடம்! சந்திப்புக்கு நேரம் ஒதுக்கவில்லை ஜனாதிபதி!! – சம்பந்தன் சீற்றம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் 9 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம், கொழும்பு மகசின் சிறைச்சாலை, கண்டி போகம்பரைச் சிறைச்சாலைகளும் பரவியுள்ளது. தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அரசியல் கைதிகளின் உடல் நிலைமை மோசமாகியுள்ளது.

அரசியல் கைதிகள் விவகாரத்தில் அரசியல் தீர்மானம் எடுப்பதற்கு பேச்சு நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் கோரியபோதும், அதற்கு நேரம் இன்னமும் ஒதுக்கப்படவில்லை. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்றுமுன்தினமும் பேச்சு நடத்துவதற்கு முயன்றபோதும், அது பலனளிக்கவில்லை.

அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் சட்டமா அதிபருடன் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பேச்சு நடத்தியிருந்தார். அந்தப் பேச்சில் எட்டப்பட்ட முடிவுகளை ஏற்கத் தயாரில்லை என்று அரசியல் கைதிகள் அறிவித்துவிட்டனர். இதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், கூட்டமைப்பின் தலைவர் கடந்த புதன்கிழமை பேச்சு நடத்த முயன்றிருந்தார். அந்தச் சந்திப்பு ஒரு நிமிடமே இடம்பெற்றிருந்தது. மீண்டும் சந்திக்கலாம் என்று கூறி ஜனாதிபதி சென்றிருந்தார். அதன் பின்னர் மீண்டும் சந்திப்புக்கான அழைப்பு ஜனாதிபதியிடமிருந்து, கூட்டமைப்பின் தலைவருக்கு கிடைக்கவில்லை.

“உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் நிலைமை படுமோசமாகவுள்ளது. இது நாம் கைகட்டி வேடிக்கை பார்க்கும் காட்சியல்ல என்பதை அரசு புரிந்து கொள்ளவேண்டும். ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் அரசியல் கைதிகள் தொடர்பில் கடந்த புதன்கிழமை சந்திப்பு நடத்த திட்டமிட்டிருந்தேன். துரதிஷ்டவசமாக அது நடக்கவில்லை. அரசியல் கைதிகள் தொடர்பில் முழுமையாக கலந்துரையாட முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது.

வடக்கு – கிழக்கு ஜனாதிபதி அபிவிருத்திச் செயலணியின் கூட்டம் முடிவடைய அன்றைய தினம் தாமதமாகிவிட்டது. ஒரு நிமிடம்தான் ஜனாதிபதி பேச்சு நடத்தினார். விரிவான பேச்சு நடத்த நேரம் ஒதுக்குவதாகத் தெரிவித்திருந்தார். ஜனாதிபதியிடமிருந்து இதுவரை அழைப்பு வரவில்லை. நானே நேரில் சென்று பேச்சு நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்” என்றார் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *