ஆயிரம் கிலோ ‘டைனோசர் முட்டைக்கூடு’ கண்டுபிடிப்பு

1991 ஆம் ஆண்டில் போர்ச்சுகல் நாட்டின் லோரிங்கா என்ற பகுதியில், பைமோகோ என்ற இடத்தில் டைனோசர் முட்டை கூட்டின் புதைபடிமம் ஒன்று கண்டறியப்பட்டது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட டைனோசர் முட்டைகளின் படிமங்கள் கிடைத்தன. அந்த முட்டைகளை ஈன்ற டைனோசர் வகையினத்திற்கு லோரிங்கானசோரஸ் என்று பெயரிடப்பட்டது. அந்த வகை இனத்தின் படிமங்கள் போர்ச்சுகல் நாட்டில் மட்டுமே கிடைத்திருந்தன. இந்த முட்டைகள் பின் ஜுராசிக் காலத்தை சேர்ந்த, 15 கோடி ஆண்டுகள் பழமையானவை ஆகும். இதன் காரணமாகவே அந்த முட்டைகள் உலகம் முழுவதும் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தன. இப்போது அந்த முட்டைகளை பற்றிய ஆராய்ச்சியில் இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன.

விஞ்ஞானிகள் இந்த முட்டையின் உள் பகுதியில் கருவினை கண்டறிந்துள்ளார்கள். அதன் விவரங்கள் வியப்பைக் கொடுக்கின்றன. டைனோசர்களில் 1,500 வகைகளை நாம் இதுவரை அறிந்துள்ளோம். ஆனால் அவற்றில் வெறும் 20 வகையினங்களுக்கு மட்டுமே அவற்றின் முட்டைக் கரு படிமங்கள் கிடைத்துள்ளன. அதில் இரண்டு லோரிங்கா பகுதியில் கிடைத்திருப்பது இந்த பகுதியை மேலும் சிறப்புக்குரியதாக ஆக்குகிறது. இது அற்புதமான ஒன்று” என்கிறார் தொல்லுயிர் புதைபடிம ஆய்வாளர் முனைவர் மிகுவேல் மோரினோ-அசான்சா.

இந்த கண்டுபிடிப்பை தொடர்ந்து உலகம் முழுவதும் புதைபடிம ஆய்வாளர்களின் கவனம் லோரிங்காவை நோக்கி குவிந்துள்ளது.

டைனோசரின் மூன்றாவது முட்டை கூடு
  • 15 கோடி ஆண்டுகள் பழமையான முட்டை கூடு

லோரிங்கா பகுதியில் அமைந்த பாறைகள், பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன் பல நதிகள் ஓடக்கூடிய பரந்து விரிந்த சமவெளியாக இருந்துள்ளன. தாவர உண்ணிகளுக்கும், வேட்டையாடும் டைனோசர்களுக்கும் இந்த நிலப்பகுதி வசதியாக இருந்துள்ளது. அவை வாழ்வதற்கு தகுதியான சூழலைக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல் அவை புதைந்து படிமமாக மாறுவதற்கான புவிச் சூழலும் இங்கே நிலவியுள்ளது. அதனால்தான் 15 கோடி ஆண்டுகளாக இந்த படிமங்கள் பாதுகாப்பாக இருந்துள்ளன.

“ஒரே ஒரு சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்த பாறையில் நமக்கு கடந்த காலத்தின் எச்சங்கள் ஏராளமான அளவில் கிடைப்பது உண்மையிலேயே ஆச்சரியமானதுதான்” என்கிறார் படிம பொருள் ஆராய்ச்சியாளர் மிகுவேல் மோரினோ-அசான்சா.

டைனோசரின் மூன்றாவது முட்டை கூடு
  • ஆயிரம் கிலோ எடையுள்ள முட்டைக்கூடு

மைக்கேல் மார்டினோ, 2018 ஆம் ஆண்டில் டைனோசர் கூட்டின் புதைபடிமத்தை கண்டறிவதில் உதவி செய்த தன்னார்வலர். லோரிங்கா அருங்காட்சியகத்தில் பணியாற்றுகிறார். “கானிகல் கடற்கரையில் புதை படிமங்களை தேடிக் கொண்டிருந்தபோது நீருக்கு அருகில் இரண்டு முட்டை ஓடுகள் கிடைத்தன. எனவே சரிவான நிலப்பகுதியை கூர்ந்து ஆராய தொடங்கினோம். ஒரே இடத்தில் ஏராளமான முட்டை ஓடுகள் கிடைத்தால் அருகில்தான் கூடு இருக்கும் என்று அனுமானித்தோம்” என்று தெரிவித்தார். பிபிசி நிருபர்கள் இந்தப் பகுதியை படம்பிடித்த சமயத்தில் அவர் முதலைப் பல் ஒன்றின் படிமத்தை கண்டுபிடித்தார். அதுவும் வரலாற்றுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தது.

பாதுகாப்பாக வேலைகளை மேற்கொள்ள அந்த பாறை இடுக்கில் ஒரு பாதையை அவர்கள் ஏற்படுத்த வேண்டியிருந்தது. வேலை செய்யும்போது பாதுகாப்பிற்காக கயிறுகளை பயன்படுத்தி முன்னேறி சென்றனர்.

“நாங்கள் டைனோசரின் முட்டை கூட்டின் படிமத்தை கண்டறிந்தோம், ஆயிரம் கிலோவுக்கும் கூடுதலான எடையில் அது இருந்தது. எடுக்கும்போதே அது உடைந்துவிடுமோ என்று அச்சப்பட்டோம். ஆனால் நல்வாய்ப்பாக உடையவில்லை. பாதுகாப்பாக அந்த கூட்டை அகற்றி பரிசோதனைக் கூடத்திற்கு கொண்டு வந்தோம்” என்று புதைபடிமங்கள் கொண்டு ஆராய்ச்சி செய்யும் என்று ஜுவோ ருஸ்ஸோ கூறுகிறார்.

டைனோசரின் மூன்றாவது முட்டை கூடு
  • கருவின் எலும்புகள் கிடைக்குமா?

இன்னும் ஆய்வுகள் முடியவில்லை என்றாலும், தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கூடு, வேட்டையாடும் டைனோசர் வகையினத்தினுடையது என உறுதியாக கூறுகிறார் லோரிங்கா அருங்காட்சியகத்தின் இயக்குனர் கார்லா தாமஸ்.

“கண்டுபிடிப்பதற்கு நிறையவே உள்ளது. இருந்தாலும் ஒரு விசயத்தை உறுதியாக சொல்ல முடியும். இந்த கூடு, வேட்டையாடும் டைனோசர் வகையினத்தினுடையது. இப்போது நாங்கள் அந்த முட்டைகளை வெளிப்படுத்தி வருகிறோம். அப்போதுதான் புதைபடிம ஆராய்ச்சியாளர்களால் அதனை ஆய்வுக்கு உட்படுத்த முடியும். எளிதில் உடைந்துவிடக் கூடியதாக உள்ளது. எனினும் நாங்கள் அதன் கருவின் எலும்புகளை கண்டறிய முடியும் என நம்புகிறோம். எனவேதான் மிக மிக மெதுவாக தோண்டி வருகிறோம். எங்கள் அருங்காட்சியகத்தில் ஏற்கனவே 2 கூடுகள் உள்ளன. அவற்றில் கரு அடையாளம் காணப்பட்டுள்ளன” என்கிறார் அவர்.

“இரண்டில் ஒரு கூடு டோர்வோசரஸ் என்ற டைனோசர் இனத்தின் கருவை கொண்டது. இன்னொன்று லோரிஹனோஸரஸ் வகை. ஐரோப்பாவில் உலவி வந்ததிலேயே இதுதான் மிகப்பெரிய வேட்டையாடி டைனோசர் இனம் ஆகும். டி.ரெக்ஸ் வகை டைனோசர்களுக்கு 8 கோடி ஆண்டுகள் முந்தைய இனம் இது. அன்றைய சூழலில் இதுதான் உச்ச வேட்டையாடி எனலாம்.” என்கிறார் புதைபடிமங்கள் கொண்டு ஆராய்ச்சி செய்யும் ஜுவோ ருஸ்ஸோ.

டைனோசரின் மூன்றாவது முட்டை கூடு
  • டைனோசர் வகையினங்களின் முட்டை பொறிக்க 100 நாட்கள் ஆகும். கரு வளர்ச்சியின் முதிர்ந்த கட்டத்தில்தான் எலும்புகள் உருவாகும். எனவே அவை படிமங்களாக கிடைப்பது மிக அரிதான ஒன்றாகும். ஆனால் லொரிங்கா பகுதியில் இரண்டு கூடுகளில் இது கிடைத்திருக்கிறது.

“இங்கு இரண்டு கூடுகள் கிடைத்தது மட்டுமல்லாது, அவை வெவ்வேறு வகை டைனோசர் இனங்களின் முட்டைகள் என்பது மேலும் சிறப்பானது. டோர்வோசரஸ் வகை டைனோசர்களின் முட்டைகள் ஆதிகால டைனோசர் முட்டைகளை ஒத்தவை. லோரிங்கனோசரஸ் முட்டைகள் (ஏவியான் வகை) கால்சியம் கார்பனேட்டால் ஆன பறவை முட்டைகளை ஒத்தவை. உலகின் மிக வேகமாக வளரும் உயிர் பொருட்கள் என இந்த முட்டைகளை சொல்லலாம். எனவே இந்த கண்டுபிடிப்பின் விளைவாக வேறு பரிணாமத்தையும் புரிந்துகொள்ள முடியும். நவீன உலகத்திலும் இந்த கண்டுபிடிப்பிற்கு பயன் இருக்கும் என நினைக்கிறேன். உதாரணமாக கால்சியம் கார்பனேட் மிக வேகமாக உருவாவதன் ரகசியத்தை அறிந்துகொண்டால், புதிய சேர்மங்களின் உருவாக்கத்தில் அது பலன் கொடுக்கும். லோரிங்காவின் பாறைகளின் கீழே ஏராளமான தகவல்கள் மறைந்துள்ளன ” என்கிறார் மிகுவேல் மேரினோ-அசான்சா.

“இங்கு வேலை செய்வது அருமையான ஒன்று, குறிப்பாக நீங்கள் டைனோசர்களை கனவு காண வளர்ந்திருந்தால், எதிர்கால சந்ததியினருக்கு இந்த அனைத்து புதைபடிவங்களையும் பாதுகாக்க முடியும் என்பது எனக்கு பெருமை அளிக்கிறது.” என்கிறார் லோரிங்கா அருங்காட்சியகத்தின் இயக்குனர் கார்லா தாமஸ் .

 பிபிசி தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *