காஸா மெட்ரோ: 500 கி.மீ. சுரங்கப் பாதையில் என்ன இருக்கிறது?

ஹமாஸ் ஆயுதக்குழு கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஏராளமான ராக்கெட்டுகளை ஏவியது. இதைத்தொடர்ந்து, காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கி ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது.

ஹமாஸ் குழுவை முற்றிலுமாக அழிக்க நினைக்கும் இஸ்ரேலுக்கு சவாலாக விளங்குவது, அக்குழுவினர் பூமிக்கடியில் அமைத்துள்ள ரகசிய சுரங்கப் பாதைகள்தான்.

இஸ்ரேலை தாக்க ஹமாஸ் பல்வேறு ரகசிய சுரங்கப் பாதைகளை அமைத்துள்ளது. ஹமாஸ் குழுவினர் தங்குவதற்காகவும் அவர்கள் சென்றுவரும் பாதையாக பயன்படுத்தவும் அக்குழுவினரால் ஏராளமான ரகசிய சுரங்கப் பாதைகள் பூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ளன.

தங்கள் திட்டங்களை வகுக்கவும் இந்த சுரங்கப் பாதைகளை ஹமாஸ் பயன்படுத்தி வருகிறது. எல்லை தாண்டிய இந்த சுரங்கங்கள் வழியாக ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலை அடைய முடியும். சுரங்கங்களை பயன்படுத்தி பல்வேறு தாக்குதல்களையும் ஹமாஸ் நிகழ்த்தியுள்ளது.

ஹமாஸை பூமியிலிருந்து அழித்தொழிக்க விரும்புவதாக இஸ்ரேல் கூறுகிறது. அதற்கு முதலில் இந்த ரகசிய சுரங்கப் பாதைகளை இஸ்ரேல் அழிக்க வேண்டும். ஆனால், ஹமாஸின் சுரங்கப் பாதைகளை முற்றிலுமாக அழிப்பது அவ்வளவு சாத்தியமில்லை என்பது அதன் வலுவான கட்டமைப்பிலிருந்து தெரிகிறது.

காஸா சுரங்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

காஸாவில் உள்ள ஹமாஸ் சுரங்கப் பாதைகள் சுமார் 80 மீட்டர் வரை ஆழம் கொண்டவை. பூமிக்கடியில் 20 மீட்டர் உயரத்தில் தடுப்பரணும் அமைக்கப்பட்டுள்ளது. சுற்று வேலி அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கத்தில் ஆயுதங்களை மறைத்து வைக்க, திட்டங்களை வகுக்க, பணயக் கைதிகளை வைக்க பயன்படுத்தப்படும் அறைகள் உள்ளன. மேலும், சுரங்கப் பாதைகளின் கட்டமைப்பை வலுப்படுத்த கான்கிரீட்டால் ஆன மேற்கூரையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப் பாதைகள் சுமார் 1.8 மீட்டர் உயரம் கொண்டவை.

  • காஸா சுரங்கப் பாதை

அதேபோன்று, பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத் பயன்படுத்திய சுரங்கப் பாதையைக் காண பிபிசியின் குவென்டின் சோமர்வில்லேவுக்கு 2015 இல் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.

கண்கள் கட்டப்பட்ட நிலையில் ரகசிய இடத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த சுரங்கம் மேற்பரப்பிலிருந்து 30 மீட்டர் ஆழத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. குடியிருப்பு கட்டடங்களுக்கு உள்ளே அவற்றின் நுழைவுவாயில்கள் இருப்பது பொதுமக்களை வான்வழி தாக்குதல் ஆபத்தில் ஆழ்த்துகிறது.

ஹமாஸால் பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளும் இந்த சுரங்கத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

காஸாவிற்கு உதவியாக வழங்கப்பட்ட மில்லியன் கணக்கான டாலர்களை இந்த சுரங்கங்களை அமைக்க ஹமாஸ் அமைப்பு மக்களிடமிருந்து பெற்றதாக இஸ்ரேலிய ராணுவம் குற்றம்சாட்டுகிறது. முந்தைய போர்களில் சேதமடைந்த வீடுகளை மீண்டும் கட்டுவதற்காகக் கொடுக்கப்பட்டப் பல்லாயிரக்கணக்கான டன் சிமெண்டை பயன்படுத்தி இந்தச் சுரங்கங்கள் கட்டப்பட்டதாகவும் குற்றம்சாட்டுகிறது.

காஸாவில் உள்ள சுரங்க கட்டமைப்பை 2021ஆம் ஆண்டு வான்வழி தாக்குதல் மூலம் அழித்ததாக இஸ்ரேல் கூறியது. அந்த சுரங்கப் பாதையை`காஸா மெட்ரோ` என இஸ்ரேல் கூறுகிறது. ஏனென்றால், அந்த சுரங்கம் 41 கி.மீ. நீளமும் 10 கி.மீ. அகலமும் கொண்ட ஒரு பகுதியின் அடியில் பரந்திருப்பதாக நம்பப்படுகிறது.

கடந்த 2021ம் ஆண்டு நடந்த மோதலைத் தொடர்ந்து இந்த சுரங்கத்தில் 100 கி.மீக்கும் அதிகமான சுரங்க அறைகள் வான்வழித் தாக்குதல் மூலம் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் கூறின. ஆனால், தங்களின் சுரங்கப் பாதை 500 கி.மீ. நீளம் கொண்டதாகவும் அதில் 5 சதவீதம் மட்டுமே தாக்கப்பட்டதாகவும் ஹமாஸ் பதிலுக்குக் கூறியிருந்தது.

  • ஹமாஸ் சுரங்கம்

ஹமாஸ் சுரங்கப் பாதைகள் கண்டறியப்படுவதைத் தவிர்க்கும் வகையில் அவற்றின் நுழைவுவாயில்கள் வீடுகள், மசூதிகள், பள்ளிகள் மற்றும் பிற பொதுக் கட்டடங்களுக்கு அடியில் அமைந்திருக்கின்றன.

“சுரங்கப்பாதைகள் பண்டைய காலங்களில் இருந்தே போர்களில் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை முற்றிலுமாகத் தடுக்க வழி இல்லை,” என்கிறார், இஸ்ரேலின் ரெய்க்மன் பல்கலைக்கழகத்தில் நிலத்தடிப் போர்முறைகள் குறித்த வல்லுநராக இருக்கும் டாஃப்னே ரீஷ்மண்ட்-பராக்..

மேலும் பேசிய ரீஷ்மண்ட்-பராக், இந்த சுரங்கப் பாதைகளை முற்றிலும் அழிப்பது சாத்தியப்படாது என்கிறார்.

“சில பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற மாட்டார்கள். சில சுரங்கங்கள் எங்கிருக்கின்றன என்பதே தெரியாது. மேலும் சில பகுதிகளை அழிப்பது மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்” என்கிறார் அவர்.

இவற்றை அழிப்பது, இஸ்ரேல் ராணுவம், பணயக் கைதிகள், பாலத்தீன மக்கள் ஆகிய முத்தரப்பிலும் பல மரணங்களை ஏற்படுத்தும் என்கிறார் அவர்.

பிபிசி தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *