காசாவின் மிகப்பெரிய வைத்தியசாலை இஸ்ரேல் இராணுவத்தினால் முற்றுகை

காசா நகரின் மிகப்பெரிய வைத்தியசாலையான al-Shifa வைத்தியசாலை இஸ்ரேல் இராணுவத்தினால் முற்றுகை இடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இஸ்ரேலிய இராணுவ வாகனங்கள் வைத்தியசாலை வளாகத்தை அண்மித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

al-Shifa வைத்தியசாலையின் கொள்ளளவுக்கு மேலதிகமாக நோயாளர்கள் சிகிச்சைபெற்று வரும் நிலையில், அதில் சிறுவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நோயாளர்களுக்குத் தேவையான தண்ணீர் மற்றும் உணவு தீர்ந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், வைத்தியசாலைக்கான மின் விநியோகம் முற்றாக தடைப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், வைத்தியசாலையில் புதிதாக பிறந்த குழந்தைகளின் உயிரை காப்பாற்றுவதற்கு தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த வைத்தியசாலையில் புதிதாக பிறந்த சுமார் 20 குழந்தைகள் உயிருக்கு ஆபத்தானை நிலையில் இருப்பதாகவும், இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியர்களை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனிடையே, வைத்தியசாலைக்குள் உள்ள நோயாளர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வைத்தியசாலையை விட்டு வெளியேறுவதற்கான சாத்தியமில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், al-Shifa வைத்தியசாலையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பதுங்கியிருப்பதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஹமாஸ் ஆயுதக்குழு நோயாளர்களை மனிதக் கேடயமாக பயன்படுத்திவருவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு சொந்தமான பாரிய சுரங்கப்பாதையின் நுழைவாயில் al-Shifa வைத்தியசாலைக்குள் இருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *