அரபு நாடுகள், அமெரிக்காவுக்கு இடையே கருத்து மோதல்

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினரை எதிர்த்து காஸாவில் மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் தொடர்பில் அமெரிக்காவுக்கும் அதன் பங்காளிகளாக இருக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போரில் மரணமடையும் பாலஸ்தீனப் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் உடனடி தற்காலிக சண்டை நிறுத்தத்துக்கு குரல் ஓங்கி வருகிறது.

எனினும், இஸ்ரேலும், அமெரிக்காவும் தற்காலிக சண்டை நிறுத்துதிற்கு உடன்படவில்லை.

தற்காலிகமாக சண்டையை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கனுக்கு நெருக்குதல் அளித்தனர்.

எனினும், ஆன்டனி பிளிங்கன் அதற்கு மறுப்பு தெரிவித்தார். உடனடியாக சண்டையை நிறுத்தினால் அது ஹமாஸ் அமைப்புக்கு சாதகமாக இருக்கும் என்று அவர் கூறினார். அதன் பிறகு ஹமாஸ் மீண்டும் வலுவடைந்து தாக்குதல் மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

அமெரிக்காவுக்கும் அதன் பங்காளி அரபு நாடுகளுக்கும் இடையே இத்தகைய வெளிப்படையான கருத்து வேறுபாடுகள் எழுவது அரிது.

இந்நிலையில், லண்டன், பெர்லின், பாரிஸ், இஸ்தான்புல், வா‌ஷிங்டன் உள்ளிட்ட உலகின் பல நகரங்களில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் பலர் உடனடி தற்காலிகப் போர் நிறுத்தத்துக்குக் குரல் கொடுத்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *