காஸா நகரை சுற்றிவளைத்தது இஸ்ரேல்; ஹமாஸ் விடுத்துள்ள எச்சரிக்கை

ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா நகர் முழுவதையும் சுற்றி வளைத்து விட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் 7ஆம் திகதி தாக்குதல் நடத்தியதால், காஸா மீது இஸ்ரேல் இராணுவம் போர் தொடுத்தது.

காஸாவின் வடக்கு பகுதியில் கடந்த 7ஆம் திகதி முதல் வான்வழி தாக்குதலை நடத்திய இஸ்ரேல், தற்போது தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வருகிறது.

காஸாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் இரண்டு நாளில் இரு முறை நடத்தப்பட்ட தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இது போர் குற்றத்துக்கு ஈடான செயல் என ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் இதுவரை 3,760 குழந்தைகள் உட்பட 9,061 பேர் உயிரிழந்ததாக காஸா சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காஸாவில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தற்காலிக சண்டை நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மற்றொரு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

காஸாவில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை குறைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா நகர் முழுவதையும் இஸ்ரேல் இராணுவம் சுற்றி வளைத்துவிட்டதாகவும், சண்டை நிறுத்தத்துக்கு தற்போது வழியே இல்லை என இஸ்ரேல் இராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹமாஸ் தீவிரவாத பிரிவான எசிடைன் அல்-காசம் பிரிகேட்ஸ், ‘‘காஸா நகரை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் இராணுவ வீரர்கள் கருப்பு பைகளில் பிணமாகத்தான் வீடு திரும்புவர்’’ என எச்சரிக்கை விடுத்துள்ளது.

பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரேலியர்கள் 240 பேரை மீட்கும் முயற்சியில் இஸ்ரேல் இராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பணயக் கைதிகளை தேடுவதற்காக காஸா நகரில் அமெரிக்கப் படையும் ட்ரோன்களை பறக்கவிடுகிறது.

வடக்கு காஸாவில் சண்டை தொடரும் நிலையில், காஸாவில் உள்ள நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் ரஃபா எல்லை வழியாக எகிப்து நாட்டுக்கு தப்பிச் செல்கின்றனர்.

இந்த எல்லை திறக்கப்பட்டு கடந்த 2 நாட்களில் 72 குழந்தைகள் உட்பட 344 வெளிநாட்டினரும், காயம் அடைந்த பாலஸ்தீனர்கள் 21 பேரும் எகிப்து வந்திருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

காஸா பகுதியில் சண்டை தொடரும் நிலையில் லெபனான் -இஸ்ரேல் எல்லையில் ஈரான் ஆதரவுடன் செயல்படும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இஸ்ரேல், பதிலடி கொடுத்து வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *