ஹமாஸூக்கு துருக்கி ஆதரவு

ஹமாஸ் விடுதலைப் போராளிகளுக்கு எதிராக கடந்த இரண்டு வாராங்களுக்கு மேலாக இஸ்ரேல் யுத்தம் நடத்தி வரும் நிலையில், தற்போது இஸ்ரேலுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இஸ்ரேல் இருமுனைகளில் போராடி வருவதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒரு பக்கம் ஹமாஸ் மற்றும் மறுபுறம் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புடன் போரிடும் நிலையில், தற்பேது ஈரானும் தனது கவனத்தை இஸ்ரேல் பக்கம் திருப்பி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய போராளிகளுடன் போராட முடியாததால், ஆதரவற்ற பலஸ்தீன மக்கள், குழந்தைகள் மற்றும் பெண்களை நெதன்யாகுவின் அரசாங்கம் பழிவாங்குகிறது என்று ஈரானின் தலைவர் கமேனி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் கைகள் காஸாவின் குழந்தைகளின் இரத்தத்தால் கறைபட்டுள்ளன என்று ஈரானின் உச்ச தலைவர் கமேனி தெரிவித்துள்ளார்.

அதேநேரம், ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு அல்ல என்றும், நிலத்தை பாதுகாக்க போராடும் விடுதலைக் குழு என்றும் துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் கூறியுள்ளார்.

ஹமாஸ் ஒரு தேசபக்தி அமைப்பு என்று எர்டோகன் சுட்டிக்காட்டியுள்ளார். அந்நாட்டு பாராளுமன்றத்தில் தனது கட்சியின் உறுப்பினர்களிடம் உரையாற்றிய எர்டோகன், அவர்கள் போர்வீரர்கள் (முஜாஹித்), நாங்கள் இஸ்ரேலுக்குக் கடன்பட்டவர்கள் அல்ல என்றார்.

துருக்கிய ஜனாதிபதி எர்டோகன், இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனியப் படைகளுக்கு இடையே உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பிராந்தியத்தில் நீடித்த அமைதியை உறுதிப்படுத்த இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு அல்ல, அது ஒரு விடுதலைக் குழு, தனது நிலத்தையும் மக்களையும் பாதுகாக்க அவர்கள் போராடுகிறனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் பதிலடியை ஆதரித்த மேற்கத்திய நாடுகளையும் எர்டோகன் விமர்சித்துள்ளார்.

இஸ்ரேலுக்காக மேற்குலகம் கண்ணீர் சிந்துவது மோசடியே தவிர வேறு ஏதும் இல்லை என்றார்.

தெற்கு இஸ்ரேலில் அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் நடத்திய படுகொலைகளால் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு துருக்கி கண்டனம் தெரிவித்துள்ளது.

துருக்கிக்கு ஆதரவான பல நேட்டோ நாடுகள் ஹமாஸை ஒரு பயங்கரவாத குழுவாக கருதுகின்றன.

எர்டோகனின் கருத்துக்கு இத்தாலியின் துணைப் பிரதமர் மேட்டியோ சால்வினி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *