தங்கம் கடத்திய அலி சப்ரி ரஹீம் சிக்கியது எப்படி?

தங்கத்தை நாட்டுக்குள் கடத்திவர முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தொடர்பான செய்திகள் கடந்தக் காலங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வரப்பிரசாதங்களை தவறாகப் பயன்படுத்தியே அலி சப்ரி ரஹீம் நாட்டுக்குள் தங்கத்தைக் கடத்திவர முயற்சித்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் தொடர்ந்து கூறிவருகிற நிலையில், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டப் பிரேரணைக்கு அமைய பாராளுமன்ற குழுக்கள் அனைத்திலிருந்தும் அலி சப்ரி ரஹீம் நீக்கப்பட்டிருக்கிறார்.

ஆனால், தங்கக் கடத்தல் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து மறுத்துவரும் அலி சப்ரி ரஹீம் ஊடகங்களுக்குப் பொய் கூறி வருகிறார் என்பது தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எமக்குக் கிடைத்த ஆவணங்கள் உறுதி செய்கின்றன.

அது மட்டுமல்லாது நாட்டுக்குள் தங்கத்தை எப்படி கடத்தி வந்தார்? இந்த தங்கக் கடத்தலுக்கு அலி சப்ரி ரஹீம் பயன்படுத்திய உத்திகள் என்ன என்பதுத் தொடர்பிலும் பல பிரத்தியேகமான தகவல்களை அந்த ஆவணம் வெளிப்படுத்துகிறது.

“என்னோடு வந்தவர்தான் இந்த வேலையை செய்தது. நான் தங்கத்தை கடத்தி வரவில்லை. எனது கையிலிருந்து தங்கம் பிடிப்படவில்லை. என்னோடு வந்தவரிடமிருந்தே தங்கத்தை எடுத்தார்கள். நான் செய்யாத தவறுக்காக அபராதத் தொகையை செலுத்தியிருக்கிறேன்.” இப்படியான கருத்துக்களை தொடர்ந்து கூறி, தங்கக் கடத்தலில் தான் ஈடுபடவே இல்லை என்பதை அலி சப்ரி ரஹீம்  கூறி வருகிறார்.

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அதிமுக்கியஸ்தர்களுக்கான முனையத்தின் ஊடாக, சட்டவிரோதமாக தங்கம் மற்றும் கையடக்க தொலைபேசிகளை நாட்டுக்குள் எடுத்துவர முயற்சித்தமை தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை வழங்குமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகத்தால், இலங்கை சுங்கப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் பி.பி.எஸ்.சீ.நோனிஸ்க்கு கடிதம் ஒன்று அனுப்பி  வைக்கப்பட்டிருந்தது. பாராளுமன்ற செயலாளர் நாயக்கத்தின் கடிதம் LS/TO/53 என இலக்கமிடப்பட்டிருக்கிறது.

இக்கடிதத்தில், பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் எவ்வாறு தங்கத்தை கடத்தி வர முயற்சித்தார் என்பது தொடர்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாது, அலி சப்ரி ரஹீம் ஊடகங்களுக்கு தொடர்ந்து பொய் கூறி வருவதையும் இக்கடிதம் ஊடாக நிரூபிக்க முடிகிறது. தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இக்கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடமிருந்து பெற்றுக்கொள்ள முடிந்தது.

நீண்ட காலமாக கண்காணிக்கப்பட்ட அலி சப்ரி ரஹீம்

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைவாக  கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அலி சப்ரி ரஹீமால் மேற்கொள்ளப்படும் விமானப் பயணங்கள் நீண்டக் காலமாகவே கண்காணிக்கப்பட்டு வந்திருக்கின்றன.

2023.05.23 அன்று முற்பகல் 9.25 மணியளவில் Fly Dubai விமான சேவைக்கு சொந்தமான FZ547 விமானத்திலிருந்து அலி சப்ரி ரஹீமும் அவரது உதவியாளரான ஏ.எச்.எம்.பைரூனும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கியிருக்கிறார்கள். அலி சப்ரி ரஹீம்  D5658824 என்கிற இலக்கத்தைக் கொண்ட கடவுச்சீட்டையும், பைரூன் (உதவியாளர்) N 10396987 என்கிற இலக்கத்தையும் கொண்ட கடவுச்சீட்டையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

வந்திறங்கியது முதலே, அலி சப்ரி ரஹீம் நடவடிக்கைகள் விமான நிலைய அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டுள்ளன. விமானத்திலிருந்து இறங்கியதுமே தன்னுடைய தனிப்பட்ட பையை எடுத்துக்கொண்டு விமான நிலையத்தில் உள்ள Crystal Lounge வந்த அலி சப்ரி ரஹீம், தன்னுடைய ஏனைய பொதிகளை எடுத்துவருவதற்காக விமான நிலையத்தில் உள்ள விமானப் பயணிகளுக்கு சேவையை வழங்கும் நிறுவனத்தின் அதிகாரி ஒருவரிடம் வழங்கியிருக்கிறார்.

விமானத்திலிருந்து வந்திறங்கியப் பின்னர் விசேட பிரமுகர்களுக்கான முனையத்தில் வைத்து தான் எடுத்துவந்த பைகளை சோதனைக்கு உட்படுத்தாது வெளியில் எடுத்துச் செல்ல முயற்சித்தபோது, அங்கிருந்த சுங்க அதிகாரிகள் அதனை அவதானித்து அலி சப்ரி ரஹீமை தடுத்து வைத்து விசாரணை செய்திருக்கிறார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கையில் எடுத்துவந்த பையில் தங்கத்தை மறைத்துவைத்து எடுத்துவந்திருந்த அதேவேளை, விமான நிலையத்தில் உள்ள விமானப் பயணிகளுக்கு சேவையை வழங்கும் நிறுவனத்தின் அதிகாரியிடம் எடுத்து வருவதற்கு ஒப்படைத்திருந்த இரு பைகளிலும் 91 ஸ்மார்ட் போன்கள் இருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அலி சப்ரி ரஹீமின் பயணப் பையில் மிகவும் சூட்சமமான முறையில்  கவர் செய்யப்பட்ட இரு பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3,397.7 கிராம் தங்கத்தை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதற்கு மேலதிகமாக 91 Samsung, Xiaomi Redmi ஸ்மார்ட் போன்களும் அவரது பையிலிருந்து கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

தங்கக் கடத்தலுக்கு பயன்பட்ட எம்.பிகளுக்கான வரப்பிரசாதம்

இதற்கு மேலதிகமாக, சுங்க அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவல் மற்றும் மேற்பார்வை நடவடிக்கைகளின் ஊடாக அலி சப்ரி ரஹீம் வந்த அதே விமானத்தில் வந்த அவரது (அலி சப்ரி ரஹீமின்) உதவியாளரான ஏ.எச்.எம்.பைரூனும் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்படுகிறார். கட்டுநாயக்க விமான நிலையத்தின் Green Channel பகுதியில் வைத்தே இவர் கைது செய்யப்படுகிறார். அவரிடமிருந்து கைது செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளின் ஊடாக அவரிடமிருந்து மேலும், 19 ஸ்மார்ட் போன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாது, தன்னுடையது எனக்கூறி 0.828 கிராம் தங்கத்தை டுபாயிலிருந்து எடுத்து வருவதற்காக, அந்நாட்டு சுங்க அதிகாரிகளால் ஏ.எச்.எம்.பைரூனுக்கு (அலி சப்ரியின் உதவியாளருக்கு) வழங்கப்பட்டிருந்த ஆவணம் ஒன்றையும்  அதிகாரிகள் கண்டுபிடிக்கிறார்கள்.

இதற்கு மேலதிகமாக, அலி சப்ரி ரஹீமால் சட்டவிரோதமாக  நாட்டுக்குள் எடுத்துவர முயற்சித்த தங்கம் மற்றும் தங்க நகைகளில், தங்க நகைகள் அனைத்தும் அலி சப்ரி ரஹீமின் உதவியாளரின் பெயரில் டுபாய் சுங்கப் பிரிவிடம் பதிவு செய்யப்பட்டிருப்பதும், இவற்றை நாட்டுக்குள் எடுத்து வருவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வரப்பிரசாதத்தை அலி சப்ரி ரஹீம் தவறாகப் பயன்படுத்தினார் என பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு சுங்கத் திணைக்களம் அனுப்பியுள்ள கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக  அலி சப்ரி ரஹீமிடமிருந்த கண்டுபிடிக்கப்பட்ட  2515.9 கிராம்  தங்க பிஸ்கட்டுகள்  கொள்வனவு செய்யப்பட்டமைக்கான எந்தவிதமான ஆவணங்களும் பாராளுமன்ற உறுப்பினரிடம் இல்லை என்பதையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வரப்பிரசாதத்தைப் பயன்படுத்தி, சுங்கக் கட்டளைச் சட்டத்தை மீறி அலி சப்ரி ரஹீம் தங்கம், தங்க நகைகள்  மற்றும் ஸ்மார்ட் போன்களை நாட்டுக்குள் எடுத்துவர முயற்சித்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுங்கத் திணைக்களம் பாராளுமன்றத்துக்கு கடிதம் ஊடாக எழுத்துமூலம் அறிவித்திருக்கிறது.

மேலும், பாராளுமன்ற உறுப்பினரால் நாட்டுக்குள் சட்டவிரோதமாக எடுத்துவர முயற்சித்த மொத்தத் தங்கத்தின் பெறுமதி 74,096,990 ரூபாய் எனவும் அவரால் கொண்டுவரப்பட்ட 91 ஸ்மார்ட் போன்களின் மொத்தப் பெறுமதி 4,288,500 ரூபாய் எனவும் சுங்க அதிகாரிகளின் விசாரணை இறுதியில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

சுங்கக் கட்டளைச் சட்டத்துக்கு அமைவாகவும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக அலி சப்ரி ரஹீமால் சட்டவிரோதமாக எடுத்துவரப்பட்ட தங்கம் மற்றும் ஸ்மார்ட் போன்கள் அரசுடமையாக்கப்பட்டதோடு, 7.4 மில்லியனுக்கும் அதிகமான அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரின் உதவியாளரால் நாட்டுக்குள் எடுத்துவர முயற்சித்த ஸ்மார்ட் போன்கள் மற்றும்  119,305 ரூபாய் பெறுமதிவாய்ந்த சிகரட் பெட்டிகளும் அரசுடமையாக்கப்பட்டு, ஒரு இலட்சத்துக்கும் அதிகமான அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *