அரசை முடக்க சதி ! அமைச்சர் ரிஷாட் கவலை

அரசாங்கம் முன்னெடுத்துள்ள பாரிய அபிவிருத்தி திட்டங்களையும் மக்கள் பணிகளையும் இல்லாமலாக்குவதற்கும் முடக்குவதற்குமான பல சதிகளுக்கு மத்தியிலே தொடர்ந்தும் துரிதமாக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழான பதிவாளர் திணைக்களத்தின் ஒரு நாள் நடமாடும் சேவையை இன்று (16 ) அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

பதிவாளர் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் விரைவாக பதிவு செய்பட்டு 24மணி நேரங்களில் அவற்றிற்கு உரித்தான ஆவணத்தை கையளிக்கும் புதிய திட்டத்திற்கான அங்குராபப்பண நிகழ்வு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வவுனியா அரசாங்க அதிபர் ஐ. எம் ,ஹனீபா ,மேலதிக அரசாங்க அதிபர் திரேஷ் குமார் காணிப்பதிவாளர் அற்புத ராஜா , பிரதேச செயலாளர்கள் , பிரசித்த நொத்தாரிசுகள் உட்பட அரசியல் முக்கியஸ்தர்களும் இதில் பங்கேற்றனர்.

அமைச்சர் இங்கு உரையாற்றிய போது கூறியதாவது ,

தற்போது மூவின மக்களும் ஒற்றுமையாக வாழும் நல்ல சூழல் மலர்ந்து வருகின்றது.

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களுக்கும் முன்னெடுப்புகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சிறுபான்மைக்கட்சிகள் ஒன்று பட்டு ஒத்துழைக்கும் தன்மையும் மக்களின் தேவைகளுக்கு செவி சாய்க்கும் நல்ல சகுனமும் தற்போது உருவாகி இருக்கின்றது.

வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாங்கள் பேதங்களுக்கு அப்பால் முழு சக்தியையும் பயன்படுத்தி அரச அதிபர், ஆளுநர் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உட்பட அதிகாரிகளுடன் இணைந்து மக்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.”  என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *