ரூ. 700 வரலாற்று வெற்றி ! மார்தட்டுகிறார் தொண்டமான்!!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 700 ரூபா கிடைத்துள்ளது. இது 40 சதவீத சம்பள அதிகரிப்பாகும். இதை வரவாற்று வெற்றியாகமே நாம் பார்க்கின்றோம் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் எம்.பி. தெரிவித்தார்.

கொட்டகலை சீ.எல்.எப் கூட்ட மண்டபத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

‘ தோட்டத்தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அடிப்படை நாட்சம்பளமானது 40 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டு 700 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

நிலையான கொடுப்பனவாக 50 ரூபா வழங்கப்படும். அதாவது நாளொன்றுக்கு 750 ரூபா சம்பளம் கிடைப்பது உறுதி.

ஊழியர் சேமலாப நிதி மற்றும் விலைக்கேற்ற கொடுப்பனவு உள்ளிட்ட தொகைகளுடன் 855 ரூபாய் நாளொன்றுக்கு கிடைக்கின்றது.

தொழிற்சங்கங்கள் ஆயிரம் ரூபாய் கோரியதால்தான் 750 ரூபாவை வென்றெடுக்க முடிந்தது. 700 ரூபா கோரியிருந்தால் அதைவிட குறைவாகவே வழங்க முன்வந்திருப்பார்கள்.

எனவே, இதை விட உயர்வான சம்பளம் ஒன்றை தொழிலாளர்களுக்கு எவரேனும் பெற்றுக்கொடுக்க முடியும் என்றால் அவர்கள் முன்வரும் போது நாமும் ஆதரவு தருகின்றோம்.

எதிர்வரும் திங்கட்கிழமை சம்பளம் தொடர்பில் கையொப்பம் இடப்படவுள்ளது. ஆரம்பத்தில் ஒரு வருடத்திற்கு ஒரு முறை ஒப்பந்தம் செய்யப்பட்ட கூட்டு ஒப்பந்தம் பின் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை செய்யப்பட்டது.

அதுவே தொடர்ச்சியாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கூட்டு ஒப்பந்தம் செய்யப்படும் என்ற கையொப்பம் இடப்படவுள்ளது. மூன்று வருடங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தம் செய்யப்படும் என சொல்லப்படுவது முற்றிலும் பொய்யான விடயமாகும்.

சிலர் அரசியல் இலாபம் கருதி இவ்வாறு மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கின்றனர். இந்த புதிய ஒப்பந்தத்தில் ஒக்டோபர் மாதம் 14ம் திகதி முடிவுற்ற கூட்டு ஒப்பந்த காலப்பகுதியிலிருந்து திங்கட்கிழமை புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் காலம் வரையிலான நிலுவை கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இதற்கென அமைச்சர் நவீன் திஸாநாயக்க தேயிலை சபையின் ஊடாக 150 மில்லியன் ரூபாவை வழங்கவுள்ளதாக தெரிவித்தார். அதற்கு அவருக்கு நன்றி கூற வேண்டும்.

சம்பள உயர்வுக்காகவேண்டி கடந்த மூன்று மாதங்களாக அணியப்பட்டுவந்த கறுப்பு சட்டையையும் கழற்றிவிட்டேன். சம்பள உயர்வு வெற்றி.” என்றும் கூறினார்.

( க.கிசாந்தன்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *