பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமாரின்  பாராளுமன்ற உரை ! 

நேற்றைய தினம் நமது நாட்டிற்கு மிகப்பெரிய தலையிடியாக மாறி உள்ள விடயம் தொடர்பில் விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆட்சியாளர்களின் தவறான பொருளாதார கொள்கை மற்றும் தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் காரணமாக பலர் நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது நமது நாட்டுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது.

குறிப்பாக, நமது நாட்டை எடுத்துக் கொண்டால் கொரோனா வைரஸ்
தாக்கம் மற்றும் பின்னர் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி நிலை காரணமாக பல துறை சார்ந்த நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்.

இவர்களுடைய வெளியேற்றத்திற்கு வெறுமனே பொருளாதார வீழ்ச்சியை மாத்திரம் காரணமாக கூறிவிட்டு செல்ல முடியாது.

அதற்கு மேலதிகமாக, நாட்டில் ஸ்திரமற்ற ஆட்சி ,ஆட்சியாளர்களின் கெடுப்பிடி,
அனாவசிய வரி விதிப்பு, சுதந்திரமாக பணியாற்ற முடியாத சூழ்நிலை, ,
அச்சுறுத்தல், அரசியல் பழிவாங்கல் போன்ற பல்வேறு காரணிகள் இந்த நிலைமையை ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்த அரசாங்கம் அவர்களது வியாபார நண்பர்களுக்கு அனாவசிய
வரிச் சலுகைகள் வழங்கியது – தேவையற்ற உரக் கொள்கையை அறிமுகப்படுத்தி உள்நாட்டு விவசாய உற்பத்தியை நலிவடையச் செய்தது, ,கடனுக்கு மேல் கடன் வாங்கி, கட்டுங்கடங்காமல் பணம் அச்சிட்டு,
ரூபாவின் பெருமதியை வலுவிழக்கச் செய்து. நாடு கடன் செலுத்தும் நிலையில் இல்லை – என திவால் நிலையை அறிவித்தது.
உரிய நேரத்தில் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லாமல் இழுத்தடிப்பு செய்தது.

இந்தக் காரணங்களால் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு நாட்டு மக்கள் அனைவரும் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இறுதியில், இந்த அரசாங்கம் காலதாமதமாக சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று கடுமையான நிபந்தனைகளுக்கு இணங்கி முழு சுமையையும் நாட்டு மக்களின் தலையில் சுமத்திபுள்ளது.

வருமானத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியினால் இலங்கை மக்கள் மத்தியில் கடுமையான சமூக அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

மின் கட்டணம் பெருமளவு அதிகரித்துள்ளது -, எரிப்பொருள் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ச்சியாக அதிகரிக்கிறது. வரிக்கு மேல் வரி விதித்து நாட்டில் மக்கள் வாழ முடியாத நிலைமை எற்பட்டுள்ளது.

இலங்கையில் 12.3 மில்லியன் மக்கள் பொருளாதார அபாய நிலையை
எட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்படி, இலங்கையில் ஒவ்வொரு 10 பேரில் 6 பேர் அதாவது 55.7% வீதமானவர்கள் அபாயகரமான பொருளாதர நிலையை எட்டியுள்ளனர்.

இதனை பொறுத்துக்கொள்ள முடியாத புத்திஜீவிகள், துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட நாட்டு மக்கள் வெளிநாடுகளை நோக்கிச் சென்றனர்.

இன்று நமது நாட்டை எடுத்துக் கொண்டால் சுகாதார துறை இந்த விடயத்தில் பாரிய பாதிப்பை சந்தித்து இருக்கிறது.
குறிப்பாக, கடந்த ஒரு வருட காலப்பகுதிக்குள் 842 சிரேஷ்ட வைத்திய அதிகாரிகள் நாட்டை விட்டு சென்றுள்ளனர். அத்துடன் 274 விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு சென்றுள்ளனர்.
மேலும் அவசர சிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள்
வெளியேறியுள்ளதுடன் மேலும் நூற்றுக்கணக்கான பயிற்சி பெற்ற தாதியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
பயிற்சிக்காக சென்ற 67 விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் சுமார் 400 வைத்தியர்கள் நாடு திரும்பவில்லை என்றும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக, நாட்டினுடைய சுகாதார துறை பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நாட்டில் பல வைத்தியசாலைகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை இவ்வாறு வீழ்ச்சியை சந்தித்து இருக்கின்ற இந்த நிலையில் கல்வித் துறையும் பாரிய சவாலை எதிர்கொண்டு இருக்கிறது.

நாட்டில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
சுமார் 13,000 விரிவுரையாளர்கள் நாட்டில் இருக்க வேண்டிய நிலையில் 6,500 விரிவுரையாளர்கள் மாத்திரமே இருக்கின்ற நிலையில், கடந்த ஒரு வருடங்களில் மாத்திரம் சுமார் 500 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தங்களுடைய தொழிலை விட்டு வெளிநாடு சென்றுள்ளனர். மேலும், இன்னும் 25% அதாவது 1500 பேர் வெளியேறும் நிலையில் உள்ளனர்.
இதன் காரணமாக பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகி எதிர்கால கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ள மாணவர்களுக்கு பாரிய ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களில் குறிப்பிட்ட சில பீடங்களுக்கான விரிவுரையாளர்கள் பற்றாக்குறை காரணமாக கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் பொறியியலாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் உள்ள நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளதால் குறிப்பாக, மின்சார சபை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகள் பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.

குறிப்பாக, சுமார் 10,000 ற்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறி இருப்பதாக இலங்கை கணனி சங்கம் கூறியிருப்பதை இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கனடா , இங்கிலாந்து போன்ற நாடுகளில் குடியுரிமை கோரி இலட்சக்கணக்கான நிபுணர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அத்துடன் அரசாங்க உதவிகளில் வெளிநாடுகளுக்கு பயிற்சிக்காக செல்லும் தொழில் நிபுணர்கள் மீண்டும் நாட்டை வந்தடையாத துர்ப்பாக்கிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
வங்கித்துறை ஊழியர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதால் அந்த துறையிலும் பாரிய வெற்றிடம் நிலவுகிறது.

இது இவ்வாறு இருக்க, பொருளாதார பிரச்சினை தவிர்ந்து மறுமுனையில், , அச்சுறுத்தல்கள் மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறும், தொழில்சார் நிபுணர்களின் தொகையும் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, எடுத்துக் கொண்டால் அண்மைய நாட்களில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராசா அவர்களின் ராஜினாமா கடிதமும், அதற்காக அவர் முன் வைத்திருக்கின்ற காரணமும், முழு உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நாட்டு மக்களின் இறுதி நம்பிக்கையாக இருக்கிற, நீதித்துறையில் அதுவும் தீர்ப்பு வழங்கும் நீதிபதி ஒருவருக்கு, உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டு அவர் நாட்டை விட்டு தப்பிச் செல்லும் நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார் என்றால் ! நாட்டினுடைய சட்டம், ஒழுங்கு, நீதி என்பவை தொடர்பில் பாரிய சந்தேகங்கள் எழும்பியுள்ளன.
ஒரு நீதிபதிக்கு இவ்வாறான நிலைமை என்றால் !சாதாரண குடிமகனின் நிலைமை என்ன ? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

நாட்டினுடைய ஜனநாயகத்தை பாதுகாக்க கூடிய தூண்களில் ஒன்றாக காணப்படும் ஊடகத்துறையில் இருந்து சிரேஷ்ட ஊடகவியலாளர்கள்,, ஊடக நிபுணத்துவம் பெற்றவர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறாரகள்.

இதனால், இலங்கையினுடைய நற்பெயருக்கு மேலும் – மேலும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலைமைக்கு நாட்டில், அதிகார மோகத்திற்காக தன்னிச்சையான
தீர்மானங்களை எடுக்கும் ஆட்சியாளர்கள் பொறுப்பு கூற வேண்டும்.

ஆனால், இந்த அரசாங்கம் இவற்றை சிறிதளவேனும் கருத்தில் கொள்ளாமல் தற்போது சமூக ஊடக தணிக்கை சட்டமூலத்தையும் – பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்தையும் கொண்டுவர முயற்சிக்கிறது.
இதனால், நாடு அதல பாதாளத்திற்கு செல்லும் என்பதை நாம் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு இருக்கையில், சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணை கடன் இன்னும் கிடைக்கவில்லை.

IMF இன் 100 நிபந்தனைகளில் 38 நிபந்தனைகளே மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன.
IMF இன் நிபந்தனைகளின்படி இறக்குமதி கட்டுப்பாடு தளர்த்தப்பட வேண்டும்.
வருமானம் அதிகரிக்கப்படவேண்டும், செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
வெளிநாட்டு முதலீடுகளை ஈட்ட வேண்டும் என கூறியுள்ளது.

ஆனால், இதில் எதுவுமே நடைப்பெறவில்லை. அரச செலவீனங்கள்
மட்டும் அதிகரித்துள்ளது, நாட்டின் மொத்த செலவினங்களில் அரச செலவீனம் 51 % ஆகும்.

சர்வதேசத்தின் ஆதரவு என்பது இலங்கையினுடைய எதிர்கால முன்னேற்றத்திற்கு இன்றியமையாத ஒன்றாகும்.
சர்வதேசத்தின் ஆதரவை பெற வேண்டுமாயின் நாட்டில் ஜனநாயகம், அடிப்படை மனித உரிமை, போன்றவை பாதுகாக்கப்பட வேண்டும். குறிப்பாக,
“நாட்டு மக்களினுடைய ‘அடிப்படை வாழ்வாதார உரிமை’ பாதுகாக்கப்பட வேண்டும்.

மேற்கூறிய விடயங்களை, செயல்படுத்தக்கூடிய ஒரு நிலையான அரசாங்கமும்
நாட்டை நேசிக்கக் கூடிய தலைமையும், இன்று நமது நாட்டிற்கு இன்றியமையாத –அவசரமான –அத்தியாவசிய – தேவையாக மாறி உள்ளது.
ஆட்சியில் இருக்கும் அரசாங்கமும் அதன் தலைவர்களும் இந்த தேவையை பூர்த்தி செய்ய தவறியுள்ளனர்.

அதனால், தற்போதைய நிலையில் மக்களின் ஆதரவு பெற்ற
நிலையான அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதே பொருத்தமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *