பூமியை விட்டு விலகிச் செல்லும் நிலா – காத்திருக்கும் ஆபத்து!

 

பூமியின் சுழற்சியில் நிலவின் பங்கு முக்கியமானது. ஆனால் ஆண்டுதோறும் சராசரியாக 3.78 சென்டிமீட்டர் அளவுக்கு நிலவானது பூமியை விட்டு விலகிச் செல்கிறது. இதனால் எதிர்காலத்தில் பூமிக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

அமெரிக்கா, சோவியத் ரஷ்யா, போன்ற நாடுகள் பல ஆண்டுகளுக்கு முன்பே நிலவுக்கு விண்கலங்களை அனுப்பி சோதனை செய்துள்ளது. இத்தகைய பயணங்களின்போது நிலவின் மேற்பரப்பில் ‘ரெட்ரோ ரிஃப்ளெக்டர்’ எனப்படும் ஒரு வகை கண்ணாடியை நிலவில் அவர்கள் பதித்தனர். அதை வைத்துதான் பூமிக்கும் நிலவுக்கும் இடையான தூரம் அளக்கப்படுகிறது. இது எப்படி? என்று கேள்வி உங்களுக்கு எழலாம். பூமியிலிருந்து லேசர் ஒளிக்கற்றைகளை விஞ்ஞானிகள் நிலவுக்கு அனுப்புவார்கள். அந்த லேசர் நிலவில் உள்ள கண்ணாடியில் பட்டு பிரதிபலித்து மீண்டும் பூமியை நோக்கி வரும். அந்த லேசர் கற்றை நிலவுக்கு சென்று பூமிக்கு திரும்பி வரும் நேரத்தை வைத்து பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான தூரம் அளக்கப்படுகிறது.

பூமியின் மீது நிலாவின் ஈர்ப்பு விசை படுவதால் பூமியில் உள்ள கடலை அது பிடித்து இழுக்கிறது. இதன் காரணமாகவே கடலில் அலைகள் உருவாகின்றன. இந்த கவர்ச்சி விசையால்தான் பூமியின் சுற்றும் வேகம் நிர்ணயிக்கப்படுகிறது. பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்ளும் போது நிலவும் அதை பிடித்து இழுப்பதால் பூமியின் சுழற்சி வேகம் குறைகிறது. இந்நிலையில் பூமியிலிருந்து நிலவானது கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் செல்வதால் பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்ளும் நேரம் அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

40 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்வதற்கு எடுத்துக்கொண்ட நேரம் 22 மணி நேரமாகவே இருந்தது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக நிலவு பூமியை விட்டு விலகிச் செல்வதால் அது சிறுக சிறுக அதிகரித்து தற்போது 24 மணி நேரத்தில் வந்து நிற்கிறது. எதிர்காலத்தில் பூமியை விட்டு நிலவு மேலும் விலகிச்சென்றால் இந்த நேரம் அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *