பிரபாகரனுக்குப் பின் சம்பந்தன்; அஷ்ரப்புக்குப் பின் ரிஷாத்……….!

இப்போது சர்ச்சையில் அதிகம் சிக்கியிருக்கும் அரசியல்வாதி என்றால் அது அமைச்சர் ரிஷாத் பதியுதீன்தான்.

அவரது ஆதரவாளரான முஸ்லிம் ஊடகவியலாளர் ஒருவர் நேற்று என்னுடன் பேசிக் கொண்டிருந்தார்.

“நடப்பது எல்லாம் நன்மைக்கே” – என்றுதான் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கருதுகின்றார் என்றார் அவர்.

“இந்த நெருக்கடியிலும் அப்படிக் கருதுகின்றாரா?” என்று கேட்டேன்.

“ஆம்” – என்று பதிலளித்த அந்த ஊடகவியலாளர் சொன்ன விளக்கம் என்னைச் சிந்திக்க வைத்தது.

“முஸ்லிம் தரப்பில் ஒரேயொரு தலைவர் மட்டுமே பிற தரப்பினரால் இலக்கு வைத்துத் தாக்கப்படுகின்றார். அவர் ரிஷாத் மட்டுமே.

இதனால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் ஆதரவு, பரிவு எல்லாம் அவர் புறம் திரும்பியிருக்கின்றன.

இந்த ஒரு மாத கால நெருக்கடிக்குள் இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஒட்டுமொத்தத் தலைவராக அவர் உயர்ந்து வருகின்றார்.

தனி ஒருவராக நின்று இந்த எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் – அதேநேரம் முஸ்லிம் மக்களுக்கான தனது வழமையான பணிகளைத் தடைப்பட விடாமல் – சுறுசுறுப்புடனும் மன ஓர்மத்துடனும், துணிவுடனும் செயற்பட்டு வரும் அவரைப் பார்த்து முழு முஸ்லிம் சமூகமுமே வியப்பில் ஆழ்ந்துள்ளது.

தலைவர் பிரபாகரனுக்குப் பின்னர் தமிழரின் தேசியத் தலைமை சம்பந்தனுக்குக் கிட்டியது. அதுபோல அஷ்ரப்புக்குப் பின்னர் இலங்கை முஸ்லிம்களின் தேசியத் தலைமை எவ்விடம் என்ற கேள்வி நீடித்தது. அது ஹக்கீமா என்று பலரும் சிந்தித்தனர். ஆனால், இப்போதைய நெருக்கடி அந்தத் தலைமைப் பொறுப்பை ரிஷாத்திடம் ஒப்படைத்துவிட்டது.

வேண்டுமானால் ரிஷாத்தின் அமைச்சுப் பதவியை தென்னிலங்கை அரசியல் கட்டமைவு பறிக்கலாம். ஆனால், இலங்கை முஸ்லிம்களின் ஏகோபித்த தேசியத் தலைவர் என்ற மகுடம் அவருக்குச் சூட்டப்பட்டு விட்டது. அதைத் தென்னிலங்கையால் பறிக்க முடியாது” – என்றார் அவர்.

அவரது கருத்து யதார்த்தத்தில் சரியா என்பது எனக்குத் தெரியவில்லை. காலம்தான் அதற்குப் பதிலைச் சொல்ல வேண்டும்.

A blessing in disguise (இழப்பிலும் ஆசி) என்பது இதைத்தானோ…!

– மின்னல் –

(இனி இது இரகசியம் அல்ல – ‘காலைக்கதிர்’ – 26.05.2019)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *