ஸ்ரீலங்கனுக்கு ஆறு மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு

எட்டு விமானங்களின் தாமதம் காரணமாக தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு 6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான நான்கு விமானங்கள் கடந்த 28ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு பல மணித்தியாலங்கள் தாமதமானதால் பயணிகள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.

சிங்கப்பூர், பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கான விமானங்கள் பல மணி நேரம் தாமதமாகவே சென்றிருந்தன.

28ஆம் திகதி அதிகாலை 2.30 மணியளவில் பாகிஸ்தானின் லாகூர் நோக்கிப் புறப்படவிருந்த யுஎல் 153 என்ற விமானம் தாமதமானதால் அந்த விமானத்தில் பயணம் செய்விருந்த  இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், பயணம் செய்ய முடியாததால் மீண்டும் திரும்பிவர நேர்ந்தது.

அதன்பின், இந்தியாவின் சென்னை மற்றும் பங்களாதேஷ் தலைநகர்டாக்கா செல்லும் விமானங்கள் தாமதமானதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திற்கு  28ம் திகதி பிற்பகல் 12.15 மணிக்கு புறப்பட வேண்டிய யுஎல் 308 என்ற விமானம் சுமார் ஐந்து மணி நேரம் தாமதமாகவே புறப்பட்டிருந்தது.

இதேவேளை, கடந்த 27ம் திகதி அதிகாலை சிங்கப்பூர் செல்லவிருந்த விமானத்தில் ஏற்பட்ட பிரச்சினையால், வணிக வகுப்பு பயணிகள் சிலர், இந்தோனேசியாவின் ஜகார்த்தா வழியாக சிங்கப்பூருக்கு மற்றொரு விமானத்தில் செல்ல நேரிட்டது.

கடந்த ஒருவாரக்காலத்தில் மாத்திரம் சுமார் எட்டு விமான சேவைகள் தாமதமாகியுள்ளதால் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு 6 மில்லியனர் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *