“Sex” இல்லாத திருமண வாழ்க்கை சாபக்கேடு! தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!

 

குடும்ப நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட விவாகரத்து வழக்கில், செக்ஸ் இல்லாத திருமண வாழ்க்கை சாபக்கேடு என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2004ம் ஆண்டு டெல்லியை சேர்ந்த தம்பதிக்கு இந்து முறைப்படி திருமணம் நடந்தது. திருமணமான 35 நாட்களில் அவரது மனைவி, தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

மீண்டும் தனது கணவர் வீட்டிற்கு திரும்பவில்லை. அதனால் அந்தப் பெண்ணின் கணவர், குடும்ப நீதிமன்றத்தில் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். அதேநேரம் தனது கணவரின் குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை செய்ததாக, அந்தப் பெண்ணின் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டு, வழக்கும் பதியப்பட்டது. விவாகரத்து தொடர்பான வழக்கை விசாரித்த குடும்ப நீதிமன்றம், தம்பதிக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அந்தப் பெண் மேல் முறையீடு செய்தார்.

அந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ் குமார் கைட், நீனா பன்சால் கிருஷ்ணா அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில், ‘திருமணமான தம்பதிக்குள், வேண்டுமென்றே உடலுறவு கொள்ள மனைவி மறுப்பது கொடுமையானது. தம்பதிக்குள் ‘செக்ஸ்’ இல்லாத திருமணம் ஒரு சாபக்கேடானது.

திருமணமாகி 35 நாட்கள் மட்டுமே வாழ்ந்த தம்பதிக்கு, குடும்ப நீதிமன்றம் விவாகரத்து உத்தரவு வழங்கி உள்ளது. அந்த உத்தரவை உயர் நீதிமன்றம் உறுதி செய்கிறது. வரதட்சணை கேட்டு தன்னை துன்புறுத்தியதாக மனுதாரர் (மனைவி) கூறியுள்ளார். ஆனால் அதற்கான ஆதாரம் இல்லை.தனது மாமியார் வீட்டில் வெறும் 35 நாட்கள் மட்டுமே மனுதாரர் வாழ்ந்துள்ளார். அதனால் எதிர்மனுதாரரின் (கணவர்) திருமண உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. அவர்களது திருமணம் முழுமையாக நடைபெறவில்லை. அது தோல்வியில் முடிந்துள்ளது.

கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக, இவ்வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால், எதிர்மனுதாரருக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதை புறக்கணிக்க முடியாது. வரதட்சணைக் கொடுமை தொடர்பான வழக்கை, அடுத்தடுத்த விசாரணையில் எடுத்துக் கொள்ளப்படும். எனவே விவாகரத்து உத்தரவுக்கு எதிரான மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *