777 படங்களை பார்த்து கின்னஸ் சாதனை!

திரைப்படத்தை ரசிக்காதவர்கள் உலகத்தில் யாராவது இருக்கிறார்களா என்ன? உலகம் முழுவதுமே பலவிதமான சினிமா ரசிகர்கள் உள்ளார்கள். தங்களுக்கு பிடித்தமான நாயகர்கள் நடித்த திரைப்படங்கள் என்றால் அதை பல முறை திரையரங்கிற்குச் சென்று பார்க்கும் பல ரசிகர்கள் நம் நாட்டிலும் இருக்கிறார்கள்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் திரைப்படம் பார்ப்பதில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். ஜாக் ஸ்வோப் என்பவர் ஒரே வருடத்தில் திரையரங்கில் மட்டும் 777 திரைப்படங்களை பார்த்து புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வின்செண்ட் க்ரோன் என்பவர் ஒரே வருடத்தில் 715 திரைப்படங்கள் பார்த்ததே சாதனையாக இருந்தது.
32 வயதாகும் ஸ்வோப், கின்னஸ் சாதனைக்காக தனது திரைப்படம் பார்க்கும் பயணத்தை ஜூலை 2022-ம் ஆண்டு மினியன்ஸ்: ரைஸ் ஆஃப் க்ரூ ( Minions : Rise of Gru ) என்ற திரைபடத்திலிருந்து தொடங்கி கடைசியாக ஜூலை 2023 அன்று இண்டியானா ஜோன்ஸ் ஆண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி ( Indiana Jones and the Dial of Destiny ) என்ற படத்தோடு நிறைவு செய்துள்ளார். இந்த சாதனைக்காக எல்லா திரைப்படங்களையும் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை பார்த்த ஸ்வோப், திரைப்படம் பார்க்கும் வேளையில் போனை நோண்டுவதோ அல்லது சாப்பிடுவதோ, குடிப்பதோ, தூங்குவதோ என எதையும் செய்யவில்லை.
நாமும் சும்மா இருந்தால் இதைவிட பல படங்களை பார்க்க முடியுமே, இதிலென்ன பெரிய சாதனை இருக்கிறது என பலர் நினைக்கலாம். ஆனால் ஸ்வோப் முழு நேர வேலை பார்த்துக் கொண்டே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். தினமும் பணி நேரம் முடிந்த பிறகு திரையரங்கிற்குச் செல்லும் ஸ்வோப், மூன்று திரைப்படங்கள் வரை பார்க்கிறார். அதுவே வாரயிறுதி நாட்கள் என்றால் இதைவிட கூடுதல் திரைபடங்களை பார்க்கிறார். சில சமயங்களில் தன் மனதை ஆசுவாசப்படுத்த பணிக்கு விடுமுறை எடுத்துக்கூட திரைப்படம் பார்க்கச் சென்றுள்ளார். வாரத்தில் எப்படியும் 16-17 திரைப்படங்கள் வரை பார்ப்பதை இலக்காக வைத்திருந்தார் ஸ்வோப்.
இந்த வருடம் பார்த்த படங்களில் புஸ் இன் பூட்ஸ்: தி லாஸ்ட் விஷ் ( Puss in Boots ) என்ற திரைபடத்தை மட்டும் 47 முறை பார்த்துள்ளார். ஸ்பைடர்மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் ( Spider-Man : Across the spider-verse ) மற்றும் தி டெவில் கான்ஸ்பிரசி ( The devil conspiracy ) ஆகிய இரண்டு திரைப்படங்களும் இவருக்கு மிகவும் பிடிக்குமாம்.

 

பொதுமக்களிடம் ஆட்டிஸம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த சாதனையை முயற்சி செய்துள்ளார் ஸ்வோப். ஏனென்றால் ஸ்வோப்பும் ஒருவகை ஆட்டிஸம் நோயான ஆஸ்பெர்கெர் நோய்க்குறியால் பாதிக்கப்பட்டுள்ளார். “இதுவொரு அற்புதமான பயணமாக இருந்தது. திரைப்படம் பார்ப்பதற்காகவே என்னுடைய வாழ்க்கையில் ஒரு வருடத்தை செலவழித்துள்ளேன். ஆனால் இவையெல்லாம் நல்ல காரணத்திற்காகவே செய்துள்ளேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. இனி வரும் காலங்களில் நானே எனது சாதனையை முறியடிக்கவும் வாய்ப்புள்ளது” என தனது கின்னஸ் சாதனை குறித்து சந்தோஷமாக கூறுகிறார் ஸ்வோப்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *