ஆபாசப் படங்களை தனிமையில் பார்ப்பது கிரிமினல் குற்றம்?

ஆபாசப் படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது கிரிமினல் குற்றம் அல்ல என கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதன்படி, குற்றம் சாட்டப்பட்டவர் மீதான கிரிமினல் வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், குழந்தைகள் இன்டர்நெட் பயன்படுத்துவதைக் கண்காணிக்கவும் அறிவுரை வழங்கியுள்ளது.
சாலையோரத்தில் நின்று செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக கைது செய்யப்பட்ட நபர் மீது தொடரப்பட்ட கிரிமினல் வழக்கை கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அந்த நபர் ஜூலை 2016 இல் ஆலுவா நகராட்சியில் கைது செய்யப்பட்டார்.
ஒருவர் தனது செல்போனில் ஆபாசமான புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பகிரவோ பகிரங்கமாக காட்சிப்படுத்தவோ செய்யாமல், தனிப்பட்ட முறையில் பார்ப்பது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றம் ஆகாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இதுபோன்ற படங்களைப் பார்ப்பது ஒரு நபரின் தனிப்பட்ட விருப்பம் என்றும், நீதிமன்றம் அவரது தனியுரிமைக்குள் ஊடுருவ முடியாது என்றும் நீதிபதி பி.வி.குன்ஹிகிருஷ்ணன் கூறியுள்ளது.
மேலும், வழக்கு விவரங்களை மேற்கோள் காட்டிப் பேசிய நீதிபதி, மனுதாரர் வீடியோவை பகிரங்கமாக காட்சிப்படுத்தியதாக அரசு தரப்பு கூறவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
“ஒரு நபர் தனிப்பட்ட முறையில் ஆபாசமான படத்தைப் பார்ப்பது இந்திய தண்டனை சட்டத்தின் 292வது பிரிவின் கீழ் வரும் குற்றம் ஆகாது என்று நான் கருதுகிறேன். இதேபோல், ஒருவர் தனிப்பட்ட முறையில் தனது மொபைல் போனில் ஆபாசமான வீடியோவைப் பார்ப்பதும் இந்திய தண்டனை சட்டத்தின் 292வது பிரிவின் கீழ் வரும் குற்றமாகாது” என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
“குற்றம் சாட்டப்பட்டவர் ஏதேனும் ஆபாசமான வீடியோக்கள் அல்லது புகைப்படங்களைப் பரப்பவோ அல்லது விநியோகிக்கவோ அல்லது பகிரங்கமாக காட்சிப்படுத்தவோ முயன்றால் மட்டுமே, அது இந்திய தண்டனை சட்டத்தின் 292வது பிரிவின் கீழ் குற்றம் ஆகும்” என்றும் நீதிபதி எடுத்துரைத்திருக்கிறார்.
தனிப்பட்ட, பாலியல் உறவுகளை வைத்திருப்பது நம் நாட்டில் சட்டவிரோதமானது அல்ல என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. ஒருமித்த சம்மதத்துடனான உடலுறவு அல்லது தனிப்பட்ட முறையில் ஆபாசப் படம் பார்ப்பது ஆகியவற்றை அங்கீகரிக்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.
இதன்படி, குற்றம் சாட்டப்பட்டவர் மீதான கிரிமினல் வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், குழந்தைகள் கண்காணிப்பு இல்லாமல் இன்டர்நெட் வசதி உள்ள மொபைல் போன்ற சாதனங்களைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என்றும் அறிவுரை வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *