தெற்காசியாவின் சிறந்த கல்வி மையமாக இலங்கை?

தெற்காசியாவின் கல்வி மையமாக இலங்கை மாற்றப்படும் என உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேஷ் ராகவன் தெரிவித்தார்.

அந்த நோக்கத்திற்காக, புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் அறிவுசார் சுதந்திரத்தை உருவாக்கவும், அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் சமூகத்துடன் உறவை ஏற்படுத்தவும், பல்கலைக்கழகங்களை சர்வதேசமயமாக்கவும் முன்மொழிந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (08) நடைபெற்ற ஊடக சந்திப்பில் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்,

உலகத் தரத்தின்படி, ஒரு பல்கலைக்கழகத்தில் பதினைந்து மாணவர்களுக்கு ஒரு விரிவுரையாளர் என்ற விகிதத்தில் கல்விக் கட்டமைப்பு இருக்க வேண்டும். ஆனால் நமது நாட்டில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் முப்பது மாணவர்களுக்கு ஒரு விரிவுரையாளர் மாத்திரமே இருக்கிறனர். உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கும், பௌதிக வளங்கள் மற்றும் மனித வளங்களை மேம்படுத்துவதற்கும் கல்வி சீர்திருத்தம் முன்மொழியப்பட வேண்டும்.

மேலும், உயர்தரத்தில் கல்வி கற்றும் மாணவர்களில் அதிகமானோர் கலைப் பிரிவில் கற்று வருகின்றனர். இதற்குக் காரணம், இந்நாட்டில் உள்ள உயர்தரப் பாடசாலைகளில் பெரும்பாலான பாடசாலைகளில் கலைப் பிரிவு பாடங்கள் மாத்திரமே கற்றுக்கொடுக்கப்படுகின்றன. எனவே, பல்கலைக்கழகக் கல்விச் சீர்திருத்தத்தில், கலைப் பிரிவு படிக்கும் மாணவ, மாணவியரும் இளங்கலை விஞ்ஞானப் பட்டம் பெறும் வகையில் கல்வி முறை உருவாக்கப்பட வேண்டும். உயர்தர விஞ்ஞானப் பாடங்கள் தொடர்பில் பாடசாலை ஆசிரியர்களுக்கு மேலதிகமாக தனியார் கல்வி நிலையங்களில் கற்பிக்கும் ஆசிரியர்களின் நேரத்தைப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது அதிகரித்துள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப பௌதிக மற்றும் மனித வளங்களை அதிகரிக்க கல்வி சீர்திருத்தத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டும். உயர்தரத்தில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களையும் பல்கலைக்கழகத்திற்கு இணைத்துக் கொள்ள வேண்டுமாயின், ஆய்வு கூடங்கள், விடுதிகள் நிர்மாணிப்பது உள்ளிட்ட பௌதிக வசதிகளை வழங்கவும் மற்றும் மனித வளங்களை மேம்படுத்துவதற்கும் இரண்டு ரில்லியன் ரூபா தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

திறந்த பல்கலைக்கழகத்தை விரிவுபடுத்தல், தற்போதுள்ள பல்கலைக்கழகங்களில் மேலதிக வளாகங்களை உருவாக்குதல், தொழில்நுட்பம் சார் பாடநெறிகள் கற்பிக்கப்படும். அரச அனுமதி பெற்ற தனியார் பல்கலைக்கழகங்களில் (TOP UP Degree) பட்டங்களை வழங்குதல், தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்க வாய்ப்புகளை வழங்குதல், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் கிளைகளாக இந்நாட்டில் இயங்கிவரும் கல்வி நிறுவனங்களை கண்காணிப்புக்கு உட்படுத்தி மேம்படுத்தல் மற்றும் மெய்நிகர் பல்கலைக்கழகங்களை (Virtual University) உருவாக்குதல் போன்ற வேலைத்திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளது. அத்துடன், அவை முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் உயர்தரத்தில் சித்திபெறும் அனைவரும் பட்டங்களைப் பெற்று தொழில்வாய்ப்புகளை இலகுவாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *