சூரியனை ஆய்வு செய்தால் என்ன நடக்கும்?

 

நிலவைத் தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் ஆதித்யா L1 என்ற செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் திட்டம் இதுவாகும். இது பாராட்டுதலுக்குரியதுதான் என்றாலும், நாம் ஏன் சூரியனை ஆய்வு செய்ய வேண்டும்? என்ற கேள்வியும் நம்முள் எழுகிறது.

சூரியக் குடும்பத்தின் உயிர்நாடியாக இருப்பது சூரியன் தான். சூரியன் இல்லை என்றால் பூமியில் எந்த ஒரு உயிரும் இருக்க வாய்ப்பில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் பூமியில் எந்த ஒரு உயிர்களும் உருவாகியே இருக்காது எனக் கூறலாம். எனவே உயிர்களின் உருவாக்கத்திற்கு அடிப்படையாக இருக்கும் சூரியனை நாம் புரிந்துகொள்வது அவசியமான ஒன்றாகும். மேலும் சூரியனைப் பற்றி நாம் புரிந்து கொள்வது மூலமாக, பால்வெளி அண்டத்தில் உள்ள பிற நட்சத்திரங்களைப் பற்றியும் நாம் அறிய முடியும்.

பூமியில் ஏற்படும் வானிலை மற்றும் காலநிலை மாற்றங்களுக்கு சூரியனே அடிப்படை காரணமாக இருக்கிறது. எனவே பூமியில் ஏற்படும் சில செயல்பாடுகளைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள சூரியனை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். இது மட்டுமின்றி சூரியப் புயல்கள் மற்றும் கொரோனா மாஸ் எஜெக்ஷன் என பூமியை அச்சுறுத்தும் சில செயல்பாடுகளையும் சூரியன் கொண்டிருக்கிறது. இத்தகைய நிகழ்வுகள் எதனால் ஏற்படுகிறது, இவற்றால் பூமிக்கு எதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை சூரியனை நாம் ஆய்வு செய்வது மூலமாகவே தெரிந்துகொள்ள முடியும்.

இதுவரை சூரியனைப் பற்றி தெரிந்துகொள்ள ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பிற நாடுகளின் ஆய்வுக்கலங்களில் இருந்து கிடைத்த தகவல்களையே இஸ்ரோ தனது ஆய்வுக்காக பயன்படுத்திக் கொண்டிருந்தது. ஆனால் இனி இந்த ஆதித்யா திட்டத்தின் மூலம் தனது சொந்த ஆய்வுக்கலனின் தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகளால் பயன்படுத்த முடியும்.

இது இந்தியர்களின் விண்வெளி அறிவையும், ஆர்வத்தையும் அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *