சுரேஷ் சலே குற்றச்சாட்டை நிராகரித்தார் – செனல் 4

பிரித்தானியாவின் செனல் 4 இன்று (05) ஒளிபரப்பவுள்ள இந்நாட்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சர்ச்சைக்குரிய ஆவணப்பட நிகழ்ச்சியின் ட்ரெய்லர் வௌியிடப்பட்டுள்ளது.

இதன் முழு காணொளி இங்கிலாந்து நேரப்படி இன்று இரவு 11 மணிக்கு ஔிபரப்பப்படவுள்ளது.

குறித்த ஆவணப்பட நிகழ்ச்சி தொடர்பில் விசேட பாராளுமன்ற குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கையின் அரச புலனாய்வு சேவையின் சிரேஷ்ட அதிகாரியான சுரேஷ் சலேவுக்கும் ஈஸ்டர் தாக்குதலின் குண்டுதாரிகளுக்கும் இடையில் 2018ஆம் ஆண்டு சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக வெளியான செய்தியின் அடிப்படையில் இந்த காணொளி உருவாக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் தி டைம்ஸ் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, பிள்ளையான் குழுவின் ஊடகப் பேச்சாளராக இருந்த அசாத் மௌலானாவின் அறிக்கையின் அடிப்படையில் இந்த ஆதாரம் அமைந்துள்ளது.

இன்று வெளியான ட்ரெய்லரில், தொலைதூரப் பண்ணையில் அப்போதைய இராணுவப் புலனாய்வுப்பிரிவுத் தலைவர் சுரேஷ் சலேவுக்கும் தவ்ஹீத் ஜமாத் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே சந்திப்பை ஏற்பாடு செய்ததாக அசாத் மௌலானா கூறியுள்ளார்.

இந்தக் கூட்டத்தை ஒழுங்கமைக்குமாறு இராஜாங்க அமைச்சர் சிவனேஷ்துரை சந்திரகாந்தன் தன்னிடம் கேட்டதாக அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

அதற்கு முன்னர் சைனி மௌலவியை சந்திக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் அசாத் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபர், ஈஸ்டர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சஹ்ரானின் சகோதரர் என்பதை பின்னர் தான் கண்டுபிடித்ததாக அசாத் மௌலானா கூறினார்.

கூட்டத்தின் முடிவில் சுரேஷ் சலே தன்னிடம் வந்து ராஜபக்சக்கள் நாட்டில் பாதுகாப்பின்மையை உருவாக்க விரும்புவதாகவும் அதன் மூலம் தான் கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வர முடியும் என்றும் அசாத் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவோ அல்லது சிவனேஷ்துரை சந்திரகாந்தனோ பதிலளிக்கவில்லை என்றும் சுரேஷ் சலே இது தொடர்பான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் என்றும் செனல் 4  கூறுகிறது.

சஹ்ரான் உள்ளிட்ட குழுவுடன் சந்திப்பு நடந்ததாகக் கூறப்படும் நேரத்தில் தான் மலேசியாவில் இருந்ததாகவும், ஈஸ்டர் தாக்குதல் நடந்தபோது இந்தியாவில் தங்கியிருந்ததாகவும் சலே கூறியதாக செனல் 4 தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *