மூளையில் இருந்து வரும் தகவல்களை கணினிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்யும் கருவி கண்டுபிடிப்பு!

மூளையில் இருந்து வரும் சிக்னல்களை கணினிகளுக்கு மொழிபெயர்க்கக் கற்பிக்கும் தொழில்நுட்பத்தில், ஒரு புதிய முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இது பேச்சுப்பிரச்சனை இருப்பவர்களுக்கு உதவும் என சொல்லப்படுகிறது.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு மூலம் மூளையிலிருந்து வரும் சிக்னல்களை கணினிகளுக்கு மொழிபெயர்க்கக் கற்பிக்கும் தொழில்நுட்பத்தில் புதிய முன்னேற்றம் அடைந்துள்ளதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இது எலான் மஸ்கின் நியூரல்லிங்க் நிறுவனம் போன்றே செயல்படும் துறையில் மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தும்.

இந்தத் தொழில்நுட்பத்தால் பக்கவாத நோயால் பேசும் திறனை இழந்தவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க முடியும். குறிப்பாக விபத்துகளில் தங்கள் தசைகள் மீதான கட்டுப்பாட்டை இழந்தவர்களுக்கு அதை மீட்டெடுக்க உதவுவது உட்பட கணினியுடன் நமது மூளையை இணைப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் இது அதிகரிக்கும்.

இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் உயிரியல் மருத்துவப் பொறியாளர் சிந்தியா கூறுகையில்,” ஒருவர் மூளையில் இருக்கும் அதிக எண்ணிக்கையிலான நியூரான்களைப் படிக்க அல்லது அதிக எண்ணிக்கையிலான நியூரான்களைத் தூண்டும் தொழில்நுட்பம் ஒருவரிடம் இருந்தால், அதைக் கொண்டு பலருக்கு மறுவாழ்வு கொடுக்கலாம். விபத்தின் போது முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டு தங்களின் தசைகளுக்கான கட்டுப்பாடுகளை இழந்தவர்களுக்கு இந்தத் தொழில்நுட்பம் உதவக்கூடும்” என அவர் கூறினார்.

மேலும் இது குறித்து ஸ்டான்போர்ட் ஆராய்ச்சியாளரான ஜெய்மி ஆண்டர்சன் தன்னுடைய குடும்பத்தில் நடந்த ஒரு நிகழ்வை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். அதாவது அவருக்கு ஐந்து வயது இருக்கும்போது, ஒரு கார் விபத்துக்கு பிறகு அவருடைய தந்தை பிறரிடம் தொடர்பு கொள்ளும் திறனை இழந்தார். சிறுவயதில் என் அப்பா சொல்ல முயலும் விஷயங்களை என்னால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அதை அவரே முழுமையாக சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இது போன்ற ஒரு தொழில்நுட்பம் வந்தால் நன்றாக இருக்கும் என அப்போது எண்ணியிருக்கிறேன் என அவர் கூறினார்.

எனவே இந்த அற்புதமான தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தால், இனிவரும் காலங்களில் பேச முடியாதவர்களுக்கும், தண்டுவடம் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கும் உதவ முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *