ஜெயிலர் இரண்டே காட்சிகளில் வந்தாலும் தன் நடையிலேயே ரசிகர்களைக் கொண்டாட வைத்திருந்தார் சிவ ராஜ்குமார்.
இப்படத்தின் மூலம் தமிழகத்தில் பிரபலமடைந்தவரை பல்வேறு யூடியூப் சேனல்கள் பேட்டியெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய சிவ ராஜ்குமார், “சென்னையில் எனக்கு ஆட்டோ ஓட்டுநரிலிருந்து கூலி வேலை செய்யும் ஆட்கள் வரை நிறைய நண்பர்கள் இருந்தனர். ஜாதி, மதம் என எந்த வேறுபாடு இல்லாத பழக்கமிருந்தது. அங்கு, மிக எளிமையான வாழ்க்கையில்தான் இருந்தேன். என்னிடமிருந்து எதையும் எதிர்பார்க்கக்கூடாது என என் நண்பர்களிடம் சொல்வேன். பத்து ரூபாய் என்றால் அதைத்தான் என்னால் தர முடியும். அதற்கு மேல் கொடுக்க மாட்டேன். ராஜ்குமார் மகனிடம் நிறைய இருக்கும் என நினைப்பார்கள்.
ஆனால், என் வீட்டிலும் தேவைக்கு அதிகமாகக் கொடுக்க மாட்டார்கள். எனக்கு, நான் பெரிய நட்சத்திரம் என்கிற எண்ணம் இல்லை. சாதாரணமாகவே இருக்கிறேன். திடீரென ஒரு சாலை ஓரமாக வாகனத்தை நிறுத்தி சின்ன கடையில் உண்பேன். அப்போது, ரசிகர்கள் தொந்தரவு இருக்கும். ஆனால், அதை நான் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன். அந்தத் தொந்தரவிலுள்ள ஒரு பெருமை, சந்தோஷம், திமிர் இதெல்லாம்தான் வாழ்க்கை. என் அப்பா, அம்மா, தம்பி புனித் ஆகியோரின் மரணத்தைப் பார்த்துவிட்டேன். இழப்புகளிலிருந்து மீண்டு வருவது கஷ்டம். ஆனால், வாழ்க்கை சென்றுகொண்டே இருக்கும். என் பெற்றோர்கள், புனித் எல்லாரும் எனக்காக ஒருநாள் வருவார்கள் என நினைத்துக்கொள்வேன். அதிலுள்ள காத்திருப்பு, அவர்கள் என்னுடன் இருக்கிறார்கள் என்கிற நம்பிக்கையைத் தருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
சிவ ராஜ்குமார் நடிப்பில் கேப்டன் மில்லர், கோஸ்ட் ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.