இப்படி ஒரு திருமணத்தை பார்த்து இருக்கமாட்டீர்கள்!

இந்திய காதலனுக்காக பல்லாயிரம் கிமீ பறந்து வந்த தென் கொரிய காதலி, இங்கே காதலனை மணமுடித்து இந்தியாவின் மருமகளாகி இருக்கிறார்.
காதலுக்கு சாதி, மதம், மொழி, இனம் மட்டுமன்றி பூகோள எல்லைகளும் கிடையாது. இணையவெளியில் உலகமே ஒரு கிராமமாக சுருங்கிப் போனதில், தேச எல்லைகளைக் கடந்த காதலர்கள் பாடு கொண்டாட்டமாகி வருகிறது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சுக்ஜித் சிங் 4 வருடங்களுக்கு முன்னர் தென்கொரியா சென்றார். அங்கே பூஷன் நகர் காபி ஷாப் ஒன்றில் பணியாற்றிக் கொண்டே மேற்படிப்பை தொடர்ந்து வந்தார். காபி ஷாப்பின் காசாளராக பணியாற்றிய கிம் போ-நீ என்ற தென்கொரிய யுவதியை கண்டதும் சுக்ஜித் சிங் மனதில் மணியடித்தது.
கிம் போவுக்காக தென்கொரிய மொழியை கற்றுக் கொண்டார் சுக்ஜித். அதை வைத்து சீக்கிரமே அவரின் மனதிலும் இடம்பிடித்தார். பஞ்சாபி இளைஞனுக்கும், தென்கொரிய யுவதிக்கும் இடையிலான காதல் அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஜெகஜோதியாய் வளர்ந்தது. அண்மையில் 6 மாத விடுப்பில் இந்தியா திரும்பினார் சுக்ஜித் சிங்.
அப்போது தான் காதலனைப் பிரிந்திருப்பது எத்தனை துயரம் என கிம் போ உணர்ந்தார். 3 மாத சுற்றுலா விசாவில் சொல்லாமல் கொள்ளாமல் பஞ்சாப் வந்து, சுக்ஜித் சிங்கை மகிழ்ச்சியில் திணறடித்தார். இருவரின் காதல் கதையைக் கேட்ட சுக்ஜித்தின் உறவினர்கள் ஆச்சரியம் அடைந்தனர். பஞ்சாபிய காதல் திரைப்படங்களைப் போல ஆயிரக்கணக்கான கிமீ கடந்து செழித்த காதல் அப்பகுதியில் பிரபலமானது.
உள்ளூர் குருத்வாராவில் இருவருக்கும் மணமுடித்தனர். மண விழாவை ஒட்டி, பாரம்பரிய பஞ்சாபிய ஆட்டம் பாட்டம் என கிம் போ மகிழ்ச்சியாக இருக்கிறார். அவருக்கு பஞ்சாபி உட்பட இந்திய மொழிகள் எதுவும் தெரியாது. ஆனால் எப்படியோ பஞ்சாப் இசைக்கும், பாடல்களுக்கும் அடிமையாகி விட்டார். சுற்றுலா விசா முடிந்ததும் கிம் போ, தென் கொரியா திரும்ப இருக்கிறார். தொடர்ந்து சுக்ஜித்தும் பூஷனுக்கு பறக்க இருக்கிறார். பொருளாதார அளவில் அங்கே இருவரும் தங்கள் இலக்கை அடைந்ததும், தங்களது மிச்ச மணவாழ்க்கையை பஞ்சாப்பில் கழிக்க முடிவு செய்துள்ளனர்.
அண்மையில் பாகிஸ்தான் – இந்தியா இடையிலான எல்லை தாண்டிய 2 காதல்கள் பரபரப்பாக செய்திகளில் அடிபட்டன. பாகிஸ்தானிலிருந்து உத்தரபிரதேசத்துக்கு சட்டவிரோதமாக ஊடுருவிய சீமா ஹைதர், ராஜஸ்தானிலிருந்து பாகிஸ்தான் காதலனுக்காக சட்டப்படி சென்ற அஞ்சு என இரு பெண்களின் காதல் கதைகள் அதிகம் பேசப்பட்டன. அவற்றின் மத்தியில் தற்போது தென் கொரியா – இந்தியா இடையிலான சுக்ஜித் – கிம் போ காதலும் பேசப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *