நியூசிலாந்தில் இலங்கைப் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள்!

நியூசிலாந்துக்கு ஆய்வுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கைப் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் நியூசிலாந்து முன்னாள் பிரதமர்களான ஜசிந்தா ஆடர்ன் மற்றும் ஹெலன் கிளார்க் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்தச் சந்திப்பில் அரசியலில் பெண்களின் தலைமைத்துவத்தை வலுப்படுத்துதல், பாலின சமத்துவ ரீதியான பல்வகைத் தன்மையைக் கட்டியெழுப்புதல் தொடர்பில் முன்னாள் பிரதமர்களுடன் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

2017 முதல் 2023 வரை நியூசிலாந்தில் பிரதமர் பதவியை வகித்த ஜசிந்தா ஆடர்ன் அவரது காலப்பகுதியில் குழந்தைகளைப் பார்ப்பதற்காக தொழிலை விட்டுச்சென்ற பெண்கள் மீண்டும் தொழிற்சந்தைக்குள் பிரவேசிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட கொள்கை, சமமான சம்பளத்தை உருவாக்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், குழந்தைப் பிறப்பின் போது பெற்றோருக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்குதல், குழந்தை வறுமைத் தன்மையை குறைத்தல் போன்ற நாட்டிலும் அரசியலிலும் பாலின சமத்துவத்துக்குள் உள்வாங்கப்படாத ஏனையவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது உள்ளிட்ட விடயங்கள் இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன.

அத்துடன் நியூசிலாந்தின் முதலாவது பெண் பிரதமரான ஹெலன் கிளார்க் இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்திடம் தமது அரசியல் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதுடன், விசேடமாகப் பெண்களை வலுப்படுத்துவதற்காகத் தனது பதவிக் காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஓய்வூதிய காலத்துக்காக சேமிப்பதற்காகப் பெண்களை ஊக்கப்படுத்துதல் மற்றும் சிவில் விவாக சீர்திருத்தங்கள் தொடர்பான தமது கருத்துக்களை முன்வைத்தார்.

நாட்டின் அரசியலில் பெண்களின் தலைமைத்துவத்தை வலுப்படுத்துதல், பாலின சமத்துவத்தை பாதுகாத்தல் உள்ளிட்ட இலங்கைப் பெண்களின் முன்னேற்றத்திற்காக பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஆய்வுப் பயணம் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனத்தின் (USAID) முழுமையான அனுசரணையில் தேசிய ஜனநாயக நிறுவனத்தினால் (NDI) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *