மாணவர்களை நிரந்தர நோயாளர்களாக மாற்றும் பாடசாலை உணவங்கள்!

 


(எம்.எல்.எஸ்.முஹம்மத்)

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நாட்டில் நிலவிய அசாதாரன சூழ்நிலையின் பின்னர் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்பட்டன.இதன்போது பாடசாலை உணவகங்கள் மீளத் திறக்கப்படும் போது கவனத்திற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு பல அறிவுறுத்தல்களை பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைத்தது.குறிப்பாக பாடசாலை உணவக நடைமுறைகள் அனைத்தும் ஏற்கனவே வெளியிடப்பட்டிந்த 2015/35 ஆம் இலக்க சுற்றறிக்கைக்கிணங்க அமுல் படுத்தப் பட வேண்டுமெனவும், கேள்வி மனுக்கோரல் மற்றும் விலை மனுக்கோரல்கள் இன்றி பாடசாலை உணவகங்கள் நடத்தப்படக்கூடாது எனவும் மேற்படி சுற்றறிக்கையின் ஊடாக பாடசாலை அதிபர்களை பணித்திருந்தது.

கல்வி அமைச்சின் மேற்படி அறிவுறுத்தல்களை கவனத்திற்கொள்ளாமல் நாட்டிலுள்ள பெரும்பாளான பாடசாலை உணவகங்கள் மீளத் திறக்கப்பட்டதுடன்,உணவக சுற்றறிக்கையை மீறும் வகையில் சில சட்டவிரோதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.பாடசாலை நடவடிக்கைகளுக்கு பொறுப்புக்கூற வேண்டிய அதிபர் மற்றும் படசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் உட்பட பாடசாலை உணவக மேற்பார்வை குழு உறுப்பினர்கள் பலரும் இந்த விடயத்தில் போதிய அவதானத்தை செலுத்தத் தவறியுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்ட பாடசாலை அதிபர்களில் பலர் கேள்வி மனுக்கோரல்கள் எதுவுமின்றி மிகப் பொறுப்பற்ற முறையில் பாடசாலை உணவகங்களை தமக்கு அவசியமான நபர்கள் ஊடாக நடத்திச் சென்றுள்ளதுடன்,தொடர்ச்சியாக உணவக மேற்பார்வைகளையும் நிறுத்தியிருக்கின்றனர்.

இதனால் மேற்படி உணவகங்களில் மாணவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்புமிக்க மற்றும் கல்வி அமைச்சினால் பாடசாலை உணவகங்களில் விற்பனைக்கு தடைசெய்யப்பட்ட மாப்பொருள் சார்ந்த உணவுகள், செயற்கை இனிப்புப் பதார்த்தங்கள் உட்பட வெளிநாட்டு உணவுப் பொருட்கள் பலவும் நாளாந்தம் மாணவர்களுக்கு விற்கப்பட்டு வந்துள்ளன.

“தரம் 1 முதல் தரம் 13 வரை படிக்கும் வயது 5 முதல் 18 வயது வரையான மாணவர்கள் மத்தியில் இரத்தினபுரி மாவட்ட பாடசாலை உணவகங்கள் அறிமுகம் செய்த தவறான உணவுப் பொறிமுறையால் தரமற்ற உணவுப் பொருட்களை உட்கொண்ட மாணவர்கள் மத்தியில் உணவு நஞ்சாக மாறியதால் வாந்திபேதி,வயிற்றோட்டம் மற்றும் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகி 165 மாணவர்கள் அளவில் இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சைகளை பெற்றுச் சென்றுள்ளனர்”, என சபரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கபில கண்ணங்கர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பான எமது புலனாய்வுத் தேடல்களை ஆரம்பித்த போது பல பயங்கரமான செய்திகளும், பாடசாலை உணவகங்களை தொடர்புபடுத்தி நிர்வாக மட்டத்தில் இடம்பெற்று வரும் நிதி மோசடிகள் பற்றிய செய்திகளும் தொடராகக் கிடைக்கப் பெற்றுக்கொண்டிருக்கின்றன.

இரத்தினபுரி மாவட்ட பாடசாலையொன்றில் கல்வி அமைச்சின் உணவக மனுக்கோரல் பொறிமுறைகள் எதுவுமின்றி பாடசாலை அபிவிருத்திக் குழுவின் அங்கீகாரத்துடன் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக பாடசாலை உணவகத்தை சட்ட விரோதமான முறையில் நடத்தி வரும் லலிதா நிர்மலன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு தினமும் இலவசமாக தேநீர் மற்றும் சில உணவுகளையும் வழங்கி வருகிறார் என அப்பாடசாலையின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

“ஏன் தினமும் அதிபருக்கும் ஆசிரியர்களுக்கும் இலவசமாக தேநீர் வழங்கி வருகிறீர்கள்?”, என லலிதாவிடம் கேட்ட போது அவர் இவ்வாறு பதில் தருகிறார்.

“சுமார் 5 வருடங்களுக்கும் மேலாக நான் இந்த உணவகத்தை நடத்தி வருகிறேன்.எனக்கு தினமும் நல்ல வருமானம் கிடைக்கிறது.இதன் மூலம் நான் பல பயன்களை பெற்று வருகிறேன். எந்தக் கட்டணமும் இன்றி கடந்த மூன்று வருடங்கள் இவவுணவகத்தை நடத்தி வந்தேன். இதற்கான பூரண வசதியை பாடசாலை அதிபர் செய்து தந்துள்ளார். வெளியில் இப்படியானதொரு வியாபார முயற்சியை முன்னெடுப்பதானால் அதற்காக நாம் பல லட்சங்கள் முதலீடு செய்ய வேண்டும்.இவை அனைத்தையும் கருத்திட்கொண்டே தினமும் பாடசாலை ஆசிரியர்களுக்கு தேநீர் வழங்க இணங்கினேன்”,என அவர் தெரிவிக்கிறார்.

அத்துடன் மேற்படி பாடசாலையின் பிரதி அதிபரிடம் கடந்த 2023 ஜனவரி மாதம் 15 ஆம் திகதி முதல் உணவக தினசரிக் கட்டணம் என்ற அடிப்படையில் தினமும் ஐநூறு ரூபா வழங்கி வருகிறேன்.இது தொடர்பில் எனக்கு எந்தவொரு பற்றுச்சீட்டும் கொடுக்கப்படவில்லை”, எனவும் லலிதா மேலும் தெரிவிக்கிறார்.

இது தொடர்பில் நாம் பிரதி அதிபரை தொடர்புகொண்டு கேட்ட போது “தான் அவ்வாறான எந்தவொரு நிதிக் கொடுக்கல் வாங்கல்களிலும் ஈடுபடவில்லை.அத்துடன் எமது பாடசாலை உணவகம் தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.குறிப்பாக போஷாக்கு மிக்க எந்தவொரு உணவும் அங்கில்லை.அதிகூடிய விலைக்கே அனைத்துப் பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.ஒருசிலரின் தனிப்பட்ட தேவைக்காகவே இந்த உணவகம் நடத்தப் படுகிறது”,என லலிதாவின் கருத்தை முற்றாக மறுக்கிறார் அவர்.

உணவகக் கட்டணமாக தினமும் பாடசாலைக்கு ஐநூறு ரூபா வழங்கியமை தொடர்பாக லலிதா நிர்மலன் முன்வைத்துள்ள பிரதி அதிபருக்கெதிரான முறைப்பாட்டிற்கும் அது தொடர்பில் பிரதி அதிபர் தெரிவித்துள்ள மேற்படி பதிலுக்குமிடையில் பாரிய முரண்பாடுகள் உள்ளன.பிரதி அதிபர் தான் லலிதாவிடம் எந்தவொரு கொடுப்பனவையும் பெறவில்லை என மறுத்துரைக்கின்ற போதிலும் இந்த விடயம் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய அதிபர் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு செயலாளர் ஆகியோர் தொடர்ந்தும் மௌனமாக இருப்பது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாம் இது தொடர்பில் ஆராயும் நோக்குடன் குறித்த பாடசாலை உணவகத்திற்கு சென்ற போது, கல்வி அமைச்சின் உணவக சுற்றறிக்கையின் எந்தவொரு அறிவுறுத்தலும் அங்கு பின்பற்றப்பட்டிருக்கவில்லை.உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான உணவுகள் மாப்பொருள் மற்றும் அதிகூடிய இனிப்பு சார்ந்தவைகளாகவே காணப்பட்டன.அடிப்படை சுகாதார நடைமுறைகள் எதுவும் பின்பற்றபடாத மேற்படி உணவகம் தொடர்பில் அப்பாடசாலையின் அதிபர் கருத்து தெரிவிக்கையில்

“கொரோனாவின் பின்னர் உணவகம் தொடர்பில் கேள்வி மனுக்கோரலை இன்னும் மேற்கொள்ள முடியவில்லை.எந்தவொரு பெற்றோரும் உணவகத்தை நடத்த முன்வருவதும் இல்லை.இதன்காரணாமாகவே பல வருடங்களாக லலிதா நிர்மலன் இவ்வுணவகத்தை நடாத்தி வருகிறார்.உணவகத்திற்கான அடிப்படை வசதிகளை அவருக்கு செய்துகொடுக்க முடியாததனாலேயே இதுவரை அவரிடமிருந்து எந்தவொரு கட்டணத்தையும் அறவிடவில்லை.எனினும் அவர் தினமும் எங்களுக்கு தந்துதவும் இலவச தேநீர் எமது கட்டளை அல்ல.மாறாக அவர் விரும்பி உதவும் செயலாகும்.

கடந்த காலங்களில் எமது பாடசாலையின் சுகாதாரக் குழு மற்றும் உணவக கண்காணிப்புக் குழு ஆகியன முறையாக இயங்கத் தவறின.இதுவும் எமது உணவகத்தின் தரம் குறைவடைய மற்றுமொரு காரணமாகும்”, என அவர் தெரிவிக்கிறார்.

தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில் “எமது உணவகம் தொடர்பில் எழுந்துள்ள முக்கிய பிரச்சினைகள் சிலவற்றை கருத்திட்கொண்டு தற்காலிமாக புதிய உணவகப் பொறுப்பாளரை தெரிவு செய்வதற்காக கேள்வி மனுக் கோரலை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம்திகதி அளவில் மேற்கொள்வதற்கு பாடசாலை அபிவிருத்திக் குழுவுடன் கதைக்கவுள்ளேன்.அத்துடன் புதிய உணவகப் பொறுப்பாளரை தெரிவுசெய்யும் வரை தற்போதைய உணவகத்தை மூடிவிடவும் தீர்மானித்துள்ளேன்.பாடசாலை உணவக கண்காணிக் குழுத் தலைவர் பிரதி அதிபர் சுகயீன விடுமுறையில் இருப்பதால் உடனடியாக சில தீர்மானங்களை மேற்கொள்ளவும் முடியாமல் உள்ளன”,எனவும் அவர் தெரிவிக்கிறார்.

கல்வி அமைச்சின் உணவக வழிகாட்டல்களை முற்றாக மீறி செயற்பட்டுக்கொண்டிருக்கும் மேற்படி பாடசாலையின் செயற்பாடுகள் குறித்து ஏன் உரிய நடவடிக்கைகளை எடுக்க நீங்கள் தவறியிருக்கிறீர்கள்? கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.உதயகாந்தியிடம் கேட்ட போது

“உணவக சுற்றறிக்கையை பல பாடசாலை நிர்வாகங்கள் மீறிச் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.பாடசாலை அபிவிருத்திக் குழுவே இந்தத் தவறுகளுக்கு பொறுப்புக் கூற வேண்டும்.பற்றுச்சீட்டின்றி பணப் பரிமாற்றம் இடம்பெறுவதை எவ்வகையிலும் அனுமதிக்க முடியாது.இந்த விடயம் தொடர்பில் நாம் உரிய கவனம் செலுத்தி சம்பந்தப்பட்டுள்ள அனைவருக்கு எதிராகவும் ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்க இருக்கின்றேன்”, என அவர் பதில் அளிக்கிறார்.

மேற்படி பாடசாலையில் மாத்திரமின்றி இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள 583 பாடசாலைகளில் 179 பாடசாலைகளில் மாத்திரம்தான் பாடசாலை உணவகம் நடத்தப்பட்டு வருவதாகக் 2020 ஆம் வெளியிடப்பட்ட முக்கிய மருத்துவ ஆய்வறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் அவற்றில் 56 பாடசாலைகளில் மாத்திரமே பாடசாலை நிர்வாகம் உணவகப் பொறுப்பாளர்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது எனவும் அவ்வாய்வு சுட்டிக்காட்டுகிறது.

மேற்படி ஆய்வுக் கண்டுபிடிப்பை உண்மைப்படுத்தும் விதமாகவே இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பாடசாலை உணவகங்கள் அமைந்துள்ளன.
குறிப்பாக இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள முக்கிய தமிழ் மொழி மூலப் பாடசாலையொன்றின் உணவகமும் இன்னும் அதன் ஆரம்ப நிலையிலேயே உள்ளதாக அப்பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் எம்.இஸ்திகார் தெரிவிக்கிறார்.

நாம் இது தொடர்பாக அப்பாடசாலையின் அபிவிருத்திக் குழு செயலாளரை தொடர்புகொண்டு கேட்ட போது,
“எமது பாடசாலை உணவகம் கடந்த பல வருடங்களாக கேள்வி மனுக்கோரல்கள் எதுவுமின்றியே தொடர்ந்து நடத்தப்பட்டு வந்துள்ளது.இதனால் உணவகப் பொறுப்பாளர்களுடன் ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவில்லை.எம்.காதர் என்பவரே தொடர்ச்சியாக பல வருடங்கள் எமது உணவகத்தை நடத்தி வந்துள்ளார்.அவர் தொடர்பில் பல சிக்கல்கள் இருந்த போதிலும் அதிபர் அவரிடமே ஒப்படைத்து வந்தார்.எனினும் பின்னர் எமது அழுத்தங்களைத் தொடர்ந்து கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கிணங்க புதிய ஒருவரிடம் உணவகத்தை ஒப்படைக்க முடிந்துள்ளது”, என அவர் தெரிவிக்கிறார்.

எனினும் மேற்படி பாடசாலை உணவகமும் ஏனைய பாடசாலை உணவகங்களைப் போன்று போதிய வசதிகள் எதுமற்ற மாப்பொருள் உணவுகளையே அதிகமாக விற்பனை செய்யும் உணவகமாகவே உள்ளது.அத்துடன் இதன் புதிய பொறுப்பாளர் கேள்வி மனுக்கோரல் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும் அவரை விடவும் கூடுதலான நாளந்த உணவுக் கட்டணத்தை வழங்க முன்வந்திருந்த மூவரின் விண்ணப்பங்கள் அதிபரின் தீர்மானத்திற்கிணங்க நிராகரிக்கப்பட்டன என அப்பாடசாலையின் தகவல் தொடர்பு அதிகாரி பிரதி அதிபர் தெரிவிக்கிறார்.

இந்த விடயம் தொடர்பாக மேற்படி பாடசாலை அதிபரை தொடர்புகொண்டு கேட்டபோது
“கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு இணங்கவே எமது உணவக புதிய பொறுப்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிய பொறுப்பாளரை விடவும் கூடுதலான தினக் கட்டணத்தை குறிப்பிட்டு பலர் விண்ணப்பித்திருந்தனர்.எனினும் அவர்கள் சமர்பித்திருந்த உணவுப் பண்டங்களின் விலைப் பட்டியல் மற்றும் அவர்கள் சமூகத் தொடர்பாடல்கள் எமது பாடசாலை கலாச்சாரத்திற்கு பொருத்தமானதாக அமைந்திருக்கவில்லை.இந்நப் பின்னணியுடன்தான் அவர்களின் விண்ப்பங்கள் நிராகரிக்கப்பட்டன”, என அவர் தெரிவிக்கிறார்.

மேற்படி இரத்தினபுரி பாடசாலையில் இரவு நேர பாதுகாவலராகவும், கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக அப்பாடசாலையின் உணவக பொறுப்பாளராகவும் செயற்பட்டு வந்த காதரிடம் நீங்கள் ஏன் பாடசாலைக்குரிய உணவக கட்டணத்தை வழங்காமல் சட்ட விரோதமாக செயற்பட்டுள்ளீர்கள் எனக் கேட்ட போது அவர் இவ்வாறு பதில் தருகிறார்.

“நான் இப்பாடசாலையின் பாதுகாவலராகவே இணைந்தேன்.இப்பாடசாலை நிர்வாகத்திற்கு எதிராக பல அச்சுறுத்தல்கள் வந்த எல்லா சந்தர்ப்பங்களிலும் நான் அவற்றை சமாளித்து பாடசாலையை பாதுகாத்துள்ளேன்.என்மீது அதிபர் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்.இந்தப் பின்னணியுடன்தான் பகல் நேரங்களில் பாடசாலை உணவகத்தை நடத்திச் செல்ல அவர் எனக்கு அனுமதி அளித்தார்.ஆரம்ப காலங்களில் கட்டணம் இன்றி உணவகத்தை நான் நடத்தி வந்த போதிலும் பின்னர் ஐநூறு ரூபா என்ற அடிப்படையில் கட்டணம் செலுத்தி வந்தேன்”,என அவர் தெரிவிக்கிறார்.

மேற்படி இரத்தினபுரி பாடசாலையில் மாத்திரமின்றி இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பல கஷ்டப் பிரதேச பாடசாலைகளில் பாடசாலை உணவகம் வெறும் பெயளவில் மாத்திரம்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. கேள்வி மனுக்கோரல்கள் எதுவுமின்றி அதிபரின் சொந்த விருப்பத்திற்கிணங்க நடத்தப்படும் இவ்வுணங்கள் பற்றி இரத்தினபுரி மாநகர பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எம்.மன்சூர் தனது கருத்தை இவ்வாறு முன்வைக்கிறார்.

“மாணவர்களுக்கு ஊட்டச் சத்துமிக்க ஆரோக்கியமான உணவுப் பண்டங்களை மாத்திரம் மாணவர்களுக்கு விற்பனை செய்ய வேண்டிய பாடசாலை உணவகங்கள் வெறும் இலாபத்தை மாத்திரம் கருத்திட்கொண்டு செயற்பட்டு வருவததால் மாணவர்கள் சிறுவயதிலேயே நிரந்தர நோயாளர்களாக மாற்றப்படுகின்றனர்.பாடசாலை அபிவிருத்திக் குழுவின் நேரடி கண்காணிப்புடன் செயற்படுத்தப்பட வேண்டிய இவ்வுணவகங்களை பொறுப்பேற்று நடத்துவோர் மத்தியில் எந்த சுகாதார பழக்க வழக்கங்களும் இல்லை.பாடசாலை அதிபர்கள் உணவகங்கள் ஊடாக வருமானம் திரட்ட முயற்சிக்கின்றார்களே அன்றி இதனை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கத் தவறுகின்றனர்”,என அவர் குற்றம் சுமத்துகிறார்.

மேற்படி பொதுச் சுகாதார பரிசோதகரின் கருத்தை உண்மைப் படுத்தும் வகையிலே உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் அப்துல் றஹீம் சித்தீக் மற்றும் யனிஸெப் நிறுவனம் உட்பட அரச சார்பற்ற பல தொண்டர் நிறுவனங்களும் பாடசாலை உணவகங்களின் தற்போதைய பின்தங்கிய நிலைமை தொடர்பில் பாரிய அச்சத்தை வெளியிட்டுள்ளனர்.

இலங்கை பாடசாலை மாணவர்கள் மத்தியில் 10 சதவீத நிரந்த நோயாளர்களை உருவாக்கும் பாடசாலை உணவுப் பொறிமுறையை சீராக்கம் செய்ய அரசு முன்வர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் நுவரெலிய மாவட்டத்திலுள்ள நூணுஓயா பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றைச் சேர்ந்த 26 மாணவர்களும்,கிளிநொச்சி பாடசாலையொன்றின் 12 மாணவர்களும் மற்றும் சில தென்னிலங்கை பாடசாலைகளைச் சேர்ந்த 8 மாணவர்களும் பாடசாலையில் பரிமாறப்பட்ட உணவு நஞ்சாகியதால் அரச வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் என தேசிய ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தன.

இரத்தினபுரி மாவட்ட பாடசாலை உணவகங்களில் தொடரும் மேற்படி உள்ளக முரண்பாடுகள் தொடர்பாக சபரகமுவ மாகாண கல்வி திணைக்களத்தின் பாடசாலை உணவக செயற்திட்டத்தின் பணிப்பாளர் எஸ்.ஜே.யு.பி.கொடிகார கருத்து தெரிவிக்கையில்

“கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு முரணாக பாடசாலை உணவகங்களை நடத்திவரும் அதிபர்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.இவர்களுள் கேள்வி மனுக்கோரல் இன்றியும்,உணவகப் பொறுப்பாளர்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ளாமலும்,உணவக கட்டணங்களில் மோசடிகளில் ஈடுபட்டோர் தொடர்பான சில முறைப்பாடுகளும் உள்ளன.இது தொடர்பாக ஆராய்வதற்கு கணக்காய்வு பரிசோதகர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.அவர் பல தரப்பினரிடமிருந்தும் உரிய வாக்கு மூலங்களை பதிவு செய்து வருகின்றனர்.விரைவில் அவர்களது இறுதி அறிக்கை கிடைக்கப் பெற்றதும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்”, என அவர் தெரிவிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *