கிரிக்கெட் ஜாம்பவான் சேர் சோபர்ஸை சந்தித்த இந்திய அணி வீரர்கள்!

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தப் பயணத்தில் 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 கிரிக்கெட் போட்டிகளில் இரு அணிகளும் விளையாட உள்ளன. அதற்குத் தயாராகும் வகையில் இந்திய வீரர்கள் மேற்கிந்தியத் தீவுகளில் முகாமிட்டுள்ளனர். எதிர்வரும் 12-ம் திகதி இந்தத் தொடர் தொடங்க உள்ளது.

இந்தச் சூழலில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் சேர் கார்ஃபீல்ட் சோபர்ஸை இந்திய அணி வீரர்கள் சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பின்போது சுவாரஸ்யமான உரையாடலும் நடந்துள்ளது. இந்த வீடியோவை பிசிசிஐ சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

சேர் கார்ஃபீல்ட் சோபர்ஸை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, துணை கேப்டன் ரஹானே, விராட் கோலி, அஸ்வின், சுப்மன் கில் மற்றும் பயிற்சியாளர் ராகுல் திராவிட் ஆகியோர் சந்தித்துப் பேசி உள்ளனர்.

86 வயதான சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ், 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,032 ரன்கள் குவித்துள்ளார். 235 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளார். களத்தில் துடிப்பான ஃபீல்டரும் கூட. 109 கேட்ச்களை பிடித்துள்ளார். இடது கை பேட்ஸ்மேன், பவுலர். மிதவேகப் பந்துவீச்சு, லெஃப்ட் ஆர்ம் ஆர்தோடெக்ஸ், லெஃப்ட் ஆர்ம் ரிஸ்ட் ஸ்பின் என வெரைட்டியாக பந்து வீசும் திறன் கொண்டவர். ஒரே ஒரு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி உள்ளார். கிரிக்கெட் உலகின் ஆல்டைம் ஜாம்பவான்களில் ஒருவராக போற்றப்படுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *