வளர்மதி – நியூ பவர் மோதல்: பிரதம அதிதி மாவை எம்.பி.!

யாழ். தென்மராட்சி மட்டுவில் வளர்மதி விளையாட்டுக் கழகத்தின் ஒழுங்கமைப்பில், அமரர்களான சி.கனகரத்தினம் மற்றும் பொ.செல்வராசா ஆகியோரின் ஞாபகார்த்த துடுப்பாட்ட சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டி கடந்த 26ஆம் திகதி மட்டுவில் வளர்மதி விளையாட்டரங்கில் நடைபெற்றது.

மட்டுவில் வளர்மதி விளையாட்டுக் கழகத் தலைவர் தா.கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இறுதிப் போட்டி நிகழ்வுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இப்போட்டித் தொடரில் 20 கழகங்கள் பங்குபற்றின. இத்தொடர் லீக் முறையில் இடம்பெற்று இறுதிப் போட்டிக்கு சாவகச்சேரி நியூ பவர் அணி எதிர் மட்டுவில் வளர்மதி அணி என்பன உள்நுழைந்தன.

இறுதிப் போட்டியில் நியூ பவர் அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து பரிசில் வழங்கல் இடம்பெற்றது.

இத்தொடரின் முன்னைய போட்டிகளுக்கான ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

தொடர் ஆட்ட நாயகன், சிறந்த பந்து வீச்சாளர், சிறந்த துடுப்பாட்ட நாயகன், இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக நியூ பவர் அணியின் அருள்பிரியன் (அம்பி) தெரிவானார்.

அதனைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தைப் பெற்ற மட்டுவில் வளர்மதி அணிக்கு 25,000 ரூபா பணப்பரிசும் வெற்றிக் கிண்ணமும் வழங்கப்பட்டது.

இத்தொடரான சி.கனகரத்தினம் மற்றும் பொ.செல்வராசா ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்தை சுபீகரித்த நியூ பவர் அணிக்கு 50,000 ரூபா பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் சாவகச்சேரி பிரதேச சபைத் தவிசாளர் க.வாமதேவன், புதிய சுதந்திரன் பத்திரிகை, தமிழ் சி.என்.என். இணையம் ஆகியவற்றின் நிர்வாக இயக்குநர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி, மட்டுவில் வடக்கு அ.மி.த.க. பாடசாலை அதிபர் ச.கிருஷ்ணன், சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலய ஆசிரியர் செ.பிரதாப், மட்டுவில் வளர்மதி சனசமூக நிலையத் தலைவர் இ.ஜனதன், விமலா ஹாட்வெயர் உரிமையாளர் த.ஜெயந்தன், பருத்தித்துறை சிங்கர் கம்பனி முகாமையாளர் க.சிவகரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *