எந்த நாட்களில் அதிக அளவிலான மாரடைப்பு நோய் ஏற்படுகிறது?

உலக அளவில் மாரடைப்புகள் எந்தெந்த கிழமைகளில் வரும் என்பதைப் பற்றி பிரித்தானிய மருத்துவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் வெளியான தகவல் உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

அந்த தகவலின்படி திங்கட்கிழமைகளிலேயே அதிக அளவிலான மாரடைப்புகள் தான் ஏற்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள மாரடைப்பானது ஏன் திங்கட்கிழமைகளில் ஏற்படுகின்றது. அதற்கான காரணத்தையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இனம், மொழி, நாடு என அனைத்தையும் கடந்து உலகம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் சில ஒற்றுமைகள் காணப்படும். அதில் திங்கட்கிழமை என்றால் பெரும்பாலானோருக்குப் பிடிக்காத நாளாகவே இருக்கிறது என்று ஆய்வுகள் பல தெரிவிக்கின்றன.

பலருக்குப் பாடசாலை காலம் முதல் வாரத்தில் உள்ள 7 நாட்களில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை திங்கட்கிழமை வகுப்பு எனப் பழக்கப்பட்டதால் கூட இவ்வாறு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் Monday Blues என்று சொல்வார்கள்.

இதை நாமும் சாதாரணமாகக் கடந்து சென்று இருப்போம். ஆனால், தற்போது இந்த விடயத்தில் தான் மிகப்பெரிய ஆபத்து ஒளிந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பிரித்தானியாவின் அயர்லாந்தில் உள்ள பெல்ஃபாஸ்ட் ஹெல்த் நிறுவனமும், ரோயல் கல்லூரி ஆப் சர்ஜன்ஸ் கல்லூரியும் இணைந்து உலகம் முழுவதிலும் உள்ள 10,000 இதய நோயாளிகளை வைத்து ஒரு ஆராய்ச்சி நடத்தினர். இதன் ஆய்வு முடிவுகள் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டுள்ளது.

மன அழுத்தம்: அதில், அதிக அளவிலான நபர்களுக்குத் திங்கட்கிழமைகளில் தான் மாரடைப்பு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வார விடுமுறையை முடித்துவிட்டு திங்கள்கிழமை பணிக்குச் செல்ல வேண்டுமே என்கிற அதீத மன அழுத்தம் தான் இதற்குக் காரணமாம்.

அதாவது, திங்கட்கிழமைகளில் அதிக மன அழுத்தம் ஏற்படுவதால் இரத்த அழுத்தமும், சர்க்கரையும் தானாக அதிகரிக்கிறது. இது இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்துவதால் திடீர் மாரடைப்பு ஏற்படுவதாக அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தவிர்ப்பது எப்படி…!

அலுவலக பணிகளுக்கும், சொந்த வாழ்க்கைக்கும் இடையே சரியான சமநிலையைப் பராமரித்தல், பணி அழுத்தத்தைச் சொந்த வாழ்க்கைக்குக் கொண்டு வராமல் இருத்தல், உடற்பயிற்சி, குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிடுதல் போன்றவற்றைக் கடைப்பிடித்தால் இதுபோன்ற மாரடைப்புகளைத் தடுக்கலாம் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *