தங்கத்தின் விலை மீண்டும் 2 இலட்சத்தை தாண்டும் அபாயம்?

கொழும்பு – செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்றும் (05) ஆபரண தங்கத்தின் விலை 150,000 ரூபாவை விட குறைவடைந்தே காணப்படுகிறது.
அதன்படி இன்றைய தினம் 22 கரட் ஆபரண தங்கப் பவுணொன்றின் விலையானது 146,000 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது 158,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
ஆபரண தங்கத்தின் விலையானது கடந்த சில கிழமைகளுக்கு முன் 160,000 ரூபாவிற்கும் அதிகமாகவிருந்த நிலையில் கடந்த சில நாட்களாக வீழ்ச்சி பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இலங்கையில் தங்க நகை விலையை நிர்ணயிப்பது உலக சந்தையில் காணப்படும் தங்க விலையும், இலங்கையில் நிலவும் டொலரின் பெறுமதியுமே ஆகும் என அகில இலங்கை தங்க வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் ஆர்.பாலசுப்பிரமணியம் குறிப்பிடுகிறார்.
மேலும் இங்கு உள்ள விலையை நிர்ணயிப்பது செட்டியார்தெரு தான் என்றும், உலக சந்தையிலிருந்து கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபா விலை வித்தியாசத்தில் தான் விலை மாற்றம் நடந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
இந்த நிலையில் இலங்கையில் டொலரின் வீழ்ச்சியானது இன்னும் சில நாட்களுக்கே பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் சில பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கப் போவதாக கடந்த கிழமை முதல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
எனவே இறக்குமதி தடை நீக்கப்பட்டால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது வீழ்ச்சியை சந்திக்கும் என குறிப்பிடுகின்றனர்.
இப்படியான நிலைமை பார்க்கும் போது இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரையிலேயே தங்கத்தின் பெறுமதி குறைந்த அளவில் இருக்கும் எனவும், இறக்குமதி தடை நீக்கப்பட்டு டொலரின் பெறுமதி அதிகரிக்க ஆரம்பித்தால் சுமார் இரண்டு இலட்சம் ரூபாவை தங்க விலை எட்டும் சாத்தியம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை தீவிரமடைந்த சந்தர்ப்பத்தில் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது இரண்டு இலட்சத்தை தொட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *