இலங்கையர்களை அதிகளவில் பாதிக்கும் உயர் இரத்த அழுத்தம்!

இலங்கையில், 20 வயதிற்கும் மேற்பட்டவர்களில், 35 வீதமானோருக்கு, உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளில் இந்தத் தகவல் கிடைத்துள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் சம்பிகா விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

உணவில் சேர்க்கும் உப்பின் அளவு அதிகரித்துள்ளமையே இதற்குப் பிரதான காரணமாகும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. நபர் ஒருவர், நாளொன்றுக்கு, ஒரு மேசைக் கரண்டி அளவான உப்பையே உணவில் சேர்க்க வேண்டும் என்பதே பரிந்துரைக்கப்பட்ட அளவாகும்.

எனினும், இந்த முறை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஆண்கள் நாளொன்றுக்கு 15.1 கிராம் உப்பையும், பெண்கள், 13.5 கிராம் உப்பையும் உட்கொள்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

உப்பை உட்கொள்வது, 3 மடங்கு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் சம்பிகா விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

இதேநேரம், உளவியல் தாக்கம், சிறுநீரக நோய்த் தாக்கம் உள்ளிட்ட காரணங்களும், உயர் இரத்த அழுத்தத்திற்கு காரணமாகும். எனினும், உயர் இரத்த அழுத்தம், இவ்வாறாக மிகவும் அதிகளவில் ஏற்படுவதற்கு, உப்பு அதிகளவில் உட்கொள்ளப்படுகின்றமையே காரணமாகும்.

எனவே, பொதுமக்கள் உணவில் சேர்க்கும் உப்பின் அளவைக் குறைப்பதன் மூலம், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும் என சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் சம்பிகா விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *