அதிசய ராகங்களை அறிமுகம் செய்த அபூர்வ ராகம்!

‘அதிசய ராகங்கள்’ என்று இங்கே குறிப்பிடப்படுவோர் இரண்டு இசை மேதைகள்.

ஒருவர் கே.ஜே.ஜேசுதாஸ், இன்னொருவர் ஏ.ஆர்.ரஹ்மான்.

இவர்களை அறிமுகம் செய்த எம்.கே.அர்ஜுனன் தான், மேலே சொன்ன, அபூர்வராகம்.

மலையாள சினிமா உலகில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த இசை அமைப்பாளர்.

கொச்சி அருகே உள்ள சொந்த கிராமமான பல்லுருதியில் அர்ஜுனன், நேற்று முதுமை காரணமாக இயற்கை எய்தினார். வயது-84.

சொல்லப்போனால் இவரும்கூட ஒரு அதிசய ராகம் தான்.

ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த குடியானவருக்கு பிறந்த 14 பிள்ளைகளில், அர்ஜுனன் கடைசிக் குழந்தை.

6 மாதக் குழந்தையாக இருந்தபோது, தந்தையைப் பறிகொடுத்தார்.

இளமையில் இவர் பெற்றது வறுமை. கற்றது இசை.
தெரிந்த ஒரே தொழிலும் அதுவே.

சொந்த ஊரில் நடந்த ஒரு சம்பவம்.

அப்போது அர்ஜுனன், தனது தோழர்கள் நடத்தும் தெரு நாடகங்களுக்கு இசை அமைத்துக் கொண்டிருந்தார்.

ஒரு புரட்சிகர நாடகத்துக்குப் பாடல் ரெடியாக இருந்தது.

பாடகர் கிடைக்கவில்லை.

“கொச்சியில் உள்ள மியூசிக் காலேஜில் 15 வயசு பையன் ஒருவன் படிக்கிறான். முகம்மது ரபி பாடலை எல்லாம் பிரமாதமா பாடுறான்’’ என்று யாரோ சொல்ல, அந்த மாணவனுக்கு ஓலை பறந்தது.

அந்த மாணவன் வந்தான்.

அர்ஜுனன் கம்போஸ் செய்திருந்த இசைக்கு ஏற்றபடி, அந்தப் பாடலைப் பாடினான்.

அது தான் அந்த மாணவனுக்கு முதல் பாடல்.

டேப்-ரிகார்டரில் பதிவு செய்யப்பட்ட தனது குரலை முதன் முறையாக  கேட்டபோது, அவனுக்கு விவரிக்க முடியாத ஆனந்தம்.

அந்த மாணவன் தான் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ்.

வருடம்-1958.

இதன் பிறகு நீண்ட வருடங்கள் கழித்துத்தான் ஜேசுதாஸ் சினிமாவுக்குப் பாடினார்.

அவரைப் போலவே அர்ஜுனனும், ஒரு மாமாங்கத்துக்குப் பிறகே சினிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனார்.

அந்த நாட்களில் சென்னையில் தான் மலையாளப் படங்களின் பாடல் கம்போசிங் மற்றும் ரிகார்டிங் நடக்கும்.

அப்போதெல்லாம் சென்னை வரும் அர்ஜுனன். மற்றொரு மலையாள சினிமா இசை அமைப்பாளரான ஆர்.கே.சேகர் வீட்டில் தான்  தங்குவார்.

வீட்டிலேயே இசைக்கூடம் வைத்திருந்தார் சேகர்.

அர்ஜுனனின், பெரும்பாலான பாடல்களின் கம்போசிங், சேகர் இசைக்கூடத்தில் தான் நடக்கும்..

இருவரும் நெருக்கமான தோழர்கள் ஆனார்கள். சமயங்களில் இருவரும் சேர்ந்தே கம்போசிங் செய்வது உண்டு.

அதனை கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பார், சேகர் மகன், திலீப். அதாவது இன்றைய ஏ.ஆர்.ரகுமான்.

ரகுமானுக்கு 13 வயது இருக்கும்போது சேகர் இறந்து போனதால், அவரது குடும்பம் வறுமையில் வாடியது.

சேகர் விட்டுச்சென்ற இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு கொஞ்ச நாள் குடும்பம் ஓடியது.

நண்பன் குடும்பத்துக்கு, ஏதாவது  செய்ய வேண்டும் என்று எண்ணிய அர்ஜுனன், சொந்த ஊரை மறந்தார்.

அ[ப்போது ரகுமான் கீ-போர்டு வாசிப்பதில் தேர்ச்சி பெற்றிருந்தார்.

அர்ஜுனனுக்கு அந்த சமயத்தில் படங்கள் ஏதும் இல்லை.

இதனால் ரகுமானை, பல மியூசிக் டைரக்டர்களிடம் அழைத்து சென்று அறிமுகம் செய்தார்.

“தம்பி பெயர் திலீப். நல்லா கீ–போர்டு வாசிப்பார். சான்ஸ் கொடுங்கள்’’ என்று வேண்டினார்.

“ஏன்..? நீ சான்ஸ் கொடுக்க வேண்டியது தானே’’ என்று அர்ஜுனனைக் காயப்படுத்தினர், அந்தப் பழம்பெரும் இசை அமைப்பாளர்கள்.

காத்திருந்தார் அர்ஜுனன்.

பொறுத்திருந்தார் ரகுமான்.

வேளை வந்தது.

1981 ஆம் ஆண்டு ‘அடிம சங்கிலா’ என்ற மலையாளப் படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு வந்தது அர்ஜுனனுக்கு.

அதில் ஒரு பாடலுக்கு கீ-போர்டு வாசிக்கும் வேலை கொடுத்தார்.

இது தான் சினிமாவில் ஏ.ஆர். ரகுமானின் முதல் படி.

அந்தப் பாடலின் வெற்றிக்குப் பிறகு, அர்ஜுனனின் அனைத்து பாடல்களுக்கும், ஏ.ஆர்.ரகுமான் தான் கீ போர்டு பிளேயர்.

அதன் பிறகு ‘ரோஜா’வில் அறிமுகமாகி, ரகுமான் சிகரம் தொட்டது உலகம் அறிந்த கதை.

புகழ் வெளிச்சம் பட்டதும், மேதைகள் சொந்த ஊரை மறந்து விடுவது சினிமாவின் மரபு.

ஆனால் சாகும் வரை சொந்த ஊரிலேயே வாழ்ந்து, அங்கேயே மறைந்தவர் அர்ஜுனன்.

ஒரு ருசிகர சம்பவத்தோடு, அர்ஜுனனுக்கு ‘பிரியாவிடை’ கொடுப்போம்.

அர்ஜுனனின் சொந்த ஊரான பல்லுரிதியில், அவர் ஒரு இசை அமைப்பாளர் என்று பலருக்கு தெரியாது.

அவரது பாடலை ‘ஹம்மிங்’ செய்தபடி சாலைகளில் திரிவார்கள், வயலில் வேலை செய்வார்கள்.

இந்தப் பாடலுக்கு இசை அமைத்த மேதை இங்கு தான் இருக்கிறார் என்பது, அவர்களில் பலருக்குத் தெரியாது என்பதே உண்மை.

அந்த ஊர் பள்ளி ஆசிரியை ராஜம் என்பவர் ஒருமுறை மாணவிகளிடம் உரையாடிக்கொண்டிருந்தார்.

“நம்ம ஊர் ஆள் ஒருத்தர் இன்னைக்கு மலையாள மக்கள் வாழும் தேசங்களில் எல்லாம் அறியப்படுபவர். அவர் யார் தெரியுமா?’’ என்று கேட்டார்.

எல்லாரும் விழித்தனர்.

அதே கேள்வியை அர்ஜுனன் மகள் தீபாவிடமும் அந்த டீச்சர் கேட்டுள்ளார்.

அவளும் உதட்டை பிதுக்கினாள்.

“உனது தந்தையிடம் இந்தக் கேள்வியை கேள். அவர் சொல்லும் பதிலை நாளை இந்த வகுப்பில் நீ சொல்ல வேண்டும்’’ என்றார், ஆசிரியை.

மாலையில் அப்பாவிடம் சென்று, பள்ளியில் நடந்த சம்பவத்தை விவரித்த போதுதான், அர்ஜுனன் மகளுக்கே, தன் தந்தையின் பெருமை தெரிய வந்தது.

-பி.எம்.எம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *