பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் திரில் வெற்றி!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றுள்ளது. ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

பிரப்சிம்ரன் சிங் அரைசதம்
நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஷிகர் தவான் மற்றும் பிரப்சிம்ரன் சிங் களம் இறங்கினர். தொடக்கத்திலேயே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரப்சிம்ரன் சிங் அரைசதம் அடித்து அசத்தினார்.

அவர் 34 பந்தில் 60 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் ஆனார். பிரப்சிம்ரன் – ஷிகர் இணை முதல் விக்கெட்டுக்கு 90 ஓட்டங்கள் குவித்தது. இதையடுத்து பானுகா ராஜபக்சே களம் இறங்கினார். அவர் 1 பந்தில் 1 ரன் எடுத்திருந்த நிலையில் ஷிகர் தவான் அடித்த பந்து அவரது கையில் பலமாக தாக்கியது.

இதன் காரணமாக அவர் வெளியேறினார். இதையடுத்து ஜித்தேஷ் சர்மா, தவானுடன் ஜோடி சேர்ந்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தவான் 36 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய ஜித்தேஷ் சர்மா(27), சிக்கந்தர் ராஸா(1), ஷாருக்கான்(11) என சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன.

4 விக்கெட் இழப்புக்கு 197 ஓட்டங்கள்
இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 197 ஓட்டங்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக தவான்(86), பிரப்சிம்ரன் சிங்(60) ஓட்டங்களும் எடுத்தனர். ராஜஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ஹொல்டர் 2 விக்கெட்டுகளும், அஸ்வின் மற்றும் சஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

ராஜஸ்தான் அணியை மொத்தமாக நொறுக்கிய பஞ்சாப்: 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி | Rajasthan Royals Punjab Kings Thrills

இதையடுத்து 198 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி சார்பில் ஜெய்ஸ்வால் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறங்கினர். இந்த ஜோடியில் ஜெய்ஸ்வால்(11) அஸ்வின்(0) என அதிர்ச்சியளிக்க, அதிரடி காட்டிய ஜோஸ் பட்லர் 19 (11) ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்ததாக சஞ்சு சாம்சனுடன், பட்டிக்கல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் சீரான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் மெதுவாக உயர்ந்தது. இந்நிலையில் அதிரடி காட்டிக் கொண்டிருந்த சாம்சன் 42 (25) ஓட்டங்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ரியான் பராக்(20), பட்டிக்கல்(21) ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

ஹெட்மயர் ரன் அவுட்

இதனையடுத்து ஹெட்மயர் மற்றும் ஜுரைல் ஆகியோர் அதிரடியாக ஓட்டங்கள் சேர்த்தனர். இந்த ஜோடியில் ஹெட்மயர் 36 (18) ஓட்டங்களில் ரன் அவுட் ஆனார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜுரைல் 32 (15) ஓட்டங்களும், ஹொல்டர் 1 ரன்னும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

முடிவில் ராஜஸ்தான் அணி 20 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 192 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக நாதன் எல்லீஸ் 4 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதன்மூலம் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *