திருமண பரிசை திறந்து பார்த்த மாப்பிள்ளை பலி மணப்பெண் கவலைக்கிடம்!

திருமண பரிசாக வந்த ஹோம் தியேட்டர் மியூசிக் சிஸ்டம் வெடித்ததில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரிசாக பெற்ற ஹோம் தியேட்டர்
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் கபீர்தாம் மாவட்டத்தில் திருமண பரிசாக பெற்ற ஹோம் தியேட்டர் மியூசிக் சிஸ்டம் வீட்டில் வெடித்ததில் புதிதாக திருமணமான ஒருவரும் அவரது மூத்த சகோதரரும் கொல்லப்பட்டனர். மேலும், வீட்டில் இருந்த நான்கு பேர் காயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் திங்கட்கிழமை இடம்பெற்றதாகவும், வெடிவிபத்துக்கான சரியான காரணம் இதுவரை அறியப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

வெடிவிபத்தின் தாக்கத்தால் ஹோம் தியேட்டர் சிஸ்டம் வைக்கப்பட்டிருந்த அறையின் சுவர்கள் மற்றும் கூரைகள் இடிந்து விழுந்ததாக பொலிஸார் கூறினர்.

திருமணப் பரிசுகளை திறந்து பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் அசம்பாவிதம்

ராய்ப்பூரிலிருந்து 200 கி.மீ தொலைவில் சத்தீஸ்கர்-மத்திய பிரதேச எல்லையில் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதியில் இந்த பகுதி உள்ளது.

முதற்கட்ட தகவல்களின்படி, 22 வயதான ஹேமேந்திரா மெராவி ஏப்ரல் 1-ஆம் திகதி திருமணம் செய்து கொண்டார்.

திங்களன்று, அவரும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் அவரது வீட்டில் ஒரு அறைக்குள் திருமணப் பரிசுகளை திறந்து பார்த்துக்கொண்டிருந்தனர்.

புதுமாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே மரணம்
அதில் பரிசாக வந்த ஹோம் தியேட்டர் சிஸ்டத்தின் வயரை மெராவி எலக்ட்ரிக் போர்டுடன் இணைத்த பிறகு, பாரிய வெடிப்பு ஏற்பட்டது. இதில் மேராவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது சகோதரர் ராஜ்குமார் (30) மற்றும் ஒன்றரை வயது சிறுவன் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர், அவர்கள் கவுரதாவில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி மெராவியின் சகோதரர் உயிரிழந்தார். மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

தகவல் அறிந்ததும், தடயவியல் நிபுணர்களுடன் பொலிஸ் குழு சம்பவ இடத்துக்குச் சென்றது. அறையை ஆய்வு செய்தபோது, ​​வெடிப்பைத் தூண்டக்கூடிய எரியக்கூடிய வேறு எந்தப் பொருளும் அங்கு கிடைக்கவில்லை. மியூசிக் சிஸ்டம் மட்டுமே அறையில் வெடித்தது. இந்நிலையில், வெடித்ததற்கான காரணம் விசாரணைக்குப் பிறகு தெரியவரும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *