ரூபா 100 கோடியில் ஹெலிகாப்டர் வாங்கிய முதல் இந்தியர்!

கேரளாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் தனி ஹெலிகாப்டர் ஒன்றை வாங்கி அசத்தி வருகிறார். யார் அந்த தொழிலதிபர் என தெரிந்துகொள்வோம்.

பறக்கும் கார் விற்பனையை இந்தியாவில் தொடங்கலாமா? என பல வாகன உற்பத்தி நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன. மற்றொருபுறம் விண்ணை முட்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இனி சைக்கிள் தான் போலயே’ என நடுத்தரவர்க்கத்தினர் விழிபிதுங்கி நிற்கின்றனர். இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் தனக்கே தனக்கு என தனி ஹெலிகாப்டர் ஒன்றை வாங்கி அசத்தி வருகிறார்.

யார் அந்த தொழிலதிபர் என தெரிந்து கொள்வோம். யார் இந்த கேரள தொழிலதிபர்? RP குழும நிறுவனங்களின் தலைவராக இருப்பவர் ஆர்.ரவி பிள்ளை. 68 வயது தொழிலதிபரான இவர், கேரளா முதல் துபாய் வரை மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுலா மற்றும் ஓட்டல் சம்பந்தமான தொழிலை நடத்தி வருகிறார். சுமார் 250 கோடி ரூபாய் சொத்துக்களுடன், பல்வேறு நிறுவனங்களை வழிநடத்தி வருகிறார்.

இவரது நிறுவனத்தில் சுமார் 70,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆர். ரவி பிள்ளை, இந்தியாவில் முதன் முறையாக ரூ.100 கோடி மதிப்பிலான H 145 ரக சொகுசு ஹெலிகாப்டரை வாங்கியுள்ளார். உலகளவில் 1,500 H 145 ரக ஹெலிகாப்டர்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. இந்த ஹெலிகாப்டரை ரவி பிள்ளை சுற்றுலா பயன்பாட்டிற்காக உபயோகிக்க உள்ளார்.

ரவி பிள்ளைக்கு கேரளாவில் ஏராளமான சொகுசு ஓட்டல்கள் உள்ளன. அங்கு வந்து தங்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஹெலிகாப்டர் மூலமாக அழைத்துச் சென்று, ஊர் சுற்றிக்காட்ட திட்டமிட்டுள்ளார். இதற்காக கோழிக்கோட்டில் உள்ள ராவிஸ் கடவு, கொல்லத்தில் உள்ள ராவிஸ் அஷ்டமுடி மற்றும் திருவனந்தபுரத்தில் தி ராவிஸ் கோவளம் ஆகிய இடங்களில் உள்ள ஹோட்டல்களில் ஆர்பி குழுமம் ஹெலிபேடுகளை அமைத்துள்ளது.

இது குறித்து ராவிஸ் ஹோட்டல்களின் வணிக மேம்பாட்டு துணை மேலாளர் எம்.எஸ்.ஷரத் கூறுகையில், “இந்த ஹெலிகாப்டர் மூலமாக ஒரே நாளில் மலபார், அஷ்டமுடி மற்றும் அரபிக்கடலின் அழகிய காட்சிகள் ஆகியவற்றுடன் ஒரு சொகுசு சுற்றுப்பயணத்தை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளோம்,” எனத் தெரிவித்துள்ளார்.

ஹெலிகாப்டரின் சிறப்பம்சங்கள் என்னென்ன? எச்145 ஹெலிகாப்டர், இந்தியாவின் முதல் ஏர்பஸ் டி3 ஹெலிகாப்டர் மற்றும் ஆசியாவின் முதல் ஐந்து பிளேடட் ஹெலிகாப்டர் ஆகும். அனைத்து நவீன பாதுகாப்பு அம்சங்களையும் கொண்ட இந்த ஹெலிகாப்டரில் பைலட்டுடன் ஏழு பயணிகள் பயணிக்க முடியும்.

இந்த ஹெலிகாப்டர் கடல் மட்டத்திலிருந்து 20,000 அடி உயரத்தில் இருந்தும் தரையிறங்கும் மற்றும் புறப்படும் திறன் கொண்டது. H145 என்பது ஏர்பஸ்ஸின் நான்கு டன்-கிளாஸ் ட்வின்-இன்ஜின் ரோட்டர்கிராஃப்ட் தயாரிப்பு வரம்பில் சமீபத்திய உறுப்பினராகும். பாதுகாப்பு அம்சங்களுக்கு பெயர் பெற்ற இந்த ஹெலிகாப்டர், விபத்து ஏற்பட்டால் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஆற்றல் திறன் மிக்க இருக்கைகளை கொண்டுள்ளது. இதன் மூலம் விபத்து ஏற்பட்டாலும் பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

எரிபொருள் கசிவுக்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. H145 அதி நவீன வயர்லெஸ் தகவல் தொடர்பு சிஸ்டங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

நன்றி:கனிமொழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *