நாகினி டான்ஸ் ஆடி பங்களாதேஷ் வீரர்களை வெறுப்பேற்றிய இலங்கை வீரர்கள்!



இலங்கை அணி வீரர்கள் வெற்றி கொண்டாட்டத்தின்போது நாகினி டான்ஸ் ஆடி பங்களாதேஷ் வீரர்களை வெறுப்பேற்றினர். ஆசியக் கோப்பை தொடரில் நேற்றிரவு நடந்த 5ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. இப்போட்டியில் 184 ரன் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி, 2 விக்கெட் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் திரில் வெற்றியை பெற்றது.

இதன் மூலம் சூப்பர்- சுற்றுக்கு இலங்கை அணி தகுதி பெற்றது. 2 ஆட்டத்திலும் தோற்ற பங்களாதேஷ் வெளியேறியது. இந்தப் போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியவுடன், இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக நாகினி டான்ஸ் (பாம்பு போல் நடனமாடுவது) ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு போட்டியில் இலங்கை அணியை வீழ்த்திய பங்களாதேஷ் அணி வீரர்கள் நாகினி டான்ஸ் ஆடி வெறுப்பேற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

தற்போது அதற்கு பதிலடியாக இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக, நாகினி டான்ஸ் ஆடியதை இலங்கை ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கொண்டாடி வருகின்றனர். முன்னதாக போட்டி தொடங்குவதற்கு முன் இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக, பங்களாதேஷ் அணியில் ஷகிபுல் ஹசனை தவிர உலகத்தர பந்துவீச்சாளர்கள் இல்லை என்று கூறினார். இதற்கு பதிலடி தரும் விதமாக பங்களாதேஷ் அணியின் இயக்குனர் காலித் மஹ்மூத், இலங்கை அணியில் துடுப்பாட்ட வீரர்களும் இல்லை பந்துவீச்சாளர்களும் இல்லை என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *