8 நிமிட உரையால் 78 பில்லியன் டொலர்களை இழந்த கோடீஸ்வரர்கள்!

அமெரிக்காவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய வங்கி தீவிரப்படுத்த இருப்பதாக அதன் தலைவர் எச்சரித்த 8 நிமிட உரையை அடுத்து நாட்டின் பெரும் கோடீஸ்வரர்கள் மொத்தம் 78 பில்லியன் டொலர் இழப்பை எதிர்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க பெடரல் வங்கியின் தலைவராக செயல்பட்டு வருபவர் ஜெரோம் பவல், இவரே நேற்று நடந்த உயர்மட்ட கூட்டத்தில் உரையாற்றியுள்ளார். இதில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பெடரல் வங்கி தீவிரப்படுத்த இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மொத்தம் 8 நிமிடங்கள் நீண்ட அவரது உரையில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெடரல் வங்கி தொடர்ந்து வட்டி விகிதங்களை உயர்த்தும் என்று தனது உரையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

மட்டுமின்றி, பணவீக்கத்திற்கு எதிரான போராட்டம் இன்னும் முடிந்துவிடவில்லை என குறிப்பிட்ட நிலையில், பெடரல் வங்கி விரைவில் அதிக வட்டி விகிதங்களை குறைக்கலாம் என்ற வால் ஸ்ட்ரீட்டின் நம்பிக்கையை அவரது உரை சிதைத்துள்ளது.

இதனையடுத்து Dow Jones, S&P மற்றும் Nasdaq ஆகிய நிறுவனங்களின் பங்குகள் வெள்ளிக்கிழமை 3% வரையில் சரிவை எதிர்கொண்டது. மட்டுமின்றி, ப்ளூம்பெர்க் செய்தி ஊடகத்தின் கூற்றுப்படி, பவலின் பேச்சு, அமெரிக்க பில்லியனர்களின் சொத்தில் 78 பில்லியன் டொலர்கள் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியது என தெரிய வந்துள்ளது.

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் மட்டும் 5.5 பில்லியன் டொலர் இழப்பை எதிர்கொண்டுள்ளார். ஆனால், அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸ் சுமார் 6.8 பில்லியன் டொலர் அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளார் என ப்ளூம்பெர்க் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

உலகின் முதல் இரண்டு கோடீஸ்வரர்கள் மட்டும் மொத்தமாக 12 பில்லியன் டொலர்கள் இழப்பை பவலின் அந்த 8 நிமிட உரையின் போது இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *