அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு!

தமது கடமைகளை சரியாக செய்யாத அரச ஊழியர்கள் உடனடியாக சேவையை விட்டு வெளியேற வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இன்று [ஆகஸ்ட் 21] நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திச் சபையில் உரையாற்றிய அரச தலைவர் நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரையும் ஒன்றிணைப்பதே தனது நோக்கமாகும் என்றார்.

மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகள் குறித்து ஆராய்வதற்கும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கும் பொதுத் துறை அதிகாரிகள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP), ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) ஆகியவற்றின் மாகாணப் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சியில் (ஐ.தே.க.) இணையுமாறு யாரிடமும் கோரிக்கை விடுக்காமல், தாமதிக்காமல் நாட்டைக் கட்டியெழுப்ப தன்னுடன் கைகோர்க்குமாறு தான் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாட்டுக்கு புதிய அரசியல் கருத்துருவும் ஒழுக்கமான அரசியல் பயணமும் தேவை என வலியுறுத்திய ஜனாதிபதி, பழைய ஆட்சி முறை மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அடிமட்டத்தில் உள்ள பொதுத்துறை ஊழியர்கள் தங்கள் கிராம சேவையாளர் பிரிவுகளின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அனுராதபுரம் மதப் பகுதிகள் முக்கிய சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்யப்படும் என்று தெரிவித்த ஜனாதிபதி விக்கிரமசிங்க, இதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவொன்று விரைவில் நியமிக்கப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *