நாமல்,ஜோன்ஸ்டன் குழு உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி?

சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் போது தமது மாவட்டத் தலைவர்களுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுக்கும் யோசனையை ஜனாதிபதியிடம் முன்வைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ஷவுடன் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மஹிந்தானந்த அளுத்கமகே, பவித்ரா வன்னி ஆராச்சி, எஸ்.எம். சந்திரசேன, ரோஹித அபேகுணவர்தன, எஸ்.பி. திஸாநாயக்க, நிமல் லன்சா மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் அமைச்சுப் பதவிகளை பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை இருபத்தெட்டு அமைச்சுக்களுக்கான வர்த்தமானி வெளியிடப்பட்டு செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

சர்வகட்சி அரசாங்கத்தில் முப்பது அமைச்சரவை அமைச்சர் பதவிகளும், முப்பது இராஜாங்க அமைச்சர் பதவிகளும் நியமிக்கப்படவுள்ளதாகவும், அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் வடக்கு கிழக்கு மற்றும் மலையக தமிழ் மக்களுக்கு அதிகூடிய சேவையை வழங்குவதற்காக அந்த மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அமைச்சு பதவிகள் மற்றும் இராஜாங்க அமைச்சர் பதவிகளை வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தேசிய காங்கிரஸ் தலைவர் .எம். ஏ.எல்.எம். அதாவுல்லா மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவ சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *