ஆழ்கடலில் செஸ் விளையாடி அசத்திய நபர்!

செஸ் ஒலிம்பியாட் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சர்வதேச செஸ் உலகின் கண்கள் மாமல்லபுரத்தில் குவிந்துக் கிடக்கிறது.

போட்டிக்கான விழிப்புணர்வுகளை அரசு ஒரு பக்கம் செய்து வந்தாலும், தன்னார்வலர் ஒருவர் செய்த விழிப்புணர்வு அனைவரின் புருவங்களையும் உயர்த்தியுள்ளன.

தண்ணீருக்கு அடியில் செஸ் விளையாடி அசத்தியிருக்கிறார். அதுவும் எங்கே ? நடுக்கடலில்!சென்னை காரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த்.

ஆழ்கடல் இவருக்கு நல்ல சிநேகிதம். Scuba Diving எனச் சொல்லப்படும் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியில் வித்தகர். சர்வ சாதாரணமாக ஆழ்கடலுக்குச் சென்று விளையாடி விட்டு வருபவர்.

இவர், கடல் வள பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

ஏற்கனவே ஆழ்கடலில் திருமணம் நடத்தியது, சைக்கிள் ஓட்டியது, யோகா செய்வது, கிரிக்கெட் விளையாடியது, உடற்பயிற்சி செய்வது, சுதந்திர தினத்தன்று ஆழ்கடலில் தேசியகொடியை பறக்கவிடுவது என பல்வேறு வியப்பூட்டும் நிகழ்வுகளுக்கு அரவிந்த் சொந்தக்காரராக உள்ளார்.

அசாத்திய முயற்சிகள் என்றால் அரவிந்துக்கு கொல்லைப்பிரியம். இதை, அடுத்த தலைமுறைக்கும் கடத்தி வருகிறார் மனிதர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்வமுள்ள சிறுவர் சிறுமியர் மற்றும் இளைஞர்களுக்கு ஆழ்கடல் நீச்சல் பயிற்சி அளித்து வரும் அரவிந்த், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காவல்துறையினருக்கும் ஆஸ்தான ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர்.! ஆழ்கடலில் பிரியம் கொண்டவர், விழிப்புணர்வுக்காக வேறு என்ன செய்வார்.

நேராக செஸ் விளையாடும் நபர்களைக் கூட்டிக்கொண்டு ஆழ்கடலுக்கே சென்றுவிட்டார் மனிதர்.!

எதிர்வரும்  10ஆம் திகதி வரை நடைபெற்ற உள்ள இந்தப் போட்டியின் பெருமைகளைக் கூறும் வகையில், சென்னையில் உள்ள நீலாங்கரை கடலில் 60 அடி ஆழத்திற்கு செஸ் வீரர்களுடன் அரவிந்த் சென்றுவிட்டார்.

ஆழ்கடலுக்குள் முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட் சின்னமான ‘தம்பியின் உடையை அணிந்துகொண்டார் அரவிந்த். நம்ம சென்னை பேனருடன், வீரர்கள் ஆழ்கடலில் செஸ் விளையாடி அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தினர்.

அங்கிருந்தபடியே, செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாடி வரும் வீரர்களுக்கு அக்குழுவினர் வாழ்த்துத் தெரிவித்தனர்.

ஆழ்கடலில் இன்னும் என்னென்னலாம் அரவிந்த் செய்யப்போராறோ ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *