மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

சமூக ஊடகங்கள் மற்றும் பிற வழிகளில் பொய்யான அறிக்கைகள் மூலம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் திகதி ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலை குறித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் 15 ஆம் சரத்தின் கீழ், இவ்வாறான வதந்திகளைப் பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துபவர்கள் அல்லது மக்களைத் திரட்டி, சட்டத்திற்கு எதிரான ஏதேனும் சம்பவங்களை ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரகாலச் சட்டம் தொடர்பான வர்த்தமானியின் பிரகாரம் சட்டங்களை மீறியதாக அடையாளம் காணப்பட்ட நபர்களுக்கு எதிராக அதன் சைபர் குற்றப்பிரிவு ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *