கொழும்பு துறைமுக நகர நிறுவன முதலீடுகளுக்கு சிறப்பு வங்கி கணக்கு வகை அறிமுகம்!

இலங்கையில், சீனாவினால் கட்டமைக்கப்பட்டுள்ள விசேட பொருளாதார வலயத்தில் முதலீட்டாளர்கள் வர்த்தகத்தை மேற்கொள்வதற்காக இலங்கை மத்திய வங்கி கொழும்பு துறைமுக நகர முதலீட்டுக் கணக்கு எனப்படும் சிறப்பு வங்கி கணக்கு வகையொன்றை அங்கீகரித்துள்ளது.

முதலீட்டாளர் கணக்கு தொடர்பில்,  இலங்கையில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

துறைமுக கணக்கின் பயன்பாடுகள்
கொழும்பு துறைமுக நகரத்தில், வெளிநாடுகளில் இருந்து வணிகங்களை நிறுவும் நிறுவனங்கள், இந்த கணக்குகளை பயன்படுத்தப்படலாம். அத்துடன் தமது முதலீடுகளை நிறுவனங்கள், வெளிநாட்டு நாணயங்களிலேயே வைத்திருக்க முடியும்.

இந்த நாணயங்கள் போட் சிட்டியில் வணிகம் தொடர்பான முதலீடுகளுக்கு இது பயன்படுத்தப்பட வேண்டும். இந்தநிலையில் துறைமுக நகருக்குள் தனித்தனியாக, வங்கிகள் அமைக்கப்படுவதற்கான அடித்தளங்கள் தயாராகி வருகின்றன. இதற்கு ஆறு உள்ளூர் வங்கிகள் இதுவரை விருப்பம் தெரிவித்துள்ளன.

இதன்படி, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் அதன் அதிகார எல்லைக்குள் வர்த்தகத்தை மேற்கொள்வதற்காக இந்த வங்கிகளுக்கு உரிமம் வழங்கப்படும் என ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரத்தில் செயற்படும் நிதி நிறுவனங்கள், ஆணையகத்தால் வழங்கப்பட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளினாலேயே நிர்வகிக்கப்படும்.

இலங்கை மத்திய வங்கி இதில் தலையிடமுடியாது. எனினும் மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சகத்துடன் கலந்து ஆலோசித்து வழிகாட்டுதல்கள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், துபாய் நிதி சேவைகள் ஆணையகம், மலேசியா, மொரிஷியஸ் மற்றும் பிற நாடுகளில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்கள் போன்றவற்றை மையமாக கொண்டே, கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *