கலங்கிய இலங்கை தமிழ் சிறுமிகளுக்கு அவுஸ்திரேலிய கேப்டன் ஆறுதல்!

அவுஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், இலங்கை சிறுமிகளுடன் உரையாடிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இலங்கை பொருளாதார சிக்கலில் தவித்து வருகிறது. போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இலங்கை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கும் இலங்கை தமிழ் சிறுமிகள் இருவர், தங்கள் அனுபவித்து வரும் இன்னல்கள் குறித்து கம்மின்ஸிடம் கூறிய வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், ‘நான் இப்போது இலங்கையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறேன். இது அருமையான மக்களை கொண்ட நம்பமுடியாத நாடு என்பதை நான் இங்கு கூற வேண்டும். எனினும் இங்கு ஒவ்வொரு நாளையும் மக்கள் மிக கடினமாக கடக்கின்றார். குழந்தைகளும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் கௌசாலா மற்றும் சதூஜா ஆகியோருடன் உரையாடினேன்’ என கூறுகிறார்.

அதன் பின்னர் அவர்களிடம் கேள்வி கேட்கிறார். அதற்கு அந்த சிறுமிகள் பதிலளிக்கின்றனர். அப்போது அந்த சிறுமிகள் மோசமான நிலைமையில் இலங்கை இருப்பதால் தங்களால் எங்கும் பயணிக்க முடியவில்லை என்று கூறுகின்றனர்.

தங்களது கற்றல் நடவடிக்கை தடைபட்டுள்ளதாகவும், ஒருவேளை உணவுக்கு போராடுவதாக கூறிய அவர்கள், எதிர்காலத்தில் தங்கள் கிராமத்தில் இருந்து ஒரு நல்ல கிரிக்கெட் அணியை உருவாக்குவதும், தங்கள் திறமையை இந்த உலகிற்கு வெளிக்காட்டுவதும் தான் லட்சியம் என தெரிவித்தனர்.

அவற்றை கேட்ட கம்மின்ஸ், பல வகையில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு யுனிசெப் உட்பட நாம் அனைவரும் உதவிட முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *