அரச ஊழியர்களை குறைக்குமாறு ஆலோசனை!

சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைகள் முடிவில்லாத இழுபறி நிலையிலேயே தொடர்வதாக முன்னாள் அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடலொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில், அதிகளவிலான ஊழியர்களைக் கொண்ட அரச சேவை நாட்டுக்கு தேவையற்ற சுமையாக மாறியுள்ளது. இது தொடர்பாக எதிர்காலத்திலும் அரசாங்கம் கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும், ஆட்குறைப்பு செய்ய வேண்டும்.

இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் முடிந்தவரை சிறியதாக இருக்க வேண்டும். தேவையற்ற சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, வளர்ந்த நாடுகளைப் போல் தொழில் முனைவோருக்கு அதிக இடம் கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நம்மிடம் உள்ள நெருக்கடிக்கு குறுகிய கால தீர்வாக சில வெளிநாட்டுக் கடனை பெறுவது என்பது அனைவருக்கும் தெரியும். IMF பேச்சுவார்த்தையில் இருந்து அரசாங்கம் அதையே எதிர்பார்க்கிறது. ஆனால் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான நீண்ட கால வேலை திட்டத்தை அரசாங்கம் முன்வைக்கும் வரை யாரும் எங்களுக்கு கடன் வழங்க மாட்டார்கள்.

எனவே, நீண்டகால தீர்வுகளை நாம் காண வேண்டும். எனவே, 4 அம்சங்களில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இப்போதும் கூற வேண்டும். அதன்படி, வெளிநாட்டு வருமானத்தை அதிகரிப்பது எப்படி?, வெளிநாட்டுச் செலவுகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?, உள்ளூர் வருமானத்தை அதிகரிப்பது எப்படி?, உள்ளூர் செலவுகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது? என்பவையே அந்த நான்கு அம்சங்கள்.

ஆனால், இந்த அரசாங்கம் சாக்குப்போக்கு சொல்கிறதே தவிர, இந்த விஷயங்களை ஆழமாக விவாதிப்பதாக நான் பார்க்கவில்லை. தற்போதைய பொருளாதார நெருக்கடியை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி பல்வேறு அரசாங்கங்கள் காலங்காலமாக செய்த தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கான பொன்னான வாய்ப்பு அரசாங்கத்திற்குக் கிடைத்துள்ளது.

வழக்கத்தை விட இந்த நேரத்தில் கடுமையான முடிவுகளுக்கு மக்கள் மற்றும் நாடாளுமன்றத்தின் ஆதரவைப் பெறுவது எளிது. ஆனால் அதற்குத் தேவையான தொலைநோக்கு பார்வையும் அர்ப்பணிப்பும் அரசாங்கத்திற்கு உள்ளதா என்று எனக்கு தெரியவில்லை.

நாட்டுக்கும் சமூகத்துக்கும் பயன் சேர்க்காத பதவிகள் அனைத்தும் குறைக்கப்பட வேண்டும். அதற்கான தொலைநோக்கு பார்வையும் அர்ப்பணிப்பும் அரசாங்கத்திற்கு உள்ளதா என்பதுதான் மீண்டும் கேட்க வேண்டிய கேள்வி. 1000க்கும் மேற்பட்ட அரசாங்கத்திற்கு சொந்தமான வணிகங்கள், அதிகாரிகள், துறைகள் மற்றும் பிற நிறுவனங்கள் உள்ளன.

இவற்றில் பல நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு எந்தவிதமான வருமானத்தையும் வழங்குவதில்லை, மேலும் இந்த நிறுவனங்களும் அதன் ஊழியர்களும் நாட்டின் செயல்திறனுக்கு பெரும் தடையாக உள்ளனர்.

அடுத்த சில மாதங்கள் இன்னும் கடினமாக இருக்கும் என்று அறிவிப்புகளை வெளியிடுவதற்குப் பதிலாக, அரசாங்கம் தனது வேலைத்திட்டத்தை நாட்டிற்கும் நமது கடன்காரர்களுக்கும் முன்வைக்க வேண்டும். அப்படி ஒரு திட்டத்தை முன்வைக்கும் வரை எங்களை யாரும் காப்பாற்ற வர மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *