பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

உலக அளவில் கொரோனா வைரசால் 6.50 கோடிக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். 15 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 4.50 கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட முதல் 5 இடங்களில் உள்ளன.

இங்கிலாந்தில் 16.50 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் இங்கிலாந்து 7-வது இடத்தில் உள்ளது.

இதற்கிடையே, பைசர்-பயான்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மருந்துக்கு இங்கிலாந்து அரசு சமீபத்தில் அங்கீகாரம் அளித்துள்ளது.

இந்நிலையில், பைசர் மற்றும் பயான்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தற்போது இங்கிலாந்தில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த மருந்து விரைவில் நாடு முழுவதும் பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது. தன்னார்வலர்களிடம் நடத்திய பரிசோதனையில் இவை 95 சதவீதம் வெற்றி அளித்துள்ளது.

இதுதொடர்பாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், தடுப்பூசியை விநியோகிப்பதில் மகத்தான தளவாட சவால்கள் இருக்கும். அனைத்து மக்களையும் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க சில மாதங்கள் ஆகும் என தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் இதுவரை 40 மில்லியன் டோஸ் ஆர்டருக்கு உத்தரவிட்டுள்ளது, இதன்மூலம் 20 மில்லியன் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்க முடியும்.

உலகம் முழுவதும் உள்ள மக்களை சென்றடைவதற்கு பலவித தடுப்பூசிகள் தேவைப்படும் என்று நிபுணர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

பைசர் மற்றும் பயான்டெக் தயாரித்துள்ள இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி 10 மாதங்களில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *