2050 -இல் உலகை ஆளப்போகும் 5 சூப்பர் பவர் நாடுகள்!

இன்றைய திகதிக்கு உலகின் மிகப் பெரிய பொருளாதார பலத்துடன் கூடிய சூப்பர் பவர் நாடுகளாகத் திகழ்பவை அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள்தான். ஆனால் இன்று வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளாக இருக்கும் இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள், 2050-ல் உலகை ஆளக்கூடிய அளவுக்கு சூப்பர் பவர் நாடுகளாக உருவெடுத்து விடும் எனச் சர்வதேச அளவிலான பொருளாதார மதிப்பீட்டு நிறுவனங்கள் கணித்துள்ளது மேற்குலக நாடுகளைத் திகைக்க வைத்துள்ளது.

ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து வெளியேறியது, கொரோனா வைரஸால் ஏற்பட்ட தாக்கம் மற்றும் இறக்குமதி மீதான வரி உயர்வு போன்றவை சர்வதேச அளவிலான பொருளாதார பின்னடைவுக்கு காரணமாக அமைந்த போதிலும், அடுத்த சில தசாப்தங்களில் உலகப் பொருளாதாரம் விரைவான வேகத்தில் வளரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் 2050 ஆம் ஆண்டில், உலக மக்கள்தொகை 26% என்ற சாதாரண அளவில் மட்டுமே அதிகரிக்கலாம் என ஐ.நா கணித்துள்ள போதிலும், உலகச் சந்தையானது அதன் தற்போதைய அளவை இரு மடங்காகி விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த வளர்ச்சி, ஏராளமான மாற்றங்களைக் கொண்டு வரும். இதனால், எதிர்காலம் எவ்வாறு மாறும் என்பதைத் துல்லியமாகக் கணிப்பது சவாலானதாக இருந்தாலும், “இன்றைய வளரும் சந்தைகளாகத் திகழக்கூடிய நாடுகள், நாளைய பொருளாதார வல்லரசு நாடுகளாக உருவெடுக்கும்” எனப் பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்கிறார.

‘2050 ல் உலகம்’ என்ற தலைப்பில், உலகின் முன்னணி ஆலோசனை சேவை நிறுவனமான PwC வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்னும் 28 ஆண்டுகளில், இன்றைய நிலையில் வளரும் பொருளாதார நாடுகளாக இருக்கும் 7 நாடுகளில் 6 நாடுகள், அமெரிக்காவை விஞ்சி விடும் என்றும், அமெரிக்காவின் இடம் 2வது இடத்திலிருந்து 3வது இடத்துக்குத் தள்ளப்பட்டு விடும் என்றும், ஜப்பான் 4வது இடத்திலிருந்து 8வது இடத்திற்குச் சரிந்துவிடும் என்றும், ஜெர்மனி 5வது இடத்திலிருந்து 9வது இடத்திற்குப் போய்விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ஒப்பீட்டளவில் சிறிய பொருளாதார நாடுகளாகத் திகழும் வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் நைஜீரியா போன்றவை கூட அடுத்த மூன்று தசாப்தங்களில் அந்தந்த தரவரிசையில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் காணும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

இந்த நிலையில் அதிக வளர்ச்சி திறன் கொண்ட 5 நாடுகளில் வசிப்பவர்கள், அவர்களது நாடுகளில் ஏற்பட்ட வேகமான மாற்றங்களை அவர்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள், அங்கு வாழ்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன மற்றும் அவர்களின் நாடுகள் தரவரிசையில் உயரும்போது அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவை குறித்து என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.

சீனா

PPP (Purchasing power parity) எனப்படும் வாங்கும் சக்தி சமநிலை மூலம் அளவிடப்படும் ஜிடிபி (GDP) அடிப்படையில், சீனா ஏற்கனவே உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. ஆசியாவின் மிகப் பெரிய பொருளாதார நாடாகத் திகழும் சீனா, கடந்த பத்தாண்டுகளில் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஆனால் இது, அதன் எதிர்கால பொருளாதார வளர்ச்சி நிலையின் மிகச் சிறிய வெளிப்பாடு மட்டுமே என்று பொருளாதார வல்லுநர்கள் உறுதிப்படக் கூறுகிறார்கள்.

பெரிய, பெரிய பொருளாதார மாற்றங்களெல்லாம் அந்த நாட்டில் வசிப்பவர்களின் கண்களுக்கு முன்பாகவே நடந்தேறுகின்றன. “கடந்த சில ஆண்டுகளாகவே எனது வீடு என்பது நகரத்தின் சொர்க்கமாகத் திகழும் ஷாப்பிங் மால்கள், பூங்காக்கள், உணவகங்கள் மற்றும் பிஸியான போக்குவரத்து போன்றவற்றைக் கொண்டிருக்கும் சுஜோவின் தொழிற் பூங்காதான். ஆனால் நான் 15 ஆண்டுகளுக்கு முன்பு, முதன்முதலில் சீனாவுக்கு வந்தபோது, இந்தப் பகுதி முழுவதும் சதுப்புநிலமாகவும், விவசாய நிலமாகவும் இருந்தது” என்று கூறுகிறார் 1 நிமிட சீனப் புத்தகங்களை எழுதிய ரோவன் கோல் என்பவர். ஒட்டு மொத்த சீனாவும் மாறி வருகிற நிலையில், இதுபோன்ற கதைகள் அந்த நாட்டின் மூலைக்கு ஒன்றாகக் கொட்டிக்கிடக்கின்றன.

இந்த மாற்றங்கள், புதிய தொழில்முனைவோர்களை ஈர்க்கின்றன என்றால், இன்னொருபுறம் தடுக்க முடியாத இந்த வளர்ச்சியைப் பயன்படுத்தி முன்னேற துடிப்பவர்கள், அதற்கேற்ற நிதி உதவி வாய்ப்புகளை எதிர்பார்க்கின்றனர். இத்தகைய சூழலில், சீனாவின் மிகப்பெரிய நகரமான ஷாங்காயில், ஏராளமான புதிய தொழில்முனைவோர்களின் புதிய தொழில் முயற்சிகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

“ஷாங்காய் நகரம், தொழில் முனைவோர் மற்றும் பிசினஸில் முன்னேற துடிப்பவர்கள் அதிகமாக கொண்ட நகரம்” என்கிறார் ஷாங்காயில் செயல்படும் ஒரு வியூக ஆலோசனை நிறுவனத்தைத் தொடங்கியவரான அமெரிக்காவின் ஜான். “இறைச்சி, மீன் போன்றவற்றை விற்கும் சந்தைகளில் மோட்டார் சைக்கிள்களில் ஹாரன் அடித்துக்கொண்டு அதிகாலையிலேயே வரும் வியாபாரிகள் முதல், அலுவலகத்திலிருந்து இரவு நேரத்தில் வீடு திரும்புபவர்கள் வரை, இங்கு வரும் அனைவருமே முன்னேற துடிக்கும் எண்ணத்துடன் வருபவர்களே.” ஆனால் நியூயார்க் நகரத்தைப் போலல்லாமல், இங்கு வசிப்பவர்கள் “எப்போதும் அறிவுரைகளைக் கேட்கவும் நல்ல ஆலோசனைகளை வழங்கவும் தயாராகவே உள்ளனர்” என்கிறார் ஜான்.

இருப்பினும், இங்கு வேலை செய்வதற்கும் வாழ்வதற்கும், வெளிநாட்டவர்கள் மாண்டரின் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும். “மாண்டரின் மொழி தெரியாவிட்டால், இங்கு எந்த வேலையும் நடக்காது. அதேபோன்று மற்றும் சமூக மற்றும் கலாச்சார வட்டாரங்களில் உங்கள் விருப்பங்கள் மிகவும் குறைவாகவே இருக்கும். அதுமட்டுமல்லாமல், இதுபோன்ற இடங்களில் மாண்டரின் மொழி தெரியாவதர்களுக்கு அனுமதி மறுக்கப்படவும் வாய்ப்புள்ளது” என்கிறார் ஜான் பாபன்.

இந்தியா

உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியா, 2050 ல் மிகப் பெரிய வளர்ச்சியைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாகச் சொல்வதானால், இது ஆண்டுக்கு ஜிடிபி-யில் சராசரியாக 5% வளர்ச்சியைக் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. PwC அறிக்கையின் படி, உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாகத் திகழும் இந்தியா, 2050 ஆம் ஆண்டு வாக்கில் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் என்று கணித்துள்ளது. மேலும் இது, உலகின் மொத்த ஜிடிபி-யில் 15% ஆக இருக்கும். அந்த வளர்ச்சியின் சாதகமான விளைவுகள் ஏற்கனவே இந்தியர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கி விட்டன.

“20 ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 21 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, இந்தியா என் கண்களுக்கு முன்பாக மாறுவதை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் பொருளாதார வளர்ச்சியானது இந்திய மக்களிடையேயும் சமூகத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாகச் சொல்வதானால், அவர்களின் அணுகுமுறைகள், நடை, உடை மற்றும் பேச்சுகளிலும் நகர நாகரிக வாழ்க்கை முறை வெளிப்படும் அளவுக்குப் பல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது” என்கிறார் இந்தியாவின் பிரபல டிராவல் செயலியின் உரிமையாளர் ஒருவர்.

உதாரணமாக, கடந்த 15 ஆண்டுகளில் தொலைக்காட்சிகள், மொபைல் போன்கள் மற்றும் பல்வேறு வகையான கார் பிராண்டுகள் போன்றவை மிகப்பெரிய அளவில் மேம்படுத்தப்பட்ட தரத்தை எட்டியுள்ளன. மேலும் விமானப் பயணமும் மக்களால் அதிகளவில் அணுகக்கூடியதாக மாறி உள்ளது. மேலும் வீடுகளும் அதிக ஆடம்பரமான மற்றும் பணக்காரத் தோற்றம் கொண்டவையாக மாறி உள்ளன.

அதே சமயம், இந்த முன்னேற்றங்கள் எல்லாம், சவால்களைச் சந்திக்காமல் வரவில்லை. அதிக கார்கள் வீதிகளில் வலம் வந்தாலும், உள்கட்டமைப்புக்கான செலவினங்கள் போதிய அளவில் காணப்படவில்லை. மாசு கட்டுப்பாடு போன்ற விஷயங்களில் போதிய ஒழுங்குமுறைகளைக் கண்டிப்பாக அமல்படுத்தாததன் காரணமாக, டெல்லி போன்ற நகர்ப்புற மையங்களில் காற்று மாசுபாடு அளவு அதிகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ள.

பணவீக்க அபாயம்: இந்தியாவில் உயரும் எரிபொருள் தேவை – என்ன நடக்கிறது?
பொருளாதர வளர்ச்சியானது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் எப்போதுமே சமத்துவமாக சென்றடைவதில்லை. “சமூகத்தின் சில பிரிவினர் இன்னும் மிக மோசமான வாழ்க்கைத் தரத்தையே கொண்டிருக்கின்றனர். நகரங்களில் வளர்ச்சியின் அடையாளமாகத் திகழும் விண்ணை முட்டும் உயரமான கட்டிடங்களையொட்டியே சேரிகளைக் காணலாம்” என்கிறார் ஜிண்டால்.

இன்னொருபுறம் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் துன்புறுத்தல் போன்ற சம்பவங்களும் அதிகரித்து வருவதைப் பார்க்கும்போது, இங்குள்ள பெண்கள் மீதான அணுகுமுறை ஏமாற்றமடையச் செய்வதாக உள்ளது. “ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது, அந்த நாடு தனது குடிமக்களின் உரிமைகளை எவ்வளவு மதிக்கிறது என்பதன் மூலம் அளவிடப்படுகிறது. எனவே இந்த விஷயத்தில், நாங்கள் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியும் என்ற நிலை ஏற்படும் வரை, எந்த ஒரு பொருளாதார வளர்ச்சியும் நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதாகவோ அல்லது பயனுள்ளதாகவோ அமையாது” ” என்கிறார் பெங்களூரில் வசிக்கும் சாந்தி குல்கர்னி.

பிரேசில்

தென் அமெரிக்க நாடான பிரேசில், 2050 ஆம் ஆண்டில் ஜப்பான், ஜெர்மனி மற்றும் ரஷ்யாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும். ஏராளமான இயற்கை வளங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள பிரேசிலின் பொருளாதார, கடந்த சில தசாப்தங்களில் மிக வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஆனால் சமீப ஆண்டுகளாக அரசாங்க மட்டத்தில் காணப்படும் ஊழல் மற்றும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான போராட்டம் போன்றவை காரணமாக, பிரேசில் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது.

“2000 களின் பிற்பகுதியிலும் 2010 களின் முற்பகுதியிலும் பொருளாதார வளர்ச்சியினால் ஏற்பட்ட அனைத்து சந்தோஷங்களையும் நான் கண்டேன். பிரேசிலில் ஒரு புதிய நடுத்தர வர்க்கம் உருவானது. மேலும், கடினமாகப் பாடுபட்டதினால் கிடைத்த புதிய நற்பெயர், நாடு முழுவதும் பிரேசில் மக்களைப் பெருமிதம் கொள்ள வைத்தது. ஆனால் அதே நேரத்தில், ரியோ டி ஜெனிரோ மற்றும் சாவ் பாலோ போன்ற பெரிய நகரங்கள் சாமானியர்களுக்கு கட்டுப்படியாகாத நகரங்களாக வளர்ந்தன. இன்னும் சொல்லப்போனால் பிரேசில், தேவையானதை விட வேகமாக வளர்ந்து வருவதைப் போன்று எண்ண வைக்கக்கூடிய ஒரு கட்டத்திற்கு வந்தது. ஆனால், அந்த வளர்ச்சியைத் தொடரக்கூடிய அளவுக்கு, போதுமான வர்த்தக போக்குவரத்து வசதிகள், ரயில் பாதைகள், சாலைகள் மற்றும் துறைமுகங்கள் பிரேசிலிடம் இல்லை” என்கிறார் பிரேசிலில் பிறந்த பெர்சோட் என்பவர்.

சில சவால்கள் பிரேசிலை, தொழில்நுட்பத்தை விரைவாக ஏற்றுக்கொள்வதற்கு உதவியது. “பல வளரும் நாடுகளில், அதிக வளர்ச்சி என்பது பணவீக்கத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது. பணவீக்கத்திற்கு எதிராகப் பண மதிப்பைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அதிகச் செலவின் விளைவாக, பிரேசில் நிதிச் சேவை தொழில்நுட்பத்தை வழங்கும் ஒரு ஃபின்டெக் ( Fintech)முன்னோடியாக மாறியது. ஸ்மார்ட்போன்கள் வருகைக்கு முன்பே, பேபால் மற்றும் வென்மோ போன்றவை வங்கி ஏடிஎம் மூலமாகப் பிரேசிலில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தினசரி பயன்பாட்டு வழக்கமாக உள்ளன” என்கிறார் முன்னர் சாவ் பாலோவில் வாழ்ந்த அன்னாலிசா.

2016 ல் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை பிரேசிலைக் கடுமையாகப் பாதித்தது. ஆனால் அதன் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சியை நோக்கிச் சென்று, “உருவாக்கு அல்லது உடை” என்ற நிலையை பிரேசில் எட்டியது. பிரேசில் சுரங்கம், விவசாயம் மற்றும் உற்பத்தியில் உலகின் ஜாம்பவான்களில் ஒன்றாகத் திகழ்வதோடு, சேவைத் துறையிலும் வலுவான மற்றும் வேகமான வளர்ச்சியை எட்டி, சுற்றுலா முதலீட்டில் வளர்ச்சியைக் கண்டு வருகிறது.

நாட்டின் பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல், புதியவர்களை, குறிப்பாக அதன் மொழியைக் கற்றுக்கொண்டால், இந்த நாடு அவர்களை அரவணைத்துக் கொள்கிறது. பிரேசில் மிகவும் நட்பு நாடு, வெளிநாட்டினரை வரவேற்கும் நாடு. பிரேசிலிய மக்கள் பெரும்பாலும் தனித்து வாழ விரும்பாதவர்கள். ஒரு வெளிநாட்டவர் தங்கள் கலாச்சாரம் மற்றும் மொழியில் ஆர்வம் காட்டுவதை அவர்கள் விரும்புகிறார்கள். “போர்த்துகீசிய மொழியைக் கற்றுக்கொண்டால், நீங்கள் உங்கள் வீட்டில் இருப்பது போன்று உணர வைக்கும்” என்கிறார் இங்கு செட்டிலான வெளிநாட்டைச் சேர்ந்த ப்ராப்பியர் என்பவர்.

மெக்சிகோ

2050 ஆம் ஆண்டில், மெக்சிகோ உலகின் ஏழாவது பெரிய பொருளாதார நாடாக மாற உள்ளது. தரவரிசையில் நான்காவது நிலைக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்தித் துறை மற்றும் ஏற்றுமதியில் அதிக கவனம் செலுத்தியதே, சமீபத்திய ஆண்டுகளில் அதன் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

“கடந்த 10 ஆண்டுகளாக, மெக்சிகோவின் பொருளாதாரம் வளர்ந்துள்ளது. வாய்ப்புகளைக் கண்டறிந்து கடினமாக உழைத்தால், மெக்சிகோ இன்னும் பிரகாசிக்கும். அதிக விலைவாசி உள்ள நாடுகளுடன் ஒப்பிடும்போது அதன் பண மதிப்பு இன்னும் நீண்ட காலத்துக்குக் கூடுதலாகவே இருக்கும்” என்கிறார் பயண பதிவர் பெடரிகோ என்பவர்.

அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பாவில் இருப்பதைக் காட்டிலும் இங்குச் சுகாதாரம் மற்றும் போக்குவரத்துக்கான செலவு மிகவும் மலிவு. “நான் மெக்ஸிகோ நகரத்திலிருந்தேன். நகரத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்ல உபேர் கால் டேக்ஸிக்கு சுமார் 4 டாலர் முதல் 10 டாலர்தான் [தோராயமாக £3 முதல் £8] ஆகிறது” என்கிறார் அமெரிக்கரான ஹாஸ்க்

மேலும், “மெக்சிகோவின் ஒவ்வொரு பகுதியும் காலநிலை மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் மிகவும் வேறுபட்டது. எனவே, இங்குப் புதிதாக வரும் வெளிநாட்டினர் குறிப்பிட்ட இடத்தில் செட்டிலாகுவதற்கு முன்னர், அவர்களது ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கேற்ற வெவ்வேறு நகரங்களுக்குச் செல்லுமாறு இந்த நாட்டினர் அறிவுறுத்துகிறார்கள். அதாவது, உள்ளூர் மக்களின் வரவேற்பு மிகவும் எளிதாக அமைந்து விடுகிறது. அதிலும் குறிப்பாக ஸ்பானிஷ் மொழியைக் கற்றுக்கொண்டால், அது இன்னும் கூடுதலான மகிழ்ச்சியைத் தரும். புதிய இடங்களுக்குச் செல்கையில், பயண வழித் தொடர்பான விஷயங்களில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால்,

இங்குள்ள மக்கள் தங்கள் மொழியில் சொல்லி உதவுவார்கள்” என்கிறார் ஹாஸ்கின்ஸ்.

நைஜீரியா

ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றான நைஜீரியா, 2050 ஆம் ஆண்டிற்குள், ஆண்டுக்கு சராசரியாக 4.2% என்ற வளர்ச்சியை எட்டி முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கம் ஒருபுறம் ஊழலுடன் போராடிக்கொண்டிருந்தாலும், மக்கள் தொழில் முனைவோர் மனப்பான்மையைக் கொண்டுள்ளனர். அதுதான் இந்த நாட்டை முன்னோக்கித் தள்ளுகிறது. Global Entrepreneurship Monitor தரவுகளின்படி, நைஜீரிய மக்ககளில் 30% க்கும் அதிகமானோர் புதிய தொழில்முனைவோர் அல்லது புதிய பிசினஸ் உரிமையாளராகத் திகழ்கின்றனர். இது உலகின் மிக அதிகமான விகிதமாகும்.

லாகோஸில் வசிக்கும் ஆக்சிலரேட் டிவியின் தலைமை நிர்வாக அதிகாரியான நைஜீரிய நாட்டைச் சேர்ந்த கோலெட் ஒடுஷெசோ, “நைஜீரியர்கள் கடின உழைப்பாளிகள். ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வது அவர்களுக்கு இயற்கையாகவே வருகிறது, அதாவது எப்போதும் ஏதோ நடந்து கொண்டே இருக்கிறது” என்கிறார்.

குறைந்தபட்ச பொது போக்குவரத்து போன்ற நாட்டின் சவால்கள் கூட வணிக வாய்ப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளன. “நைஜீரியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் okadas என்ற மோட்டார்பைக் போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு போன்ற விஷயங்களில் உபேர் சேவையைப் போன்றே உள்ளது.

இந்த நாட்டு மக்களிடையே தேசத்தின் எதிர்காலம் குறித்து நேர்மறையான எண்ணமே காணப்படுகிறது. ஆனால் அரசாங்க ஊழல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் குறித்து எச்சரிக்கையாக உள்ளனர். நாட்டின் இயற்கை வளங்கள் மற்றும் மூலப்பொருட்கள் பறிபோய் விடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளனர். “நாம் எந்த நாட்டிலிருந்து பணத்தைப் பெறுகிறோம், நமது உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு யாரை அனுமதிக்கிறோம் மற்றும் அதனுடன் என்ன சரக்குகள் இணைக்கப்பட்டுள்ளன என்பதில் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும்” என்கிறார் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சிசோபா. இவர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்த நாட்டுக்கு வரும் புதியவர்கள் லாகோஸ் அல்லது அபுஜாவில் குடியேற வேண்டும். இரண்டு பெரிய நகரங்களும் நல்ல பள்ளிகள் மற்றும் சிறந்த இரவு வாழ்க்கை மற்றும் உணவு வகைகளைக் கொண்டுள்ளன. எந்த பெரிய நகரத்தையும் போலவே, ஸ்மார்ட் தெருக்களும் முக்கியம். ” இங்கு வசிக்கும் ஒருவரை நம்புவதன் மூலமே, இங்கே வாழப்பழகுவதற்கான சிறந்த வழி. வெளிநாட்டவர்களை அடையாளம் காண்பது மிகவும் எளிதானது. அவர்களை சமூக விரோதிகளால் எளிதில் ஏமாற்றப்பட வாய்ப்புள்ளது. எனவே முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சுற்றுப்புறங்கள் மற்றும் அதில் உள்ளவர்கள் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்” ” என்கிறார் அன்யோஹா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *