வர்த்தகத்தை நடத்த முடியாது பணத்தை அச்சிட இயந்திரங்களை வழங்க வேண்டுகோள்!

அடுத்த ஒரு மாத காலத்தில் தமது வர்த்தகங்கள் அனைத்தும் வீழ்ச்சியடையும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை ஐக்கிய தேசிய வர்த்தகர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் தொடர்ந்தும் தமது வர்த்தகத்தை கொண்டு நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் ஒன்றியம் கூறியுள்ளது.

சேமித்து வைத்திருந்த பணத்திலேயே இதுவரை வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன எனவும் தொடர்ந்தும் அப்படி செய்ய முடியாத கஷ்டமான நிலைமைக்கு வந்துள்ளதாகவும் இலங்கை ஐக்கிய தேசிய வர்த்தகர்கள் ஒன்றியத்தின் தலைவி டானியா அபயசுந்தர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

பணத்தை அச்சிட இயந்திரங்களை வழங்குங்கள்

அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்க பணத்தை அச்சிடப் போவதாக பிரதமர் கூறியுள்ளார். அப்போது தனியார் துறை ஊழியர்களின் நிலைமை என்னவாகும்.

அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்க பணம் அச்சிடப்படுமாயின், பணத்தை அச்சிட எங்களுக்கு இயந்திரங்களை வழங்குங்கள். இலங்கை ஐக்கிய தேசிய வர்த்தகர்கள் ஒன்றியம் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களை பிரதிநிதித்துப்படுத்துகிறது.

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகம் என்பது நாட்டு பொருளாதாரத்தின் முதுகெலும்பு. அவற்றை பாதுகாக்க எந்த அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை.

அனைவரும் தாம் கரைசேர எம்மை பயன்படுத்திக்கொண்டனர். நாங்கள் பிச்சை எடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். நாட்டு பொருளாதாரத்தின் பிரதான முதுகெலும்பான நாங்கள் நடுத் தெருவுக்கு வந்துள்ளோம்.

நாட்டுக்கு என்ன செய்தோம் என்பதை மனசாட்சியை தட்டி கேளுங்கள் என்று நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 பேரிடமும் கோருகிறோம்.

அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்க பணத்தை அச்சிடப் போவதாக பிரதமர் கூறுகிறார். நாங்கள் எமது ஊழியர்களுக்கு சம்பளத்தை கொடுக்கவும் வங்கி கடனை செலுத்த முடியாமலும் சிரமப்படுகிறோம்.

எமக்காக அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டங்களும் இல்லை. சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்கள பாதுகாக்க வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்குமாறு பிரதமர் தலைமையிலான அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம் எனவும் டானியா அபயசுந்தர தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *