30 ஆண்டுகளுக்குப் பின் பேரறிவாளன் விடுதலை!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.

பேரறிவாளன் தொடா்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய, மாநில அரசுகள் எழுத்துபூா்வமான வாதங்களைத் தாக்கல் செய்திருந்தன. அவரை விடுவிக்கும் அதிகாரம் யாருக்கு என்பது தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் சாா்பில் வாதங்களும் நடைபெற்றன.

முன்னதாக, இந்த வழக்கு கடந்த 11 ஆம் திகதி விசாரணைக்கு வந்தபோது, தீா்ப்பை திகதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி எல். நாகேஸ்வர ராவ் தலைமையில் நீதிபதிகள் பி.ஆர். கவாய், ஏ.எஸ். போபண்ணா அடங்கிய அமா்வு இன்று காலை 10.45 மணியளவில் தீர்ப்பை வாசித்தனர்.

முழுமையாக ஆராய்ந்த பிறகே தமிழக அமைச்சரவை தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. ஆளுநர் முடிவெடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது சட்டப்படி தவறு. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தை மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப விருப்பமில்லை.

161 வது பிரிவில் முடிவெடுக்க ஆளுநர் தாமதப்படுத்தியதால், அரசியல் சாசன சட்டத்தின் 142 ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றமே பேரறிவாளனை விடுதலை செய்வதாக தீர்ப்பு வழங்கினர்.

30 ஆண்டு காலம் சிறையிலிருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு வரலாற்று தீர்ப்பை வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *